தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூக்கட்டி தமிழ் பழகிய சீன நாட்டவர் சியே துங்

2 mins read
5d3d4dff-656d-4050-b293-3ae9a732fba0
ஒம்சிவசக்தி கடையில் பூ கட்டும் சீன நாட்டவரான திரு சியே துங். - படம்: சையத்

லிட்டில் இந்தியா, பஃப்ளோ சாலை நெடுகிலும் வண்ணம் சேர்க்கும் பூக்கடைகளில் ஒன்றான ஓம் சிவசக்தி கடையில் காண்போரை வியக்க வைக்கிறார் 43 வயது திரு சியே துங்.

தமிழரின் பாரம்பரியமான மாலைகளையும் சரங்களையும் சரசரவென்று கட்டும் அவர், 17 ஆண்டுகளாக அக்கடையில் பூ கட்டி வருகிறார்.

சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்தபோது திரு சியே துங்கிற்கு பூக்கடை உரிமையாளர் பூ கட்ட வாய்ப்பளித்தார்.

சிங்கப்பூருக்கு வந்தபோது அவருக்கு மாண்டரின் மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அதனால், சியே துங்கிற்கு லிட்டில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது தொடக்கத்தில் ஒரு சவாலாக இருந்தது.

வாடிக்கையாளர்களுடன் பேசி பேசி, தற்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசுகிறார்.

ஒவ்வொரு பூ வகையையும் விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ள சியே துங், தன் மீது நம்பிக்கை வைத்து முதலாளித் தன்னை வேலையில் தன்னை சேர்த்துக்கொண்டதை பாக்கியமாகக் கருதுகிறார்.

கோவில் மாலைகள் முதல் திருமண மாலைகள்வரை எல்லாவிதமான மாலைகளையும் கட்டும் சியே துங் எந்தெந்த தேவைக்கு எத்தகைய மாலைகள் கட்ட வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்.

கடையில் சேரும் புதிய பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் சியே துங், அவர்களிடம் தமிழிலேயே உரையாடுகிறார்.

ஓம் சிவசக்தி கடையில் ஈராண்டுகளாகப் பணிபுரியும் 26 வயது அரவிந்தனுக்கு பூக்கட்டச் சொல்லித் தந்ததுடன் புதிய நாட்டில் வாழவும் சியே துங் கற்றுத்தந்துள்ளார்.

“சீனர் பூக்கட்டுவதை பார்த்தபோது முதலில் ஆச்சரியமாக இருந்தது. அவருடன் மணிக்கணக்காகத் தமிழில் பேசலாம்,” என்றார் அரவிந்தன்.

தமிழ்ப் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது என்று மொழித் திறனை வளர்த்துக்கொண்ட சியே துங் கோவில்களுக்குச் செல்வதும் வழக்கம்.

நடிகர் கமலஹாசனை அவருக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்ப் படங்களை சீன மொழி விளக்கத்துடன் பார்த்து வந்த சியே துங், இப்போது சீன மொழி விளக்கமின்றியும் புரிந்துகொள்கிறார்.

“தொடக்கத்தில் வியாபாரம் சிறப்பாக இருந்தது. இப்போது தேக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் பூக்கடைகள் வந்துவிட்டன. அதனால் போட்டி மிகவும் அதிகம்,” என்றார் சியே துங்.

குறிப்புச் சொற்கள்