வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட 250 பேர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) மாலை ஜூரோங் லேக் தோட்டத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டனர்.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுமம், ஹுவாங் குலமரபுச் சங்கம் இரண்டும் இணைந்து இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
மனிதவள அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் சிறப்பு விருந்தினராக வருகையளித்து சீன மொழியில் உரையாற்றினார். வந்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் அவர் ஆரஞ்சுப் பழங்களை அளித்து அவர்களுடன் முக்கியமான ‘லோ ஹே’ சடங்கிலும் பங்கேற்றார்.
வேலைக்கு வெளியே நண்பர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்று தெரிவித்தார் வெளிநாட்டு ஊழியர் அந்தோணி ஸ்டாலின் ராஜா, 28.
“இந்த ஆண்டு முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெற்றால் நன்றாக இருக்கும், என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார் வெளிநாட்டு ஊழியர் வெங்கடாச்சலம் ரவிச்சந்திரன், 44. இருப்பினும், சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று தமிழ் முரசிடம் அவர் தெரிவித்தார்.
“குறிப்பாக ‘லோ ஹே’ சடங்கு என்னை மிகவும் ஈர்த்தது,” என்றார் அவர்.
‘இன்டராக்ட் கிளப் ஆஃப் செம்பவாங்’ (Interact Club of Sembawang), நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலிருந்து ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே நடந்த குழு விளையாட்டுகள், கலந்துரையாடல்களை வழிநடத்த உதவினார்கள்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்புடன் கூடிய நிகழ்ச்சிகள் எப்போதும் உணர்வுபூர்வமானவை என்று தெரிவித்தார் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தொண்டூழியர் அனுப்பிரியா பன்னீர்செல்வம், 40.
“குடும்பங்களை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வந்துள்ளார்கள். இது போன்ற பண்டிகைகளை அவர்களுடன் கொண்டாடுவதால் அவர்கள் தனித்து இருப்பது போல் இருக்காது,” என்றார் அவர்.
ஜூரோங் லேக் தோட்டத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு அப்பால், சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கடந்த பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில் இதர பொழுதுபோக்கு நிலையங்களிலும் நடத்தப்பட்டன.

