சிங்கப்பூர் வந்து ஓராண்டுக்குமேல் மட்டும் ஆகிவிட்ட நிலையில், இதற்கு முன் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் எனத் தெரியாமல் இருந்தார் வெளிநாட்டு ஊழியர் அய்யம்பெருமாள் பாண்டியன், 32.
“சீனப் புத்தாண்டு விடுமுறை காரணமாக எனது பயண ஆவண விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கிடைக்க சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது,” என்பதை நினைவுகூர்ந்தார் அவர்.
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் விறுவிறுப்பை அவர் விரும்புகிறார்.
“எனக்கு சிங்க நடனம் மிகவும் பிடிக்கும்,” என்று தமிழ் முரசிடம் அவர் பகிர்ந்தார்.
திரு பாண்டியன் உட்பட ஏறத்தாழ 1,000 வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் (பிப்ரவரி 17, 18) காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையத்தில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்தனர்.
‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிங்க நடனம், கலாசார ஆடல் பாடல் அங்கங்கள், விளையாட்டுக் கூடங்கள், அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற சிறப்பு அம்சங்கள் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்தன.
குறிப்பாக, மேடையேறி பாடல் பாடிய அங்கம் மிகவும் பிடித்திருந்தது என்றார் வெளிநாட்டு ஊழியர் கணேசன் கார்த்திக்.
“பல ஊழியர்களுக்கு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி அதிகம் தெரியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் எங்களுக்கு சிங்கப்பூரின் பல்லின கலாசாரத்தைச் சிறந்த முறையில் எடுத்துக் கூறுகின்றன,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தாம் 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தமக்கு புதிதல்ல என்றார் ஆரோக்கிய வினோத்ராஜ், 35.
தன் நண்பர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொன்ன அவர், “சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எப்போதும் குதூகலமாக, உற்சாகமாக நடைபெறுகின்றன,” என்றார்.
இம்முறை சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாள், புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
இந்த முக்கியத் தருணத்தை வரவேற்கும் விதமாக புதன்கிழமை இரவு பொழுதுபோக்கு நிலையத்தில் முஸ்லிம் ஊழியர்கள் தொழுகைக்காக ஒன்றிணைந்தனர்.
“சீனப் புத்தாண்டு, ரமலானின் தொடக்கத்துடன் ஒத்துப்போகிறது. வெவ்வேறு கலாசார, சமய நிகழ்வுகளை ஒன்றிணைந்து கொண்டாட இயலும் என்பதை இத்தருணம் நினைவூட்டுகிறது,” என்றார் ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ தலைவர் ரெவரெண்ட் எசேக்கியேல் டான்.
ரமலானின் தொடக்கத்தைக் குறிப்பதும் தம் நண்பர்களுடன் சேர்ந்து சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அனுபவிப்பதும் இம்முறை ஓர் இன்றியமையாத உணர்வு என்றார் திரு முகமது அபுதாஹிர், 33.
“இறைவனருளால் கடந்த ஆண்டு எனக்கு பல நன்மைகள் கிட்டியுள்ளன. அதனால் புனித ரமலான் மாதத்தை நன்றியுடன் தொடங்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார் அவர்.

