ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மூத்தோருக்குச் சீனப் புத்தாண்டு சிறப்பு விருந்து

2 mins read
bc1c467a-c25b-4d65-9e37-10bfe359ef1a
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர் ஒருவருக்கு ‘ஹங் பாவ்’ உறை வழங்கும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

இந்திய, சீன, மலாய் இனங்களைச் சேர்ந்த மூத்தோர் 120 பேர் பங்கேற்ற சீனப் புத்தாண்டு சிறப்பு மதிய விருந்து சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை (ஜனவரி 18) நடைபெற்றது.

சன்லவ், ஸ்ரீ நாராயண மிஷன், பன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ், சைனாடவுன் ஆக்டிவ் ஏஜிங் சென்டர் உள்ளிட்ட நான்கு இல்லங்களைச் சேர்ந்த முத்தோர் தங்கள் சகாக்களுடன் பேசி, சிரித்து உணவருந்தினர்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் சார்பில் 23 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த விருந்தில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ பங்கேற்றார்.

இரு கலைஞர்கள் ஒரு சிங்க நடன உடை போர்த்தி, கண்கள், வாயைத் திறந்து மூடி ஒத்திசைவுடன் நடனமாடும் சீன மரபுச் சிங்க நடனம், பரதநாட்டியக் கலைஞர் கணபதி சரோஜாவின் தில்லானா நடனத்துடன் நிகழ்ச்சி களைகட்டியது.

பங்கேற்பாளர்களுக்கு தொண்டூழியர்கள் சமைத்த சீன சைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டன. பதினெட்டு வட்ட மேசைகளில் அமர்ந்து, ‘லோஹேய்’ செய்து பாம்பு ஆண்டை ஆர்ப்பரிப்புடன் வரவேற்றனர் மூத்தோர்.

வட்ட மேசைகளில் ‘லோஹேய்’ செய்து பாம்பு ஆண்டை ஆர்ப்பரிப்புடன் வரவேற்றனர் பங்கேற்பாளர்கள்.
வட்ட மேசைகளில் ‘லோஹேய்’ செய்து பாம்பு ஆண்டை ஆர்ப்பரிப்புடன் வரவேற்றனர் பங்கேற்பாளர்கள். - படம்: சுந்தர நடராஜ்

ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைவர் சேகரன் கிருஷ்ணன், தொன்மை வாய்ந்த இக்கோவிலில் தொடர்ந்து அனைவரையும் ஒன்றிணைத்து சீனப் புத்தாண்டு கொண்டாடுவது சிறப்பானது என்று கூறி அனைவரையும் வரவேற்றார்.

கோயில் நிதி உறுப்பினரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான கண்ணன் கோவிந்தசாமி, 52, “முதன்முறையாக இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்துகிறேன். இது பெருமையானது. பல்வேறு இனங்களைச் சேர்ந்தோர், குறிப்பாக மூத்தோர் பேசி, சிரித்து மகிழ்வாக இருப்பதைப் பார்ப்பது மனநிறைவான உணர்வு,” என்றார்.

நூற்றுக்கணக்கான தொண்டூழியர்கள் இணைந்து இந்நிகழ்ச்சிக்குப் பங்களித்துள்ளதாக அவர் சொன்னார்.

“நான் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொண்டுழியத்தில் ஈடுபட்டு வருகிறேன். மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் இங்குள்ள மூத்தோரை நன்கு கவனித்துக்கொள்ள முடிகிறது,” என்றார் சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியரும் தொண்டூழியருமான திலகவதி, 61.

“சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் முதன்முறை பங்கேற்பதும் பங்களிப்பதும் சிறப்பான அனுபவம். இல்லங்களில் தங்களுக்குள்ளாகப் பேசிக்கொள்ளும் மூத்தோர் பெருங்கூட்டமாக இணைந்து கலகலப்பாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி,” என்றார் தொண்டூழியரும் குழந்தை பராமரிப்பு ஆசிரியருமான அனுசியா, 39.

“கோவிலில் நடப்பதால் இந்திய உணவு இருக்கும் என நினைத்தேன். சீன உணவு வகைகள் இருப்பது மகிழ்ச்சியளித்தது. சிங்க நடனமும் இந்திய நடனமும் கண்களுக்கு விருந்தாக அமைந்தன,” என்றார் கிரேத்தா ஆயர் சமூக மன்ற ஆக்டிவ் ஏஜிங் சென்டரைச் சேர்ந்த போலி ஃபோங்.

சீனப் புத்தாண்டு அனைவர்க்கும் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகளைப் பகிர்ந்தார் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்திலிருந்து வந்த அடைக்கலம்மா, 83.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவர்க்கும் ‘ஹங் பாவ்’, ஆரஞ்சுப் பழங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தின்பண்டங்கள், கணுக்கால் வலிக்காக அணியும் பட்டை, காலுறைகள், தைல வகைகளை உட்பட மூத்தோருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ 20 பொருள்கள் கொண்ட அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்