சித்திரை மாதத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14), உலகெங்கும் வாழும் தமிழர்களால் புத்தாண்டாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டின் சவால்களைப் பின்னுக்குத் தள்ளி, புதிய நம்பிக்கைகளுடன் ஆண்டைத் தொடங்கும் விதமாக அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து கோவில்களை நோக்கிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இந்த ஆண்டு புத்தாண்டு தினம் வாரநாளில் வந்ததால், லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிடச் சற்று குறைவாகவே காணப்பட்டது.
ஆயினும், வேலைக்குச் செல்வதற்கு முன்பாகவே இறைதரிசனம் பெறுவதற்காக சிராங்கூன் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.
குடமுழுக்கு ஆண்டின் சிறப்பு
இந்த ஆண்டு ‘பராபவ’ என்ற பெயருடன் சிறப்பாகப் பிறந்துள்ளதாகக் குறிப்பிட்ட அக்கோவிலின் மூத்த அர்ச்சகர் சிவஸ்ரீ சுகுமார் குருக்கள், காலை 6 மணி முதலே பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டதாகக் கூறினார்.
“வேலை நாள் என்பதால் தற்சமயம் கூட்டம் குறைவாக இருந்தாலும், மாலை முதல் கூட்டம் அதிகரிக்கும்.
“இந்த பராபவ ஆண்டில் நமது கோவிலின் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெறவிருப்பது கூடுதல் சிறப்பு. அதற்கான திருப்பணிகள் தொடங்கிவிட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய தொடக்கமும் மனநிறைவும்
இளையர்களும் வேலைக்குச் செல்வோர் பலரும் நேரம் ஒதுக்கி கோயிலுக்கு வந்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தன்னுரிமைத் தொழில்புரியும் ஒப்பனைக் கலைஞரான திவ்யா தேவகி, 22, தம் தாயாருடனும் அண்ணனுடனும் வந்திருந்தார். வழக்கமாக புத்தாண்டு நாளின்போது வேலைப்பளுவுடன் இருப்பதாகவும் ஆனால் அண்மையில் சந்தித்த கடினமான காலத்தினால் ஒரு புதிய தொடக்கத்தை வேண்டி இந்த முறை கோவிலுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
“எதிர்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு வாரமும் கோவிலுக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறேன். நாம் மகிழ்ச்சியைக் கேட்கும்போது, அதற்கான வழியை அம்மன் நிச்சயம் காட்டுவார். நான் கேட்டபடியே அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது,” என்றார் அவர்.
கடந்த 20 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றும் பெரியசாமி கதிரேசன், தினமும் காலை 7 மணிக்கு இக்கோவிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவர்.
“பணிக்கிடையே இரண்டு மணி நேரம் ஒதுக்கிவைத்து தரிசனத்துக்கு வந்துள்ளேன். சமயம், பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழும் சிங்கப்பூரில் வசிப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்,” என்றார் அவர்.
காலம் மாறாத பக்தி
மூத்த பக்தர்களும் அதிகாலையிலேயே தரிசனத்துக்கு வந்திருந்தனர்.
ஒவ்வொரு புத்தாண்டின்போதும் தவறாமல் விடுப்பு எடுத்து கோவிலுக்கு வந்துவிடும் திருவாட்டி ம.பத்மாவதி, 70, “வயதாகிவிட்டாலும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும். என் உடன்பிறப்புகள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று துர்க்கையம்மனிடம் வேண்டிக்கொண்டேன்,” என்றார்.
சிராங்கூனில் பணிபுரியும் திருவாட்டி வி.வி. வசந்தகுமாரி, 70, கால் வலியால் தற்காலிகமாக ஓய்வில் இருந்தாலும் நடந்தே கோவிலுக்கு வந்ததாகச் சொன்னார்.
“உலகில் போர்ச் சூழலைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. அப்பாவி மக்கள் உயிரிழக்கக் கூடாது, சண்டை ஒழிய வேண்டும். போரால் ஏற்படும் விலைவாசி உயர்வால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே என் பிரார்த்தனை,” என்றார் அவர்.
குடும்ப தரிசனம்
“நான் எந்தக் குறையைச் சொன்னாலும் அம்மன் நிறைவேற்றி வைப்பார் என்ற முழு நம்பிக்கையில் இங்கு வருகிறேன்,” என்று கூறிய பச்சைமுத்து செம்பியன், தமது சொந்த ஊரிலிருந்து இரண்டு மாத விடுமுறையில் வந்துள்ள தன் குடும்பத்தினரை இந்தக் கோவிலுக்கு அழைத்து வர வேண்டும் என்ற தமது ஆசையை அம்மன் நிறைவேற்றியதாகப் பூரிப்படைந்தார்.
மலேசியாவிலிருந்து தம் அத்தையைக் காண சிங்கப்பூர் வந்திருக்கும் திருவாட்டி யோகேஸ்வரி சாமிநாதன், தம் கணவர் நந்தகுமாரின் பிறந்தநாளும் புத்தாண்டு அன்றே அமைந்ததால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு வந்ததாகக் கூறினார்.
புத்தாண்டு தினத்தன்று வியாபாரம்
கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு வந்த பக்தர்களால் லிட்டில் இந்தியா கடைகளிலும் உணவகங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கோவிலுக்கு எதிரே அமைந்திருக்கும் சூர்யா சைவ உணவகத்தின் உரிமையாளர் ராசு சாமிக்கண்ணு, 85, வேலை நாளாக இருந்தாலும் வியாபாரம் மனநிறைவு அளித்ததாகக் கூறினார்.
“காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு உணவு கிடைக்காதவர்கள் எங்கள் உணவகத்திற்கு வந்தனர். இதனால் காலை வேளையில் வியாபாரம் சற்று அதிகமாகவே இருந்தது.
“வேலைக்குச் செல்பவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை. ஆனால், முதியவர்கள் வழக்கம்போல் வந்து சென்றனர். புத்தாண்டு அன்று சைவச் சாப்பாடு உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக வருவார்கள். இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கூட்டம் சற்று குறைவுதான்,” என்றார் அவர்.

