பிணைப்பை வலுப்படுத்தும் கிறிஸ்துமஸ் வழக்கங்கள்

3 mins read
உள்ளங்களில் அன்பு பெருகி உலகில் அமைதி நிலவ வேண்டும்: கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் விருப்பம்
0bd508f5-9cd7-4453-b969-63bad802919e
கிறிஸ்துமஸ் அலங்காரங்களைக் கண்டு ரசிக்கும் பொதுமக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த ஐந்தாண்டாகக் குறைந்தது 10 வசதி குறைந்தோர்க்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நடராஜன் சுஜானா, 40.

உபி வட்டாரத்தில் வசித்துவரும் அவர், கடந்த ஐந்தாண்டில் தமக்கு ஏற்பட்ட மாற்றங்கள், திருப்பங்கள், தங்கள் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் வழக்கங்களைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

“நான் கர்த்தரைக் கடவுளாக ஏற்றேன் என்பதைவிட, என்னை அவர் ஏற்றார் எனச் சொல்ல வேண்டும்,” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த அவர், கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு வரை, அடுத்தவரின் உதவிக்காகக் காத்திருந்த தாமும் தமது குடும்பமும், தற்போது 10 பேருக்கு உணவளிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பது நிறைவாய் இருப்பதாகச் சொன்னார்.

“இரு பிள்ளைகள் நிறைந்த தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள இருவரும் ஓடி ஓடி வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, எங்களின் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டார் ‘பேராயராக’ இருந்த எனது மைத்துனர். சிரமங்கள் எதுவும் பிள்ளைகளின் வாழ்வைப் பாதிக்காமல் இருப்பதை அவர் உறுதி செய்தார். அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்த உதவினார். எங்களின் மன அமைதிக்கும் கைகொடுத்தார்,” என்றார் சுஜானா.

சிரமங்கள் வரலாம். அவையே வாழ்க்கையெனும் நிலை வரலாம். ஆனால், இறுதியில் வெற்றி கிட்டும். முன்னேறுவோம் எனும் நம்பிக்கை இருந்தால் போதும். அதனைக் கொடுத்தது ஆண்டவர்,” என்று நெகிழ்ந்த அவர், இந்தக் கிறிஸ்துமஸ் காலம் தங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும் காலமென்றும் குறிப்பிட்டார்.

“கிறிஸ்துவ சமயம் அன்பை அடிப்படையாகப் பேசுகிறது. உலகத்தில் பல்வேறு துயரமான சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. மனத்தில் அமைதியும் நம்பிக்கையும் இறைச் சிந்தனையும் இருந்தால் தீய வழியில் செல்வதைத் தவிர்க்கலாம். அது தனிநபருக்கும் பிறருக்கும் நன்மை விளைவிக்கும்,” என்றார் சுஜானா.

உலக நன்மைக்காகப் பாவங்களை ஏற்றுத் தியாகம் செய்த கர்த்தரை நினைத்து, இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில் அனைவரின் மனத்திலும் அமைதியும் அன்பும் பெருகி, உலகில் நிம்மதி தழைக்க வேண்டும் என வேண்டுவதாகவும் சொன்னார் சுஜானா.

‘கிறிஸ்துமஸ் ஃபேன்டசி’ கடைகளில் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள்.
‘கிறிஸ்துமஸ் ஃபேன்டசி’ கடைகளில் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடும்பத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் இல்லையென்றாலும், நண்பர்களுடன் கூடி மகிழ இதனை ஓர் வாய்ப்பாகக் கருதுகிறார் லேக் சைட் குடியிருப்பாளரும், கணக்கியல் துறை வல்லுநருமான திருமதி பிரியா, 40.

தமது மகன், நண்பர்கள், அவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து உணவளித்து, அவர்களுடன் பேசிச் சிரித்து மகிழ்வதாகக் கூறினார் பிரியா. “நாங்கள் தனியாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லை என்றாலும், இது ஒரு விதமான விடுமுறை மனநிலை. பலரைச் சந்தித்து மகிழ்வதை வழக்கமாக வைத்திருப்பது, பிணைப்புகளை நிலைத்திருக்கச் செய்கிறது. இது தொடர வேண்டும் என விரும்புகிறோம்,” என்றார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் மூன்று மகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகளை ஒருசேரப் பார்க்கும் சிறப்புத் தருணம் திருவாட்டி பிரேமாவதிக்கு.

பள்ளி, பணி எனப் பரபரப்பாகச் சுழலும் வாழ்வில் தம்மையும் தமது கணவரையும் மகிழ்ச்சியாக்கும் தினம் இதுவென்றார் பிரேமா, 62.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மதியம் இறைச்சிக்கறி விருந்து. இரவுக்கு பாஸ்தா, ‘ஃபி‌ஷ் பில்லே’ என மேற்கத்திய உணவு. அதையும் தமது கைகளால் சமைத்துப் பரிமாறுவதில் மெத்த மகிழ்ச்சி பிரேமாவுக்கு.

‘சிட்டி ஸ்குவேர்’ கடைத்தொகுதியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் குவிந்துள்ள பொருள்கள்.
‘சிட்டி ஸ்குவேர்’ கடைத்தொகுதியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் குவிந்துள்ள பொருள்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

“என் பிள்ளைகளுக்காக இந்திய பாணியில் மதிய விருந்து. பேரப் பிள்ளைகளுக்காக மேற்கத்திய உணவு. அவர்களுக்காகவே அவற்றைச் சமைக்கக் கற்றுக்கொண்டேன்,” என சிறு குழந்தை போலத் துள்ளலுடன் பகிர்ந்தார் பிரேமா.

“எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் என்றால் விருந்துதான். எனது மகள்கள் கிறிஸ்துமஸ் மரம் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசுகள் வழங்குவது ஆகிய பழக்கங்களைக் கொண்டுள்ளனர். எங்களுக்கும் பரிசுகள் வழங்குகின்றனர். இதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதான்,” என்றார் அவர்.

இவ்வாண்டு மக்களை அதிகம் கவர்ந்த கிறிஸ்துமஸ் கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள்.
இவ்வாண்டு மக்களை அதிகம் கவர்ந்த கிறிஸ்துமஸ் கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

என் மாமா கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால், ஆண்டுதோறும் அவருடன் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் ஹவ்காங் குடியிருப்பாளர் சங்கீதா, 47. “இவ்வாண்டு எனது தந்தை மறைந்ததால் கொண்டாடப் போவதில்லை. அவர் ஆகச் சிறந்த மனிதர். அவரின் நினைவுகளுடன் கிறிஸ்துமஸ் தினத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புகிறோம்,” என்றார் சங்கீதா.

நிறுவனங்களின் கிறிஸ்துமஸ் வழக்கங்கள்

தனிநபர்களுக்கும், அதிக அளவில் பொருள்கள் வாங்குபவர்களுக்கும் கிறிஸ்துமஸ் சலுகைகள் உள்ளதாக சொன்ன ஊழியர் வீர சேகரன்,   அதனைப் பலர் பயன்படுத்தித் தங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசுகள் வாங்கிச் சென்றதாகக் கூறினார்.
தனிநபர்களுக்கும், அதிக அளவில் பொருள்கள் வாங்குபவர்களுக்கும் கிறிஸ்துமஸ் சலுகைகள் உள்ளதாக சொன்ன ஊழியர் வீர சேகரன், அதனைப் பலர் பயன்படுத்தித் தங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிசுகள் வாங்கிச் சென்றதாகக் கூறினார். - படம்: லாவண்யா வீரராகவன்

அனைத்துலக நிறுவனங்களும் கட்டுமானத்துறை நிறுவனங்களும் ஆண்டிறுதி கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி ஊழியர்களுக்குப் பரிசுகள் வழங்குவது, ‘சீக்ரெட் சான்ட்டா’ எனும் பெயரில் பரிசளித்து விளையாடுவதையும் கடைப்பிடிக்கின்றன.

இவ்வாண்டு அதற்காக ‘ப்ளூடூத் ஒலிபெருக்கிகள், திறன் கடிகாரங்கள் ஆகியவற்றை அதிகம் வாங்கிச் சென்றதாகச் சொன்னார் தேக்கா பகுதியில் உள்ள ‘கிராண்ட் மொபைல்ஸ்’ ஊழியர் வீர சேகரன்.

கடந்த மாதத்திலிருந்து அவை விற்பனையாவதாகச் சொன்ன அவர், தங்கள் கடையில் ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 60 பொருள்கள் வரை வாங்கியதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்