1819ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு ராஃபிள்ஸ் வருகை புரிந்த பிறகு, வர்த்தகத்தில் பங்களிப்பதற்காகவும் சிங்கப்பூரில் குடியேறுவதற்காகவும் தென்னிந்தியாவின் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து தமிழ் முஸ்லிம்கள் சிங்கப்பூரை வந்தடைந்தனர்.
“சிங்கப்பூரில் சூலியா சமூகத்தினருக்கு 200 ஆண்டுகால நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஜாமியா சூலியா, சூலியா ஸ்திரீட் ஆகியவை தமிழ் முஸ்லிம் வரலாற்றின் அடையாளங்கள். சோழ மண்டலத்திலிருந்து வந்த தமிழ் பேசும் இந்திய முஸ்லிம் வியாபாரிகளுக்கு ஆங்கிலேயர்கள் அளித்த பெயரே ‘சூலியா’ என்பது,” என்றார் ஷாபாஸ் குழுமத்தின் நிறுவனர் அப்துல் மாலிக் அப்துல் சலாம், 47.
சிங்கப்பூரில் வாழும் சூலியா சமூகத்தினரின் மரபையும் பண்பாட்டையும் உள்ளூர்ச் சமூகத்தினரிடம் வெளிச்சமிட்டுக் காட்டும் நோக்கத்துடன் பாரம்பரிய உணவுவகைகள் அடங்கிய திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது ஷாபாஸ் குழுமம்.
விழாக் கோலம் பூண்ட மண்டபத்தில் கல்யாண பிரியாணியின் வாசத்தோடு பாரம்பரிய இசைக்கருவியான ‘கொம்பாங்’கும் ஹனீபா பாடல்களும் மனத்தை வருடின. இப்படி இசை மழையில் நனைந்த அரங்கில், ‘பாரம்பரியங்களின் கொண்டாட்டம்: சூலியா அனுபவம் 3.0’ என்ற நிகழ்ச்சி அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்றது.
மூன்றாவது ‘பாரம்பரியங்களின் கொண்டாட்டம்: சூலியா அனுபவம் 3.0
ஏப்ரல், ஜூலை மாதங்களில் முதல் இரண்டு பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது நிகழ்ச்சி.
இம்மாதம் அக்டோபர் 17ஆம் தேதி குத்தகைக்காலம் முடிந்து, ராஃபிள்ஸ் டவுன் கிளப், பிளைமவுத் அவென்யூவில் உள்ள அதன் வளாகத்தைவிட்டு வெளியேறவுள்ள நிலையில், எந்நாளும் நினைவில் நிற்கும் ஒரு விருந்து நிகழ்ச்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டது.
300 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய இசையோடு, பண்பாடு சார்ந்த விளக்கவுரைகள், பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டத்தைப் போன்ற கேக் வெட்டும் அங்கம், ‘கஹூட்’ இணையவழிப் புதிர் விளையாட்டு ஆகியவை இடம்பெற்றன.
“பல்வேறு இனத்தவர்கள் ஒன்றுகூடும் இதுபோன்ற நிகழ்வுகள், இளைய தலைமுறையினருக்கு நமது வரலாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மிகவும் அவசியமானவையாகும். பாரம்பரிய பிரியாணியுடன், சூரோஸ் போன்ற மற்றக் கலாசார உணவுவகைகளையும் இணைத்து வழங்குவது நமது சமூக ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது,” என்று சொன்னர் தமது மகனுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமதி மும்தாஜ் பேகம்.
தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பல இன மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி புதிய கலாசார அனுபவத்தையும் விழிப்புணர்வையும் அளித்தது.
“சூலியா என்பது ஒரு தெருவின் பெயர் என்று மட்டுமே நான் இதுவரை நினைத்திருந்தேன். அது இந்தியாவிலிருந்து வந்த தமிழ் பேசும் முஸ்லிம்களைக் குறிக்கும் சொல் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். இது எனக்குப் பல புதிய தகவல்களைக் கற்றுக்கொடுத்த சிறந்த அனுபவமாகும்,” என்று கூறினார் 26 வயது சான் வெய் யாவ்.
பல்வேறு இன மக்களும் ஒருவரோடொருவர் கலந்துரையாடவும் மற்றக் கலாசாரங்களைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இதுபோன்ற நிகழ்வுகள் சமூக அளவில் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
