இந்திய ஒற்றைத் தாய்மார்களுக்குக் கைகொடுக்கும் சிண்டாவின் முயற்சி!

சிண்டாவின் ‘புரோஜெக்ட் அத்தீனா’

இந்திய ஒற்றைத் தாய்மார்களுக்குக் கைகொடுக்கும் சிண்டாவின் முயற்சி!

3 mins read
e873136f-76dd-496e-b362-82acd64af37f
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். - படம் : சிண்டா.

‘புரோஜெக்ட் அத்தீனா’ திட்டத்தின் மூலம் ஒற்றைத் தாய்மார்கள் தொடர்ந்து நல்ல பலன்பெற்று வருவதாக சிண்டா கூறியிருக்கிறது.

ஒற்றைத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களுக்குத் துணையாக நிற்பதே திட்டத்தின் நோக்கம் என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

“இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள தாய்மார்கள் பலர், பெரிய சவால்களைக் கடந்து வந்துள்ளனர். ‘புரோஜெக்ட் அத்தீனா’ மூலம் அவர்களுக்கு உதவிகளையும் வாய்ப்புகளையும் வழங்கவும் பிள்ளைகளுடன் ஒற்றைத் தாய்மார்கள் பயனுள்ள நேரத்தைச் செலவிடவும் தங்களைப் போன்ற சூழலில் இருக்கும் மற்றப் பெண்களைச் சந்தித்துப் பாதுகாப்பான, ஊக்கமளிக்கும் சூழலை ஏற்படுத்தவும் விரும்புகிறோம்,” என்று திரு அன்பரசு கூறினார்.

சிண்டாவின் ‘புரோஜெக்ட் அத்தீனா’ மூலமாக, பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழில்முறை மேம்பாட்டுக்கும் உதவ வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள், தன்முனைப்புப் பயிற்சித் திட்டங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். இவற்றுக்குச் சமூக ஆதரவு அமைப்புகளும் கைகொடுக்கின்றன. தாய்மார்கள் தன்னம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகளை விரிவுபடுத்திக்கொள்ளவும் இந்த முயற்சிகள் உதவுகின்றன.

சிண்டாவும் இதர சுயஉதவிக் குழுக்களின் ஆதரவுடன் செயல்படும் ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையத்தில், மூத்த ஆசிரியராகப் பணிபுரியும் திருவாட்டி ரேவதிக்கு ‘புரோஜெக்ட் அத்தீனா’ பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது.

மகள் அதினாவுடன் திருவாட்டி ரேவதி.
மகள் அதினாவுடன் திருவாட்டி ரேவதி. - படம் : ரேவதி

“என் மகளின் பெயரும் அதினா! நான் இணையத்தளத்தில் பயிற்சி வகுப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த ‘புரோஜெக்ட் அத்தீனா’ திட்டத்தைப் பார்த்தேன். இது தனியாகப் பிள்ளைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கானது என்று தெரியவந்தது. உடனே இணையம் வழியாகப் பதிவு செய்தேன். நான் எனது மகளுடன் சேர்ந்து ஒப்பனை, ஓவியம், களிமண் கலை போன்ற ஆக்கபூர்வமான பயிலரங்குகளில் கலந்துகொண்டேன். 2023ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ‘புரோஜெக்ட் அத்தீனா’வின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளேன்,” என்றார் அதினாவின் தாயர் திருவாட்டி ரேவதி, 42. அதினா தொடக்கநிலை ஐந்தில் படிக்கிறார்.

‘புரோஜெக்ட் அத்தீனா’ திட்டத்தின்கீழ், அன்னையர் தினத்திற்காக ‘கொலுகோ’ முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் முகாமுக்குத் திருவாட்டி ரேவதி, மகளுடன் சென்றார். அந்த முகாம் தமக்கும் மகளுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

‘புரோஜெக்ட் அத்தீனா’ திட்டத்தில் பங்கேற்றுள்ள ஒற்றைத் தாயர் கேரன்.
‘புரோஜெக்ட் அத்தீனா’ திட்டத்தில் பங்கேற்றுள்ள ஒற்றைத் தாயர் கேரன். - படம் : கேரன்

ஒன்றரை ஆண்டுகளாக ‘புரோஜெக்ட் அத்தீனா’ திட்டத்தில் பங்கேற்றுள்ள ஒற்றைத் தாயார் கேரனுக்கு 19 வயது மகனும் 5 வயது மகளும் இருக்கிறார்கள். கேரன் ‘ஒய்எம்சிஏ’ நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

“இதற்கு முன்பு என் உணர்வுகளை என்னுள் பூட்டி வைத்துக்கொண்டு அழுவேன். நான் எவ்வளவு பெரிய வலியை அனுபவித்தாலும் என்னை நானே நேசிப்பதும் தற்பேணலும் எவ்வளவு முக்கியம் என்பதை நான் கலந்துகொண்ட ‘அத்தீனா’ பயிலரங்கின் மூலம் உணர்ந்து கற்றுக்கொண்டேன்,” என்றார் 42 வயது கேரன்.

“எப்போதும் தன்னம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடாமல் வாழ்க்கையின் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று திருவாட்டி ரேவதி தம்மைப் போல் இருக்கும் மற்ற ஒற்றைத் தாய்மார்களுக்கு ஆலோசனை கூறினார்.

குறிப்புச் சொற்கள்