சிங்கப்பூரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அக்கம்பக்கத்துப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் உடற்பயிற்சியுடன் சமூகப் பொறுப்பையும் இணைக்கிறது ‘ஸ்ட்ரைடு வித் மார்செல்’ (Stride with Marcel) என்ற குப்பைகளை அகற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம்.
இதில் தொண்டூழியர்கள் தீவு முழுவதும் உள்ள குடியிருப்புப் பேட்டைகளுக்குச் சென்று குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
வாரம் ஒரு முறை இந்தக் குப்பைகளை அகற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறும். அவ்வகையில் செப்டம்பர் 26ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் ‘ஸ்ட்ரைடு வித் மார்செல்’ தொண்டூழியர்கள் சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.
இந்த அமைப்பை வழிநடத்தும் திரு மார்செல், அனைத்து வயதினரும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர் என்றார். குறிப்பாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வருவதாகவும் சிறுவர்கள் இதில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“குப்பைகளை அகற்றும்போது பாதுகாப்புக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் குப்பைகளைக் கைகளால் தொடுவதில்லை. அதற்கெனத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட ‘கிராபர்கள்’ (grabbers), பைகள் போன்ற சுத்தம் செய்யத் தேவைப்படும் பொருள்கள் வழங்கப்படுகின்றன,” என்று திரு மார்செல் கூறினார்.
சாலைகளில் செல்வோர் சில நேரங்களில் இவர்களைத் தூரத்திலிருந்து பார்த்தாலும், பல நேரங்களில் மக்களிடமிருந்து பாராட்டுகளும் ஊக்கமும் கிடைப்பதாகத் திரு மார்செல் மேலும் தெரிவித்தார்.
‘ஸ்ட்ரைடு வித் மார்செல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்விகா, இதில் பங்கேற்பது முதல் முறையன்று என்று பகிர்ந்துகொண்டார்.
“கடந்த வாரம் செந்தோசாவில் நடைபெற்ற நடைப்பயணத்திலும் நான் பங்கேற்றேன். அது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, வேறு என்னென்ன நடைப்பயணங்கள் உள்ளன என்று ஆராய்ந்தபோது, நான் வசிக்கும் லிட்டில் இந்தியாவில் ஒரு நடைப்பயணம் நடைபெறுவதைப் பார்த்தேன். நான் எப்போதும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து உதவவும் அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் விரும்பியதால் இந்த லிட்டில் இந்தியா நடைப்பயணத்திற்கும் பதிவு செய்தேன்,” என்று அவர் சொன்னார்.
அதிகம் காணப்படும் குப்பைகள்
சிங்கப்பூர்ச் சாலைகளில் அதிகம் காணப்படும் குப்பைகள் காப்பிப் பைகள், பிளாஸ்டிக் பைகள், சிகரெட் பெட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள், டின்கள், தாள்கள் ஆகியவைதான். சிறிய குப்பைகளைப் பொறுத்தவரை, ஒற்றை மிட்டாய் உறைகள், சிகரெட் துண்டுகள் அதிகம் காணப்படுகின்றன என்று திரு மார்செல் கூறினார்.
“ஒரு குறிப்பிட்ட பாதையில் வாரம் ஒருமுறை தொடர்ந்து நடந்து குப்பைகளை அகற்றி வந்தால், சில வாரங்களில் அந்தப் பாதையில் குப்பைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். உடற்பயிற்சிக்காக நடப்பது மட்டுமன்றி, சுற்றியுள்ள மக்களுடன் பழகவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு,” என மார்செல் வலியுறுத்தினார்.
