சிங்கப்பூரில் தூய்மையை வலியுறுத்த எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலோர் தூய்மையைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்தாலும், ஒரு சிலரிடத்தில் குப்பைப் போடும் பழக்கம் தொடர்கிறது.
இதற்கு எதிரான சில புதிய முயற்சிகள் அண்மையில் தேக்கா நிலையத்தில் அறிமுகமாகியுள்ளன.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான ஆல்வின் டான் மார்ச் 9ஆம் தேதி இவற்றை அறிவித்திருந்தார்.
புதிய அறிவிப்புகள் தொடர்பில் தேக்கா நிலையத்திற்குச் சென்று, மக்கள் கருத்துகளை அறிந்துவந்தது தமிழ் முரசு.
பொதுவாக, இனி தேக்கா நிலையம் இன்னும் சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகப் பலரும் தெரிவித்தனர்.
புதிய நடைமுறைகளால் மிகுந்த பயன்பெறுவது துப்புரவாளர்கள்தான்.
சாப்பிட்ட தட்டை சரியான இடத்தில் வைக்க வாடிக்கையாளர்களிடம் நினைவுபடுத்தியபோது சிலமுறை வசைச்சொற்களுக்குக்கூட ஆளானதாக தேக்கா நிலையத்தில் பணிபுரியும் துப்புரவாளர்கள் சிலர் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“மேசைகளைச் சுத்தப்படுத்துவது, தட்டுகளையும் கோப்பைகளையும் கழுவுவது, குப்பைத் தொட்டிகளிலுள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவது ஆகியவைதான் எங்கள் வழக்கமான வேலைகள். சாப்பிட்ட தட்டை எடுத்துவைப்பது வாடிக்கையாளரின் பொறுப்பு,” என்று அவர்கள் கூறினர்.
அடுத்துவரும் வாடிக்கையாளர்கள் சுத்தமான மேசைகளையே எதிர்பார்க்கின்றனர். வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட தட்டையும் பானங்களையும் அப்படியே விட்டுச் செல்லும்போது, துப்புரவாளர்களே அவற்றை எடுத்து வைக்கும் நிலை ஏற்படுகிறது.
‘கூடுதலான அதிகாரிகள் இருந்தால் நல்லது’
தேசிய சுற்றுப்புற வாரியத்திலிருந்து கூடுதலான அமலாக்க அதிகாரிகள் தேக்கா நிலையத்தில் இருந்தால் உதவியாக இருக்கும் என்ற கருத்தும் பகிரப்பட்டது.
அதிகாரிகள் தேக்கா நிலையத்தை வலம்வந்தாலும் சிலர் இன்னும் குப்பை போடத்தான் செய்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் தமிழ் முரசு கேட்டறிந்தது.
தேக்கா நிலையத்திற்கு அடிக்கடி வரும் ராஜா டேவிட், 62, சாப்பிட்ட தட்டுகளை அப்புறப்படுத்த சக வாடிக்கையாளர்களிடம் வழக்கமாக அறிவுறுத்துவார். ஆனால், சிலர் அதற்குச் செவிசாய்ப்பதில்லை என்று அவர் வருத்தப்பட்டார். இந்நிலையில், புதிய நடைமுறைகள் தேக்கா நிலையத்தின் தூய்மைக்கு உதவக்கூடும் என்று அவர் நம்புகிறார்.
ஒலிபெருக்கிகள் குறித்து மாறுபட்ட கருத்துகள்
தூய்மையைக் கடைப்பிடிக்கும்படி ஒலிபெருக்கிகள் மூலமும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டதைத் தமிழ் முரசு கண்டது. அந்த அறிவிப்பு ஆங்கில, சீன, மலாய், தமிழ், வங்காள மொழிகளில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒலிபரப்பப்படும்.
“பன்மொழி அறிவிப்புகளைப் பலராலும் புரிந்துகொள்ளமுடியும்,” என்றார் தேக்கா நிலையத்தின் ‘யாக் காதர் முஸ்லிம் உணவு’ கடையைச் சேர்ந்த ஹாஜா மொஹிதீன், 49.
இருப்பினும், தேக்கா நிலையத்தில் உள்ள இரைச்சலும் கடைகளில் ஒலிக்கும் பாடல் சத்தமும் ஒலிபெருக்கியின் அறிவிப்புகளை சில இடங்களில் மட்டுப்படுத்துகின்றன.
நேரடியாக நினைவுபடுத்துவதே இன்னும் பயனளிக்கக்கூடும் என்றார் இன்னொரு கடைக்காரரான இதாயத்துல்லா முகமது சலீன், 65.
தேக்கா நிலையத்தின் தூய்மையை மேம்படுத்துவதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் இறுதியில் அது வாடிக்கையாளர்களின் கைகளில்தான் உள்ளது.
தேக்கா நிலையத்தைச் சுத்தமாக வைத்திருக்க…
[ο] ஞாயிற்றுக்கிழமைதோறும் பிற்பகல் 1 முதல் இரவு 7 மணிவரை பொது அறிவிப்புகள் ஒலிபரப்பப்படும்.
[ο] ‘குப்பை போடுவோருக்கு $10,000 வரை அபராதம், சீர்திருத்த வேலை உத்தரவு’ என மேசைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
[ο] மூன்று இடங்களில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
[ο] புதிய தேக்கா கிளீன் தூதர் திட்டம்
சாப்பிட்ட தட்டு, பானங்களை மேசையிலேயே விட்டுச் சென்றால்...
முதன்முறை பிடிபடுவோருக்கு எழுத்துமூலம் எச்சரிக்கையும், மறுபடியும் பிடிபடுவோருக்கு அபராதமும் விதிக்கப்படும். சீர்திருத்த வேலை உத்தரவும் விதிக்கப்படலாம். அப்படியெனில் அனைவரின் முன்னிலையிலும் தேக்கா நிலையத்தை சுத்தப்படுத்தவேண்டும்.