மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, சுற்றுப்பயணிகள் ஜப்பானியர்களின் பாரம்பரிய ‘கிமோனோ’ ஆடையை அணிந்து புகைப்படம் எடுப்பதைக் கண்டு வசந்தி தம்பையா, 64, மெய்மறந்து போனார்.
அது ஓர் எளிய சுற்றுலா அனுபவமாக இருந்தாலும், ஜப்பான் போன்ற ஒரு நாட்டின் பண்பாட்டைச் சுற்றுப்பயணிகள் பாராட்டுவதற்கு அது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று திருவாட்டி வசந்தி கூறினார்.
இதை நாம் ஏன் சிங்கப்பூரில் செய்யக்கூடாது என்று யோசித்தார் திருவாட்டி வசந்தி.
குடும்பத்தினரின் முழு ஆதரவு, பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, பாரம்பரிய உடைகளை வாடகைக்கு விடும் ‘அனன்யா அட்லியர்’ என்ற கடையைக் கடந்த மே மாதம் அவர் தொடங்கினார்.
வசந்தியின் 67 வயது கணவர் பொன்னுசாமி குந்தனும் மகள்களும் கடையை நிர்வகிக்க பெரிதும் உதவுகின்றனர்.
பெண்கள், ஆண்களுக்கான இந்தியப் பாரம்பரிய ஆடைகள், அணிகலன்களை வாடகைக்கு வழங்கும் ‘அனன்யா அட்லியர்’, சைனாடவுனின் பகோடா ஸ்திரீட்டில் ஒரு சிறிய கடையாக அமைந்துள்ளது.
கடைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆடைகளை வாடகைக்கு எடுத்து, கடைக்கு வெளியே உள்ள சிறிய ‘ஸ்டூடியோ’ அமைப்பில் புகைப்படங்களை எடுக்கலாம்.
சைனாடவுன் பகுதியில் எப்போதும் நிறைந்து காணப்படும் சுற்றுப்பயணிகளின் கூட்டமே அவ்வட்டாரத்தைத் தாம் தேர்ந்தெடுத்ததற்கான முதன்மைக் காரணம் என்று திருவாட்டி வசந்தி குறிப்பிட்டார்.
அத்துடன், ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு அருகிலேயே கடை அமைந்திருப்பதும் ஒரு கூடுதல் சிறப்பு என்று அவர் சுட்டினார்.
“கோவிலுக்குச் செல்வதற்காக மட்டுமே பாரம்பரிய ஆடைகளை வாங்க வேண்டிய அவசியமில்லாமல், விரும்பிய ஆடைகளை எளிதாக வாடகைக்கு எடுக்கும் வசதியைச் சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்க விரும்புகிறோம்,” என்றார் வசந்தி.
அந்த வகையில், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போலவே சிங்கப்பூரின் இந்தியப் பண்பாட்டை ரசிக்கவும், அருமையான புகைப்படங்களை எடுக்கவும் சுற்றுப்பயணிகளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
‘அனன்யா அட்லியர்’ வணிகம் புதிது என்பதால், தற்போதைக்கு எந்தவொரு பெரிய திட்டங்களும் இல்லை என்றார் திருவாட்டி வசந்தி.

