இதய ஆரோக்கியப் பழக்கவழக்கங்களை இளம் வயதிலேயே அறிமுகம் செய்யும் நோக்கில், சிங்கப்பூர் இதய அறக்கட்டளை, பாலர் பள்ளிக் குழந்தைகளுக்காக ‘புரொஜெக்ட் ஹார்ட் ஸ்ப்ரவுட்ஸ்’ (Project Heart Sprouts) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், உடல்நலத்தைப் பேணுதல் பற்றி மூன்று நூல்கள் வெளியிடப்படவுள்ளன. முதல் நூலின் பெயர் ‘ஐ கேன் ஈட் எ ரெயின்போ!’(I Can Eat a Rainbow!).
‘என்னால் வானவில்லைச் சாப்பிட முடியும்’ எனப் பொருள்படும் தலைப்பைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம், பல வண்ணங்களில் காணப்படும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிட ஊக்குவிக்க முற்படுகிறது.
கதைகள், விளையாட்டுகள், குடும்பச் செயல்பாடுகள் ஆகியவற்றின்வழி ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
வியாழக்கிழமை (ஜூலை 16) பூன் லேயில் உள்ள ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்’ பாலர் பள்ளியில் இந்தத் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இதைத் தொடங்கி வைத்தார்.
சிறு வயதிலேயே நல்ல உணவுப் பழக்கங்களைக் கற்றுக்கொள்வது வாழ்நாள் முழுவதும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் என்று வலியுறுத்தப்படுகிறது.
உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, இதயம் தொடர்பான நெருக்கடியில் எப்படிச் செயல்பட வேண்டும் என்றும் இத்திட்டம் கற்பிக்கிறது.
வகுப்பறையில் நடைபெறும் ஆர்வமூட்டும் நடவடிக்கைகள்வழி பிள்ளைகள் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கப் பழகுவார்கள்.
மேலும், பெற்றோருடன் சேர்ந்து ஆரோக்கியமான உணவுப் பெட்டியைத் தயாரிக்கும் வீட்டுப் பயிற்சியும் இதில் உள்ளது. இதன் மூலம் பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தைப் பெறுவார்கள்.
நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ளக் குழந்தைகளுக்கு இதுவே சரியான வயது எனச் சிங்கப்பூர் இதய அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி ஓங் கூறினார்.
இதன் மூலம் இதய ஆரோக்கியம் பற்றிய செய்திகளைக் குழந்தைகள் வேடிக்கையாகவும் எளிதாகவும் கற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆறு வயதுச் சிறுமி யின் யா ருய், “நான் ஆரோக்கியமாக இருப்பேன்,” என்று உற்சாகத்துடன் செய்தியாளர்களிடம் கூறினாள்.
கட்டளை இடுவதைக் காட்டிலும் கதைப்புத்தகங்கள் மூலம் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை எளிதாகக் கற்றுக்கொடுக்கலாம் என்று அந்தச் சிறுமியின் தாயாரும் 49 வயதான பாலர் பள்ளி உதவியாளருமான திருமதி வோங் வோன் யுன் தெரிவித்தார்.
“கதை நூல்கள் மூலம் கற்றுக்கொள்வது குழந்தைகளுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மூலமாக, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும் அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும், பிள்ளைகள் தங்கள் குடும்பத்தின் உணவுப் பழக்கத்தையே மாற்றக்கூடியவர்கள் என்று திருமதி வோங் நம்புகிறார்.
“பிள்ளைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர்கள். ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று அவர்கள் தெரிந்துகொண்டால், வீட்டில் உள்ளவர்களையும் காய்கறிகள் போன்ற அதிக ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடும்படி அவர்கள் ஊக்குவிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

