குடும்பங்களும் குழந்தைகளும் திரளாகப் பங்கேற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் இந்திய மரபுடைமை நிலையத்தில் மக்களைக் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
களரி அகாடமியைச் சேர்ந்தோரின் சிலம்பாட்டம், சிறுவர்களின் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் அவ்வளாகம் விழாக்கோலம் பூண்டது.
வெளிப்புறம் மழை மக்களை நனைக்க அவர்களைத் தமிழ்ப் பாரம்பரியத்தில் நனையச் செய்தது இந்திய மரபுடைமை நிலையம்.
சிறுவர்களுக்கான பொங்கல் பானை படம் போட்ட சிறு சாக்குப் பைகளில் வண்ணம் தீட்டுதல், முகங்களில் கோலம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சேலைகள், இந்தியப் பாரம்பரிய உடைகள், நகைகள், அலங்காரப் பொருள்கள், சிற்றுண்டி வகைகள் விற்பனை செய்யும் அங்காடிகளும் இடம்பெற்றன.
விழாவில் இடம்பெற்ற 20 அங்காடிகளை ஏற்பாடு செய்தவர் திருவாட்டி சிவசங்கரி. அவர், “இந்திய மக்களின் உடைகள், பிற பழக்க வழக்கங்களை அனைவரும் பார்க்கவும், அணிந்து மகிழவும் ஏதுவாக இந்த அங்காடிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதுடன், இந்திய சமூக சிறு தொழில் முனைவோருக்கு உதவுகிறது என்பதில் பெருமை,” என்றார்.
ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கெடுக்க வருகிறோம். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எப்போதும் தமிழ் பண்டிகைகள் குறித்து பிள்ளைகளிடம் பேச நேரமிருப்பதில்லை. இந்த விழா பெற்றோர் சார்பில் குழந்தைகளுக்கு மரபு குறித்து நினைவூட்டும் வண்ணம் அமைகிறது,” என்றார் பொங்கோல் பகுதியைச் சேர்ந்த சந்தியா.
எட்டாம் வகுப்பில் பயிலும் அவரது மகன் ஆருஷ் புன்னகையுடன் வண்ணம் தீட்டினார். அவர் தனது தாயாருடன் அங்கு நேரம் செலவிடுவது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
துவாஸ் பகுதியிலிருந்து தங்கள் மகள் யாழிசையை அழைத்து வந்திருந்த இம்பாலாஸ்ரீ சுரேஷ்குமார் இணையர், நிறைய மக்களைப் பார்ப்பதும், அடிக்கடிப் பார்க்க இயலாத கலைகளைக் கண்டு ரசிப்பதும் பண்டிகை உணர்வைத் தருவதாகக் கூறினர்.