1,400க்கும் அதிகமான மாணவர்களுக்கு சிண்டாவின் துணைப்பாட விருதுகள்

1,400க்கும் அதிகமான மாணவர்களுக்கு சிண்டாவின் துணைப்பாட விருதுகள்

2 mins read
7741e5ea-10ba-48c4-97b7-4d9146ab98b2
விருது பெற்ற மாணவர்களுடன் கல்விக்கான மூத்த துணை அமைச்சர், ஜனில் புதுச்சேரி (நடுவில்) சுய உதவிக் குழு தலைவர்கள் ஆகியோர் மேடை நிகழ்ச்சியில் நிற்கின்றனர். - படம் : சிண்டா
Google News Preferred Icon

பொதுக்கல்விச் சான்றிதழ் வழக்கநிலை, வழக்கநிலை (தொழில்நுட்பம்), வழக்கநிலைக்கான கடந்த ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண்களில் முன்னேற்றம் கண்ட 1,417 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற சுய உதவிக் குழுக்களின் ‘கூட்டுத் துணைப்பாட விருதுகள்’ சீன மேம்பாட்டு உதவி மன்றம், யுரேசியன் சங்கம், சிண்டா, யாயாசான் மெண்டாக்கி ஆகிய நான்கு சுய உதவிக் குழுக்களும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் கல்விக்கான மூத்த துணை அமைச்சர், ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சுய உதவிக் குழுக்கள் ஒருங்கிணைந்து வழங்கும் ‘கூட்டுப் பயிற்சித் திட்டம்’ மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகிறது. 2004ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ‘கூட்டு துணைப்பாட விருதுகள்’ மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு, வழக்கநிலை, சாதாரண நிலைத் தேர்வுகளில் அடைந்த கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது உள்ளது.

இந்த ஆண்டு, இரு அங்கங்களாக நடைபெற்ற விழாவில், ஒட்டுமொத்த தேர்ச்சி பெற்ற மாணவர் விருது பெற்ற 16 பேர் உட்பட மொத்தம் 1,417 மாணவர்கள் விருதுகளைப் பெற்றனர். ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில், விருதுகளைப் பெற்ற 1,417 மாணவர்களின் ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

11 நிலையங்களுடன் தொடங்கிய இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது 232 மையங்கள் இயங்குகின்றன.

கிட்டத்தட்ட 20,000 மாணவர்களுக்குப் பயனளித்து வருகிறது என்று அமைச்சர் ஜனில் புதுச்சேரி தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

பெற்றோர், கல்வி, நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி  ஆகியோருடன் மெல்வின் எலியட்(இடக்கோடி).
பெற்றோர், கல்வி, நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி ஆகியோருடன் மெல்வின் எலியட்(இடக்கோடி). - படம் : சிண்டா

“சிண்டா தனியாக 25 மையங்களிலும் இரு இணையவழி மையங்களிலும் வகுப்புகளை நடத்துகிறது. ஆனால் இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக 232 மையங்கள் செயல்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளும் வசதிகளும் உருவாகியுள்ளன,” என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் மக்கள்தொகையில் இந்தியர்கள் 9% அடங்குவர். இந்த ஆண்டின் கூட்டுத் துணைப்பாட விருதுகளை 403 மாணவர்கள் பெற்றுள்ளனர். இது விருது பெறும் மாணவர்களில் 28% ஆகும்,” என்று திரு அன்பரசு மேலும் குறிப்பிட்டார்.

இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்களின் கல்விச் சாதனை மட்டுமன்றி, அவர்களின் விடாமுயற்சியும் மனவுறுதியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

ஈஷூன் உயர்நிலைப் பள்ளி சிண்டா ‘ஸ்டெப்’ (STEP) மையத்தில் துணைப்பாட வகுப்புகளில் பயின்ற மெல்வின் எலியட், தந்தையின் உடல்நலம் குன்றிய கடினமான காலகட்டத்திலும் தமது குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு கல்வியிலும் சிறந்து விளங்கினார்.

தற்போது மில்லேனியா இன்ஸ்டிடியூட்டில் கல்வி பயின்று வரும் அவர், சாதாரண நிலைத் தேர்வில் மூன்று பாடங்களின் மதிப்பெண்களில் முன்னேற்றம் கண்டார்.

“உயர்நிலை 4ஆம் வகுப்பின் தொடக்கத்தில் எனது மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்தன. எனது பெற்றோரின் பரிந்துரைக்கு இணங்கி நான் சிண்டா துணைப்பாட வகுப்பில் சேர்ந்தேன். நடந்தவற்றை இன்று நினைத்துப் பார்க்கும்போது, அங்கு சேர்ந்ததால் நான் இந்த அளவுக்கு முன்னேறியிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது,” என்று மெல்வின் எலியட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்சிங்கப்பூர்கல்விவிருது