உயிரை மாய்த்துக்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகம்

2 mins read
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது என்கிறார் இயக்குநர்
dbef83ab-d60c-48a8-ab7e-02214f662c38
அக்காவை இழந்த தங்கை, மகனை இழந்த தந்தை, நண்பனை இழந்தவர் என ஆறு கதாபாத்திரங்களின் ஆழ்சிந்தனைகள் ஒரே நாடகமாக மேடையேறும்.  - படம்: ‘அவாண்ட்’ நாடகக்குழு 

உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஏன்?’ என்ற தலைப்பிலான மேடை நாடகத்தைப் படைக்கவுள்ளது ‘அவாண்ட்’ நாடகக்குழு.

அக்காவை இழந்த தங்கை, மகனை இழந்த தந்தை, நண்பனை இழந்தவர் என ஆறு கதாபாத்திரங்களின் ஆழ்சிந்தனைகள் ஒரே நாடகமாக மேடையேறும்.

ஆறு கதைகளும் உண்மைச் சம்பவங்கள் என்று தெரிவித்தார் மேடை நாடக இயக்குநராக அறிமுகமாகும் புரவலன் நாராயணசாமி, 52.

“எனக்குத் தெரிந்த, நெருக்கமான சிலர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. அவற்றை நாடகமாகப் படைக்கும்போது மக்களிடையே அதிக புரிதல் ஏற்பட்டு மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என நம்புகிறேன்,” என்றார் புரவலன்.

நாடகத்தில் நடிக்கும் ஆறு நடிகர்களில் ஐவர் புதுமுகங்கள். அதில் ஒருவரான சோ. ஜெயதுர்கா, 23, பிரிந்த காதலனை நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் காதலியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தக் கதாபாத்திரத்தின் குணங்கள் தன்னுடையவற்றிலிருந்து மிக மாறுபட்டவை என்றார் துர்கா. இருப்பினும் கதாபாத்திரம் காட்சிப்படுத்தும் உணர்வுகளை ஓரளவு தன் வாழ்க்கையிலும் உணர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் மேடை நாடகத் துறையிலிருந்து விலகியிருந்து, மீண்டும் ‘ஏன்’ மேடை நாடகத்தில் தாயை இழந்த மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சற்குணா அமிர்தலிங்கம் குமாரசாமி, 28. ஜோகூரிலிருந்து நாடக ஒத்திகைக்காக வாரம் மூன்று முறை, சோர்வைப் பொருட்படுத்தாமல் அவர் சிங்கப்பூர் வருவதற்குக் காரணம் உண்டு.

“சென்ற ஆண்டு என் பெற்றோர் இருவரும் 18 நாள்களில் அடுத்தடுத்து காலமானர்கள். அதனால் இந்தக் கதாபாத்திரமும் அதன் உணர்வுகளும் எனக்கு மிக நெருக்கமானவை,” என்றார் சற்குணா.

உயிரை மாய்த்துக்கொள்ளுதல் என்ற கருப்பொருளில் பல சமூக ஊடகக் கலந்துரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், மேடை நாடகமாக படைப்பதால் ஏற்படும் தாக்கம் நிலைத்து நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் புரவலன்.

‘அவாண்ட்’ நாடகக்குழுவின் ‘ஏன்?” மேடை நாடகம் மார்ச் 27, 28, 29ஆம் தேதிகளில் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் மேடையேறவுள்ளது. மேல் விவரங்களுக்கு https://avantyean2025.eventbrite.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்