பொறுமை காப்பது சவாலானது, அது தரும் மனநிறைவு அலாதியானது
நோயாளிகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதையே மிகப்பெரிய விருதாகக் கருதி, தமது பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் தாதி பிரியா சரவணகுமார், 43.
குடும்பத்தின் உந்துதலால் தாதிமைத் துறைக்கு வந்து, இன்று சிங்கப்பூரில் தாதியர் மேலாளராக உயர்ந்து நிற்கும் பிரியா 22 ஆண்டுகளாக இத்துறையில் செயல்படுபவர்.
பராமரிப்பானது குடும்பத்தைத் தாண்டி சமூகத்துக்குள் நுழையும்போது, அது மிகப்பெரிய மனநிறைவை உருவாக்குமென்றும் இத்துறையின்மூலம் அந்த மனநிறைவு அன்றாடம் கிடைப்பது சிறப்பானதென்றும் அவர் சுட்டினார்.
“என்னுடைய தந்தை உடற்குறையுள்ளவர். பிறருக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தைச் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுத்தார். அவர் கொடுத்த உந்துதல்தான் என்னைத் தாதியர் துறையைத் தேர்ந்தெடுக்க வைத்தது,” என்றார் பிரியா.
முதன்முறையாக பயிற்சித் தாதியாகப் பணியாற்றிய நாள் இன்னும் நினைவிலிருப்பதைக் குறிப்பிட்ட அவர், “பிறந்து சில வாரங்களேயான சிசுவைப் பராமரிக்கும் பணி. அது பரவசமான தருணம்,” என்றார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முழுநேரத் தாதியராகப் பணியைத் தொடங்கிய அவர், தற்போது ரென் சி சமூக மருத்துவமனையில் தாதியர் மேலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.
“ஒரு பிரிவில் மேலாளராகப் பொறுப்பு வகிக்கும்போது, நோயாளிகளுக்கான பாதுகாப்பு, தரமான பராமரிப்பு என அனைத்தும் சமமாக, சரியான நேரத்தில் சென்று சேர்வதை எனது குழுத் தாதியர் மூலம் உறுதிசெய்வது என் முக்கியப் பொறுப்பு,” என்றார் அவர்.
“நோயாளிகளின் பதற்றத்தையும் கவலையையும் தணிக்கும்போது அவர்கள் முகத்தில் அரும்பும் புன்னகை தரும் நெகிழ்ச்சி அலாதியானது,” என்றும் அவர் கூறினார்.
“பொறுமை காப்பதுடன், தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவது சவாலானது,” என்ற அவர் தம்மால் முடியும் என்னும் நம்பிக்கையே இந்த நிலைக்குத் தம்மைக் கொணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
வேலையைப் போல, குடும்பத்துக்கான நேரத்தையும் திட்டமிடுவதால் வேலை - வாழ்க்கைச் சமநிலையை எட்ட முடிவதாகவும் சொன்னார் தாதி பிரியா.
நோயாளிகளுக்கு உணவளிக்கும் முறைகளில் மாற்றம் கொணர்ந்த திட்டத்தில் பங்காற்றிய பிரியா, அதன்மூலம் நேரத்தைச் சேமித்து, நோயாளிகளின் மனநிலையை மேம்படுத்தும் சிறு உரையாடல்களில் ஈடுபட ஊக்குவித்தார்.
துறைக்கு அவர் அளித்த தொடர் பங்களிப்பைச் சிறப்பித்து ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு அவருக்குச் சமூகப் பராமரிப்புக்கான விருது வழங்கிச் சிறப்பித்தது.
அளிக்கும் உழைப்பிற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் நீண்டகாலம் இத்துறையில் தொடர்ந்து பணியாற்றும் விருப்பத்துடன் செயல்படுகிறார் பிரியா.
வெறும் தாதியராகப் பார்க்காமல் குடும்பமாக நினைப்பது மகிழ்ச்சியளிக்கிறது
தமது 15 வயதில் இருவழித் தாத்தா பாட்டிகளின் இழப்பால் ஏற்பட்ட வெறுமையைப் போக்க தாதிமைத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார் காயப் பராமரிப்பில் பணியாற்றும் தாதி கவிதா சண்முகம்.
பட்டயப் படிப்பில் தொடங்கி, இளங்கலை, முதுகலைப் பட்டம் வரை படித்துத் தேர்ந்துள்ள அவர், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தற்போது செயின்ட் லூக்ஸ் சமூக மருத்துவமனையில் அவர் பணியாற்றி வருகிறார்.
அன்றாடம் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சென்று காயம்பட்ட நோயாளிகளைக் கவனிப்பது, இளைய தாதியருக்குப் பயிற்றுவிப்பது, பராமரிப்பு இல்லங்களுக்குச் சென்று வருவது எனப் பம்பரமாகச் சுழல்கிறார் கவிதா.
நோயாளிகளுடன் ஏற்படும் பிணைப்புதான் இந்த உழைப்புக்கான உந்துசக்தியாக விளங்குவதாக அவர் நம்புகிறார்.
“ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் புதிய அனுபவம்தான். சில நேரம் நோயாளிகள் மனந்திறந்து பேசுவர். சில நோயாளிகள் காயம் ஆறிய பிறகும் கூட ஒவ்வோர் ஆண்டும் என்னைப் பார்க்க வருகிறார்கள். பண்டிகை நாள்களில் இனிப்புகளைக் கொண்டுவந்து தருவர். நம்மை வெறும் தாதியராகப் பார்க்காமல் குடும்பமாக நினைக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும்,” என்று பூரிப்புடன் அவர் சொன்னார்.
பணிகளை உரிய வகையில் தேவைக்கேற்றபடி செயல்படுத்துவதும், நேர மேலாண்மையும் இத்துறையின் முக்கியச் சவால்கள் என்ற அவர், சமூக மருத்துவமனைகளில் பணியாற்ற குடும்பத்தின் ஆதரவு அவசியம் என்றார்.
சமூக மருத்துவமனைகளில் பணியாற்றூம் தாதியரின் திறன்களை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
பணியில் உயர்ந்தாலும் தொடரும் திறன்பயிற்சி
எந்தத் துறைக்குச் செல்வது என்று தெரியாமல் இருந்தபோது வாழ்நாள் முழுமைக்குமான வேலையாக இருக்கும் எனத் தம் தாயார் கூறியதைக் கேட்டு தாதிமைத் துறையில் நுழைந்தவர் நிஷாந்தினி பத்மநாபன்.
இளங்கலைப் பட்டம் படித்தபோது சமூகத் தாதிமைப் பாடம் மூலம் ஈர்க்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு என்டியுசி ஹெல்த் அமைப்பில் அவர் இணைந்தார்.
சாதாரண மருத்துவமனைச் சேவைக்கும் சமூகத் தாதிமைச் சேவைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிய அவர், “மருத்துவமனையில் இருக்கும்வரை மருத்துவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் நோயாளிகளின் பராமரிப்பை வீடுதிரும்பிய பின்னரும் நீட்டிப்பது எங்கள் பணி,” என்றார்.
நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதுடன், வீட்டில் உள்ள உதவியாளர்களுக்கும் அந்தப் பராமரிப்பு முறைகளைக் கற்றுத் தருவதாகக் கூறிய நிஷாந்தினி, “என்னால் அவர்களுக்குக் காயம் குணமடைந்துள்ளது, வலி குறைந்துள்ளது எனும் உணர்வு தரும் மனநிறைவு அலாதியானது,” என்று விவரித்தார்.
தற்போது மேலாளராக இருக்கும் அவர், “இப்போதும் தாதிமைத் திறன்பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். அதில் என்னுடைய சிறப்புத் திறமை ‘மூக்கு வழியாக உணவுக் குழாய் பொருத்துதல்’. கடினமான குழாய் பொருத்துதலுக்கும், நோயாளிகளின் உறவினர்கள் ‘நீங்கள்தான் வர வேண்டும்’ என்று கோரிக்கை விடுப்பர். அது மகிழ்ச்சி தரும்,” என்றும் சொன்னார்.


