நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய நோன்பு துறப்பு

நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய நோன்பு துறப்பு

2 mins read
ராயல் கிங்ஸ் குழுமம் நடத்திய சமூக நோன்பு துறப்பு
33eef94b-d269-4b0c-85a7-c06b35a1cd4e
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்க்கு பற்றுச்சீட்டு வழங்கி அவர்களுடன் உரையாடும் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷி. - படம்: ‘வாங்கோ ஸ்டுடியோஸ்’

பல்லின, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட சமூகத் தலைவர்களும் மக்களும் ஒன்றுகூடுவது எளிதன்று என்றும், சமூக நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் அதற்குத் தளமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷி.

“மத்திய கிழக்கு உள்பட உலகின் பல பகுதிகளில் நடப்பவை குறித்து நான் விளக்க வேண்டியதில்லை. பல்வேறு இனங்கள், சமயங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக இஃப்தார் உணவு அருந்துவதும், உரையாடுவதும், சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஒரு பொதுவான இலக்கை நோக்கிப் பயணம் செய்வதும் கடினமானது,” என்று கூறிய அவர், ஒன்றுகூடலுக்காகக் கிடைக்கும் வாய்ப்புகளில் இளையர்கள் குறித்தும், சமூகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் பேசவேண்டுமெனச் சொன்னார்.

ராயல் கிங்ஸ் குழுமம் நடத்திய சமூக நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

ஏறத்தாழ 150 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, வியாழக்கிழமையன்று (மார்ச் 19) சென்ட்ரியம் ஸ்குவேரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் சமூகப் பங்காளிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு சையது ஹாருன், “நாம் ரமலான் மாதத்திலிருந்து விடைபெறும் வேளையில், நம் நாட்டில் நிலவும் அமைதியுடன் இப்பண்டிகையை அனைவரும் ஒன்றிணைந்து அமைதியாகக் கொண்டாட முடியும் என நம்புகிறேன்,” என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பங்களுடன் சிறப்பு விருந்தினர் சையது ஹாருன் அல்ஹப்ஷி. ராயல் கிங்ஸ் நிறுவனத் தலைவர் சிராஜுதீன், இயக்குநர் முகமது இப்ராஹிம், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் உடன் உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பங்களுடன் சிறப்பு விருந்தினர் சையது ஹாருன் அல்ஹப்ஷி. ராயல் கிங்ஸ் நிறுவனத் தலைவர் சிராஜுதீன், இயக்குநர் முகமது இப்ராஹிம், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் உடன் உள்ளனர். - படம்: ‘வாங்கோ ஸ்டுடியோஸ்’

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக நோன்பு துறப்புக்கு ஏற்பாடு செய்துவரும் ராயல் கிங்ஸ், இவ்வாண்டு வசதிகுறைந்த குடும்பங்களுக்கு என்டியுசி பற்றுச்சீட்டுகளை வழங்கியது.

“அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அதன் வெளிப்பாடாகவே இவ்வுதவியை வழங்க முடிவெடுத்தோம்,” என்றார் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சிராஜுதீன்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிறப்பு விருந்தினர் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷி.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிறப்பு விருந்தினர் கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹாருன் அல்ஹப்ஷி. - படம்: ‘வாங்கோ ஸ்டுடியோஸ்’

“இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்புக்கு அப்பால், பல்வேறு பின்னணிகளைக் கொண்டோர்க்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் தளமாகவும் விளங்குகிறது,” என்றார் நிறுவனத்தின் இயக்குநர் முஹம்மது இப்ராஹிம்.

“ஏழைகள் இல்லாத விருந்து நிறைவடைவதில்லை எனும் நபிகளின் கூற்றுக்கேற்ப பலரையும் ஒன்றிணைத்த விருந்தில் பங்கேற்பது மகிழ்ச்சி,” என்றார் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் முகமது பிலால்.

“இது சிங்கப்பூரின் தனித்துவமான பல்லின கலாசாரத்திற்குச் சான்று,” என்றார் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன்.

குறிப்புச் சொற்கள்