சொந்த வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களுக்கு உதவும் சக்தியாக மாற்றுபவர்கள் சிறந்த முன்மாதிரிகள்.
அந்த வகையில், செவித்திறன் குறைபாடுள்ள தம் தந்தைக்கு உதவிய அனுபவத்தைக் கொண்டு சக நண்பருக்குக் கைகொடுத்து உதவியுள்ளார் மேஃபிளவர் தொடக்கப்பள்ளியில் பயிலும் 9 வயது சிறுமி அமின்டார் பன்னீர்செல்வம்.
இந்திய-தாய்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த அமின்டார், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த திருவாட்டி சுபத்ரா அயின்கேவ், சிங்கப்பூரரான திரு பன்னீர்செல்வம் ஜோசப் ஆகியோரின் ஒரே மகளாவார்.
அமின்டாரின் தந்தை, தமது 10 வயதில் ஏற்பட்ட விபத்தால் தமது செவித்திறனைப் பெரிதும் இழந்தார். தற்போது 5 விழுக்காட்டுச் செவித்திறன் மட்டுமே கொண்டுள்ள அவர், ஒரு பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
வாடகைக் குடியிருப்பில் வசிக்கும் அந்தக் குடும்பம், சமூகத்தில் அமின்டார் தயக்கமின்றிப் பழக வேண்டும் என்ற நோக்கில், ‘ரீச்’ (REACH) குடும்பச் சேவை நிலையம், ‘ஸ்போர்ட்கேர்ஸ்’ (SportCares) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் விளையாட்டு நிகழ்ச்சியில் அவரைச் சேர்த்தனர்.
ஆரம்பத்தில் மிகவும் அமைதியாகவும் தயக்கத்துடனும் இருந்த அமின்டார், காலப்போக்கில் அதிக தன்னம்பிக்கை பெற்று ஈடுபாட்டுடன் விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார். அவரது தனிப்பட்ட வளர்ச்சியைத் தாண்டி, இந்நிகழ்ச்சி அவரிடம் அதிக அளவில் இருந்த பரிவான குணத்தையும் வெளிக்கொணர்ந்தது.
தம் தந்தை எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்திருந்ததால், விளையாட்டின்போது ராயன் என்ற செவித்திறன் குறைபாடுள்ள மற்றொரு சிறுவனுக்கு அமின்டார் தானாகவே முன்வந்து உதவினார்.
தம் தந்தைக்கு உதவுவது போலவே, ராயனுக்கு விளையாட்டுத் திடலில் அறிவுறுத்தல்களைத் தெளிவாக எடுத்துக்கூறி, அவன் அனைத்து விளையாட்டுகளிலும் ஒதுக்கப்படாமல் கலந்துகொள்வதை அமின்டார் உறுதிசெய்தார்.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் மகளிடம் ஏற்பட்டுள்ள அந்தச் சிறந்த மாற்றத்தைக் கண்டு அவரது பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள்.
“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவள் எப்போதும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், வெளியே சென்று புதிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுகிறாள்.
“அவள் விளையாட்டு நடவடிக்கைகளை மிகவும் ரசிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்கள்மீது அன்பு காட்டவும் கற்றுக்கொண்டாள்,” என்று அவர்கள் கூறினர்.

