மருத்துவப் பராமரிப்பாளரின் சேவைப் பயணம்

பரிவே பராமரிப்பின் புதிய மொழி

மருத்துவப் பராமரிப்பாளரின் சேவைப் பயணம்

2 mins read
8f781869-92a8-45f5-9de9-c793d63c543d
செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவப் பயிற்றுவிப்பாளரான திருவாட்டி பிரமீளா லோகநாதன். - படம்: பிரமீளா
multi-img1 of 2

சுகாதாரப் பராமரிப்பு என்பது நோய் சார்ந்தது மட்டுமல்லாமல், நோயாளிகளின் உடல்நலன் முதல், அவர்களின் உளநலன் வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்கிறார் திருவாட்டி பிரமீளா லோகநாதன், 48.

தாதிமைத் துறையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு அனுபவம்கொண்ட அவர், தற்போது செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையில் மூத்த மருத்துவப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

மூப்படைந்த சமூகம், மக்களைப் பாதிக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு மத்தியில், பராமரிப்பு என்பது வெறும் சிகிச்சை அல்ல; நோயாளிகளைச் சக மனிதர்களாகக் கருதி, அவர்களைக் கனிவன்புடன் நடத்த முன்னுரிமை வழங்குவதே ஆகும் என்று தமிழ் முரசிடம் கூறினார் திருவாட்டி பிரமீளா.

தாதியர், அத்துறை சார்ந்த மாணவர்கள் எனப் பலருக்கும் பணி சார்ந்த திறன்களுடன் பரிவையும் கற்றுக்கொடுப்பதே தமது முக்கியப் பணி என்றார் அவர்.

‘‘செயின்ட் லியுக்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளில் பெரும்பாலோர் மூத்தோர். அவர்களில் சிலர் உணவு அருந்தப்போவதில்லை என்று சொன்னால், அது தாதியர்க்குச் சவாலாக இருக்கும். 

‘‘அதனைச் சமாளிக்கத் திறனாற்றல் மட்டும் போதாது. அதையும் தாண்டி, பரிவு என்பது முக்கியம். சிலரிடம் உணவருந்தச் சொன்னால், அவர்கள் கோபப்படலாம். அப்போது, அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, அவர்களைப் பராமரிக்க வேண்டும். இங்குதான் கனிவன்பு சார்ந்த பராமரிப்பு தேவைப்படுகிறது,’’ என்றார் அவர்.

‘‘இத்தகைய சூழல்களில், அவர்களுக்குப் பிடித்த உணவு என்ன, அதனை எடுத்துவர குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் உள்ளனரா போன்ற கேள்விகளை அவர்களிடம் கேட்போம். இது சிறிய செயல்தான். ஆனால், நோயாளிகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்க இத்தகைய சேவையைச் செய்யவேண்டும். இந்த அணுகுமுறையே, பராமரிப்புச் சேவைக்கான புதிய அடையாளம்,” என்று தாம் எண்ணுவதாகக் கூறினார் திருவாட்டி பிரமீளா.

மென்திறன் சார்ந்த பயிற்சிக்குச் செல்லும் தாதியர்க்கு ஆற்றல்மிகு கல்வி கற்பிக்கப்படும். நோயாளிகளைக் கனிவன்புடன், மனிதாபிமானத்துடன், கண்ணியத்துடன் நடத்துவதைக் கற்றுக்கொடுப்பதே பயிற்றுவிப்பாளராகத் தாம் முன்னிறுத்தும் முக்கியப் பண்பு என்றார் அவர்.

‘‘சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் பிரார்த்தனை செய்ய விரும்பினால், அங்கிருக்கும் சிற்றாலயத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வதும் பராமரிப்பின் ஒரு பகுதியாகும்.

‘‘மருந்துகளையும் சிகிச்சையையும் வழங்குவதோடு சேவை நின்றுவிடக்கூடாது. நோயாளிகளின் கலாசாரப் பின்னணிகளைக் கருத்தில்கொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கும் செவிகொடுப்பது நல்லது,’’ என்றார் அவர். 

மிகுந்த அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து தாதியர்க்கு வழிகாட்டியாகத் திகழும் திருவாட்டி பிரமீளாவுக்கு, சமூகப் பராமரிப்பு மனிதவள மேம்பாடு, உன்னத விருது, கல்வியாளர்களுக்கான உன்னத விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துறையில் சேரவிரும்பும் இளையர்க்கு ஏதேனும் கூற விரும்புகிறாரா என்று அவரிடம் தமிழ் முரசு கேட்டது.

‘‘உலகளவில் எந்த வேலை பிரபலமாக இருக்கிறதோ அதில் கவனம் செலுத்தாமல், மனத்திற்குப் பிடித்த பணியைச் செய்ய வேண்டும். தேவையுள்ளோருக்குச் சேவை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தால், பிறர் வாழ்வில் அர்த்தமிகு மாற்றத்தை ஏற்படுத்தவும் அவர்கள் முன்வரவேண்டும்.

‘‘அவ்வகையில், இளம் தலைமுறையினர் கடினமாக உழைப்பதற்குத் தயாராக இருங்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். பரிவுமிகுந்தவர்களாகத் திகழுங்கள்,’’ என்று கூறினார் திருவாட்டி பிரமீளா.

குறிப்புச் சொற்கள்