தேசிய சேவை ஆற்றி வரும் காலத்திலிருந்தே, ரத்த தானம் செய்து வருகிறார் 67 வயது அடோல்ஃப் ஜான் துரை.
தொடக்கத்தில், ரத்த தானம் செய்தால் தேசிய சேவைப் பணிகளிலிருந்து அரை நாளுக்கு ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணத்தில் திரு அடோல்ஃப் அவ்வாறு செய்து வந்தார்.
ஆனால், ரத்த தானம் குறித்த அவரது கண்ணோட்டத்தை ஒரு சுவரொட்டி முற்றிலும் மாற்றியது.
“ஒரு முறை ரத்த தானம் செய்வதால், மூவரின் உயிரைக் காப்பாற்றலாம் என்று அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்ட பிறகே ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
மாறுபட்ட கண்ணோட்டத்துடன் செயல்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்சம் நான்கு முறை அவர் ரத்த தானம் செய்து வருகிறார்.
அவரது கடப்பாட்டை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, திரு அடோல்ஃபின் உற்றார் உறவினர்களும் ரத்த தானத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இது வரை, திரு அடோல்ஃப் 101 முறை ரத்த தானம் செய்துள்ளார்.
அண்மையில் சிங்கப்பூர் லூர்து அன்னை தேவாலயத் தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்ததான முகாமில் அவர் 101வது முறையாக ரத்தத்தை நன்கொடையாக வழங்கினார்.
50 ஓஃபிர் சாலையில் அமைந்துள்ள தேவாலய மண்டபத்தில், திரு அடோல்ஃபுடன் சேர்ந்து 58 பேர் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 21) ரத்த தானம் செய்தார்.
தானம் செய்ய 94 பேர் முன்வந்தாலும், ரத்த தானம் செய்வதற்குச் சிலர் தகுதி பெறாததால், 59 பேர் மட்டுமே ரத்த தானம் செய்ததாகக் குறிப்பிட்டார் தேவாலயத் தமிழ்ச் சமூகத்தின் பொறுப்பாளர் பீட்டர் ஜூலியஸ்.
பல்லாண்டு காலமாகத் தேவாலயம் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.
ஆனால், கொவிட்-19 காலகட்டத்தில் சில ஆண்டுகள் ரத்த தான முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஆகவே, இம்முறை பலர் முதன்முறையாக ரத்தத்தை தானம் கொடுக்க வந்தது நம்பிக்கை அளிப்பதாகப் பகிர்ந்தார் திரு பீட்டர்.
வந்திருந்தோரில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் இளையர்கள் என்றும் குடும்பமாகச் சிலர் தானம் செய்ய வந்திருந்தனர் என்றும் திரு பீட்டர் குறிப்பிட்டார்.
வந்திருந்தவர்களில் பலர் வெளிநாட்டு ஊழியர்கள் என்பதையும் அவர் சுட்டினார்.
“ரத்ததானம் எப்படிச் செய்வது, எங்குச் சென்று கொடுப்பது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் வசதியைக் கருதி, நாங்கள் திருப்பலி முடிந்த பிறகு ரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம்,” என்றார் அவர்.
தமிழ்ச் சமூகத்திற்காகவோ, ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தோருக்காகவோ ரத்த தானம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற தேவாலயத்தினர், ஒட்டுமொத்த சமுதாயத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இதைக் கருதுகின்றனர்.
“இனம், சமயம் என்ற கோட்பாடுகளைக் கருதி இந்த முகாமிற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. சீனர்கள், இந்து சமயத்தினர் சிலரும் எங்கள் தேவாலயத்தில் ரத்த தானம் செய்ய முன்வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என அவர் கூறினார்.
இந்த நற்பணியானது, லூர்து அன்னை தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட்தந்தை மைக்கேல் சீதாராமன், உதவிப் பங்குத் தந்தை அருட்தந்தை லியோ ஜஸ்டின், புதிதாக இணைந்துள்ள அருட்தந்தை சாலமோன் ஆகியோரின் வழிகாட்டுதலோடும் ஆதரவோடும் முன்னெடுக்கப்பட்டது.
நற்பணி செவ்வனே தொடரக் கைகொடுத்த தொண்டூழியர்கள் 12 பேருக்கும் தேவாலயத்தின் சார்பில் திரு பீட்டர் நன்றி தெரிவித்தார்.
ரத்த தானம் குறித்து ஐயம் கொள்ள அவசியம் இல்லை எனக் கூறுகிறார் திரு அடோல்ஃப்.
“ஒரு முறை, பெரிய விபத்து நேர்ந்தது. ரத்த வங்கியில் போதுமான ரத்தம் இல்லை என்பதால், மருத்துவமனை தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்புகொண்டது. நானும் நேரம் தாழ்த்தாமல், ரத்தத்தைத் தானம் செய்தேன்,” என்று குறிப்பிட்ட திரு அடோல்ஃப், இது போன்ற தருணங்களில்தான், ஒரு துளி ரத்தத்தின் அருமை புரிவதாகச் சொன்னார்.
“ஒரு சிலருக்கு வலிக்கலாம். ஆனால், வலியைப் பொருட்படுத்தாமல், ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்,” என்று ஊக்கமளித்தார் திரு அடோல்ஃப்.
50 முறைகளாவது ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எளிய குறிக்கோளோடு செயல்பட்டவர் திரு அடோல்ஃப்.
ஆனால், இப்பொழுது, தம் உடல் ஒத்துழைக்கும் வரை, ரத்தத்தைத் தானம் செய்ய விரும்புவதாக அவர் கூறுகிறார்.
“மற்றொருவர் உயிரைக் காக்க என்னால் உதவ முடியுமென்றால், நான் உயிரோடு இருக்கும்வரை அதைத் தொடர்ந்து செய்வேன்,” என உறுதி கூறினார் திரு அடோல்ஃப்.

