தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் இளந்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் இளந்தமிழ் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற்றது.
பாலர் பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும் உயர்நிலை மாணவர்களுக்கு விடுகதை போட்டியும் நடத்தப்பட்டன.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
போட்டிகள் முடிந்து மாலை 4 மணிக்குப் பரிசளிப்பு விழா தொடங்கியது. வரவேற்புரையை திருமதி புவனேஸ்வரி வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு இளந்தமிழ் மன்றத்தின் தலைவர் ஏ.ஆர் விவேக் தலைமை தாங்கினார்.
போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசிய அவர், வரும் காலங்களில் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகச் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தின் தலைவர் ரெ செல்வராஜூ கலந்துகொண்டார்.
இளந்தமிழ் மன்றம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்குவதாக அவர் கூறினார்.
பிறகு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாகத் திரு சாந்தகுமார் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நெறியாளராகத் திருமதி ஸ்வர்ணலட்சுமி செயல்பட்டார். நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நிறைவுற்றது.

