தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்மொழி ஆசிரியராகப் பரிணமித்த கணினி அறிவியல் முதுநிலைப் பட்டதாரி

2 mins read
பிஞ்சு பாலருக்குப் பாடங்கள் புகட்டி, பொறுப்பான குடிமக்களாக வளர வித்திடும் ஆசிரியை
936be944-1f57-469e-b172-677fa0d5eb16
ஐந்து ஆண்டுகளாகத் தெம்பனிஸ் வெஸ்ட் புளோக் 140 பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் ஆசிரியராக இருந்துவரும் சசிரேகா கார்த்திக் (வலம்), அண்மையில் நடந்த ‘ஒன்எம்டிஎல்’ குழந்தைப் பாடல் இசையமைப்புப் போட்டியில் வென்றார். - படம்: பிசிஎஃப்
multi-img1 of 4

மக்கள் செயல் கட்சி அறநிறுவன பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் தெம்பனிஸ் வெஸ்ட் புளோக் 140 பாலர் பள்ளி ஆசிரியை சசிரேகா கார்த்திக், அன்றாடம் தன் வகுப்புக்குப் புதுப்பொலிவு ஏற்படுத்த விழைகிறார்.

தமிழ்மொழி மாதம் அல்லது தமிழ்ப் பண்டிகைகள் வந்தாலே வகுப்பறை புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கும்.

தமிழ்மொழி மாத விழாவை முன்னிட்டுப் பொங்கல் பண்டிகையைக் காட்சிப்படுத்தும் பொம்மைகளுடன் வகுப்பறையை அலங்கரிப்பார் ஆசிரியை சசிரேகா.
தமிழ்மொழி மாத விழாவை முன்னிட்டுப் பொங்கல் பண்டிகையைக் காட்சிப்படுத்தும் பொம்மைகளுடன் வகுப்பறையை அலங்கரிப்பார் ஆசிரியை சசிரேகா. - படம்: சசிரேகா கார்த்திக்

பொங்கல் அறுவடையைக் காட்சிப்படுத்தும் பொம்மைகள்; வாழையிலை உணவு; தரையில் பெரிய பரமபதம் விளையாட்டு; திருவள்ளுவர், பாரதியார், கம்பர் போன்ற புலவர்களையும் மயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் போன்ற நடனங்களையும் சித்திரிக்கும் சுவரொட்டிகள் - தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றும் கூறுகளுக்குப் பஞ்சமில்லை.

இதன் சிறப்பு அம்சம், தமிழ்ப் பிள்ளைகள் மட்டுமன்றி, சீன, மலாய்ப் பிள்ளைகள்கூட தமிழ்ப் பாரம்பரியத்தைப் பற்றிக் கற்கின்றனர்.

“என் சீன, மலாய் மாணவர்களுக்குக் கபடி மிகவும் பிடிக்கும். எப்போது விளையாடலாமெனக் கேட்டுக்கொண்டே இருப்பர்,” என்றார் ஆசிரியை சசிரேகா.

பாலரைத் தமிழ் மரபுக்கு ஈர்க்க ஆசிரியை சசிரேகா தரையிலேயே பரமபத விளையாட்டை வரைந்து ஒட்டிவிடுவார்.
பாலரைத் தமிழ் மரபுக்கு ஈர்க்க ஆசிரியை சசிரேகா தரையிலேயே பரமபத விளையாட்டை வரைந்து ஒட்டிவிடுவார். - படம்: சசிரேகா கார்த்திக்

ஆசிரியர் தொழிலை ஆசிரியை சசிரேகா தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அவருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த அவருடைய ஆசிரியர்களே.

“நான் படித்த காலத்தில் என் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றனர். அப்போது எனக்கு ஒரு நல்ல ஆசிரியர் அமைந்திராவிட்டால் நான் இந்நிலைக்கு முன்னேறியிருக்கமாட்டேன்,” என்றார் அவர்.

கணினி அறிவியல் முதல் தமிழ்மொழி வரை

கணினி அறிவியலிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் MSc, MPhil முதுநிலைப் பட்டங்கள் பெற்ற ஆசிரியர் சசிரேகா ஏன் பாலர்பள்ளித் தமிழ்மொழி ஆசிரியரானார்?

“என் தந்தை தமிழ்ப் பற்றாளர். எனக்கும் சிறுவயதிலிருந்து தமிழ்மீது அதிக ஆர்வம். ஆடல், பாடல், கவிதை அனைத்தையும் செய்வேன்,” என்றார் ஆசிரியை சசிரேகா.

இந்தியாவில் கணினி அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்த அவர், திருமணம் செய்து சிங்கப்பூருக்கு வந்தபின்னர் பாலர்பள்ளித் தமிழாசிரியர் பணிக்கு ஈர்க்கப்பட்டார்.

“ஏழு ஆண்டு பணியிடைக்கால இடைவேளைக்குப் பிறகு தமிழாசிரியராகும்போது, தவறு ஏதும் செய்யக் கூடாது என்ற அச்சம் எனக்கு இருந்தது. என் பள்ளி முதல்வர் என்மீது நம்பிக்கை வைத்தார், சுதந்திரமும் தந்தார்.

“என் ஆசிரியர் பணிமூலம் என் தந்தையை நான் பெருமைப்படுத்த விரும்புகிறேன்,” என்றார் ஆசிரியை சசிரேகா.

தமிழ்ப் புலவர்களின் சுவரொட்டிகளை வகுப்பறையில் ஒட்டி, பாலருக்கு அவர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியை சசிரேகா.
தமிழ்ப் புலவர்களின் சுவரொட்டிகளை வகுப்பறையில் ஒட்டி, பாலருக்கு அவர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியை சசிரேகா. - படம்: சசிரேகா கார்த்திக்
பாலர் பள்ளி ஆசிரியராக, உங்கள் குழந்தையை எப்படி உருவாக்க நினைக்கிறீர்களோ அதே மாதிரிதான் மற்ற குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.
சசிரேகா கார்த்திக்

கற்பித்தல் முறையைத் தொடர்ந்து புதுப்பித்தல்

“நான் வளர்ந்தபோது என்னைச் சுற்றி அனைத்தும் தமிழில் இருந்தது. அதனால் எளிதில் கற்கமுடிந்தது. இன்றோ, மாணவர்கள் தமிழைப் புத்தகத்தில் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்,” என்றார் ஆசிரியை சசிரேகா.

மேலும், தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சில சமயம் அவரால் நினைப்பவற்றைச் செயல்படுத்த இயல்வதில்லை. தமிழ் அல்லாத இந்தியப் பாலருக்கும் தமிழில் ஆர்வம் பிறக்கும் வகையில் அவர் கற்பிக்கவேண்டியுள்ளது.

எனினும், இத்தனைச் சவால்களிலும் அவர் தன் பணியில் சலித்துப் போனதில்லை.

“சில நாள்கள் நான் தமிழ்மொழி மாத நடவடிக்கைகளைத் தயார்படுத்தும்போது இரவு 11.45 மணிக்குக்கூட பள்ளியிலிருந்து கிளம்பியிருக்கிறேன். என் குடும்பத்தினர் என் இலக்கைப் புரிந்துகொள்கின்றனர்,” என்றார் ஆசிரியை சசிரேகா.

“தமிழ் என்பது நம் தாய் போன்றது. தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே பாலர் பள்ளியிலேயே தமிழ்மொழியார்வத்தை விதைத்தால்தான் எதிர்காலத்தில் அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் நம் பண்பாட்டுக் கூறுகளை மறக்காமலிருப்பர்,” என்றார் ஆசிரியை சசிரேகா.

அண்மையில் நடந்த ‘ஒன்எம்டிஎல்’ குழந்தைப் பாடல் இசையமைப்புப் போட்டியில் வென்ற மூன்று ஆசிரியர்களில் ஒருவர் சசிரேகா கார்த்திக்.
அண்மையில் நடந்த ‘ஒன்எம்டிஎல்’ குழந்தைப் பாடல் இசையமைப்புப் போட்டியில் வென்ற மூன்று ஆசிரியர்களில் ஒருவர் சசிரேகா கார்த்திக். - படம்: ரவி சிங்காரம்
ஆசிரியை சசிரேகா ஏற்பாடுசெய்த மாறுவேடப் போட்டிகள்.
ஆசிரியை சசிரேகா ஏற்பாடுசெய்த மாறுவேடப் போட்டிகள். - படம்: சசிரேகா
குறிப்புச் சொற்கள்