சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம், வரும் மே 1ஆம் தேதி குடமுழுக்கு விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது.
இவ்விழாவில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
பக்தர்கள் ஏறத்தாழ 15,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அன்னதானப் பணிகளை மேற்கொள்ளவும் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்பட்டது.
குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள்
குடமுழுக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான யாகசாலைப் பூசைகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) மாலை 6 மணியளவில் முதற்கால யாக பூசையுடன் மிகச் சிறப்பாகத் தொடங்கவுள்ளன.
விழாவிற்கான பிரதான கும்பங்கள் யாகசாலையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மொத்தம் எட்டுக் காலப் பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
மே 1ஆம் தேதி அதிகாலையில் எட்டாம் காலப் பூசையுடன் யாகசாலைப் பூசைகள் நிறைவடைந்து, காலை 8.15 மணிக்குக் கடப் புறப்பாடு தொடங்கும்.
அதைத் தொடர்ந்து காலை 9.30 மணியளவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் ஆலயத்தின் குடமுழுக்கிற்குத் தலைமைதாங்கி வந்துள்ள டாக்டர் பிச்சை குருக்களும் அவரது குழுவினரும் இம்முறையும் குடமுழுக்கின் புனிதச் சடங்குகளை வழிநடத்துவர்.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பொலிவுடன் மிளிரும் சிலைகள்
ஈராண்டுகாலத் திட்டமிடலையும் ஓராண்டுகாலத் தீவிரப் பணிகளையும் கடந்து இப்போது புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது நூற்றாண்டுப் பழமைவாய்ந்த இந்த ஆலயம்.
இந்தக் குடமுழுக்கின் சிறப்பம்சமாக ஆலயத்தில் ஆத்மலிங்கம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் தாங்களாகவே அபிஷேகம் செய்து இறைவனை வழிபடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆலய கோபுரத்தின் முகப்பில் முனீஸ்வரப் பெருமானின் ஏழு அவதாரங்களைக் குறிக்கும் ஏழு முனிகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலைக் கடந்துசெல்லும் எவரும் கண்ணைக் கவரும் இந்த ஏழு அவதாரக் காட்சிகளைத் தவறவிட முடியாது.
முன்பு ஒருசில வண்ணங்களை மட்டுமே கொண்டிருந்த சிற்பங்கள், தற்போதைய குடமுழுக்கிற்காக ஐந்து நிறங்களில் புதிய பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
இக்கோவிலில், 2000ஆம் ஆண்டு முதல் ஆலயப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஸ்தபதி (தலைமைச் சிற்பி) எஸ். நாகராஜனின் தலைமையிலான குழுவினர் தென்னிந்தியக் கலைநயம் மாறாமல் இச்சிற்பங்களை மெருகேற்றி உள்ளனர்.
நவீன வசதிகளோடு இட மறுசீரமைப்பு
பக்தர்களின் வசதிக்காக ஆலயம் முழுவதும் நவீனக் கண்ணாடி மேற்கூரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. வெயில், மழைக்காலங்களிலும் எவ்விதத் தடையுமின்றி பக்தர்களின் வழிபாடுகள் நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இடவசதியைச் சிறப்பாகப் பயன்படுத்தும் நோக்கில், ஆலயத்தின் மடப்பள்ளி தற்போது மும்மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கீழ்த்தளத்தில் உள்ள மண்டபங்கள் முறையாகச் சீரமைக்கப்பட்டு, திருமணம், காதுகுத்து போன்ற குடும்பச் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஆலயத்தின் கழிவறைகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எளிதில் அணுகும் பொருட்டு, சேவை மையம் முன்புறத்திற்குக் கொண்டுவரப்பட்டு இடவசதி மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த இடப்பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், மேல்தளம், கீழ்த்தளம் என இரண்டு இடங்களும் பக்தர்களின் தேவைக்கேற்பப் புதிய கோணத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
சமூகத்தின் பேராதரவு
தேவை எழும் வேளையில் ஒவ்வொரு கோவிலும் மற்றொன்றிற்கு ஆதரவளிப்பது சிங்கப்பூர் ஆலயங்களின் வழக்கம். அவ்வகையில், தரும முனீஸ்வரன் ஆலயத்தின் இந்தக் குடமுழுக்கு நற்பணிகளுக்காகப் பல இந்து ஆலயங்கள் நிதி உதவி வழங்கித் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இம்முறை ஆலய நிலக்குத்தகையின் புதுப்பிப்பும் குடமுழுக்குப் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், இரண்டிற்கும் நிதி திரட்டுவது பெரும் சவாலாக இருந்ததைக் கோவில் மேலாண்மைக் குழுத் தலைவர் வேலப்பன் துரைசாமி சுட்டினார்.
“பங்களிப்பு சிறிதோ பெரிதோ நன்கொடையாளர் அனைவரின் ஆதரவையும் ஆற்றலையும் ஒருங்கிணைப்பது மிகவும் அவசியம்,” என்றார் அவர்.
இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் மட்டுமின்றி, மற்ற இனத்தவர்களும் பெரிதும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
2000ஆம் ஆண்டில் முதல் குடமுழுக்கின்போது ஆகப் பெரிய நன்கொடையாளராகச் சீனர் ஒருவர் 205,000 வெள்ளி வழங்கியதைத் திரு வேலப்பன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
தற்போதும் ஆலயத்தின் ஆதரவாளர்களுள் கணிசமானோர் இந்தியர் அல்லாதவர்களாக இருப்பது, சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டிற்கும் பன்முகக் கலாசாரத்திற்கும் நற்சான்றாக விளங்குகிறது.

