‘எனக்கு சாதாரணப் பைகள் பிடிக்காது' (I HATE A BORING BAG) - இது கலை மாணவரும் ஊடகக் கலைஞருமான (content creator) ஷீராமின் டிக்டாக் காணொளி ஒன்றின் தலைப்பு.
தனது அன்றாட வாழ்க்கையைக் காணொளிகளாகப் பதிவிடுவதோடு, வித்தியாசமான ஆடைகள் மூலம் ஆடை வடிவமைப்பு மீதான தனது ஆர்வத்தையும் அவர் தனது சமூக ஊடகத் தளத்தில் வெளிப்படுத்துகிறார்.
அவரிடம் உள்ள பைகள் சாதாரணமாக தோற்றமளிப்பதில்லை; தத்ரூபமான சால்மன் மீன் வடிவம், ஆரஞ்சு நிற கெண்டை மீன் அல்லது புறா வடிவிலான பைகளையே அவர் அதிகம் விரும்புகிறார். விலைமதிப்பற்ற ‘பர்கின்’ (Birkins) போன்ற வழக்கமான ஆடம்பரப் பைகளை இந்த 24 வயது ஃபேஷன் ஆர்வலரிடம் காண முடியாது.
ஆடை அணிகலன்களின் சேகரிப்பும் மறுவிற்பனைச் சந்தைகளும்
இஸ்ஸே மியாகே (Issey Miyake), டியோர் (Dior) போன்ற முன்னணி நிறுவனங்களின் பல ஆடைகளை அவர் சேகரித்து வைத்துள்ளார். எனினும், இவற்றை அவர் பெரும்பாலும் மறுவிற்பனைச் சந்தைகளிலும், பழைய பொருள்கள் விற்கும் கடைகளிலுமே குறைந்த விலைக்கு வாங்குகிறார்.
“நான் இன்னும் இளையராக இருப்பதால், இவற்றை சேகரிப்பதை நான் ஒரு முதலீடாக பார்க்கவில்லை. தினமும் அணியக்கூடிய ஆடைகளையே நான் அதிகம் விரும்புகிறேன்,” என்றார் ஷீராம்.
அவரது ஆடை அணிகலன்கள் சேகரிப்பில் முக்கியக் கண்டுபிடிப்பு ஒன்று அவர் 2023ல் ஆஸ்திரேலியாவில் வசித்தபோது கிட்டியது.
“ஒருமுறை மைசன் மார்ஜியெல்லா (Maison Margiela) கடையைக் கடந்து சென்றபோது, அங்குள்ள குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் இருந்த காலணிகள் என்னைக் கவர்ந்தன. தினமும் அந்தக் கடையை ஆசையாகப் பார்த்துச் செல்வேன். இறுதியில் ஒருநாள் உள்ளே சென்று அதனை வாங்கிவிட்டேன்,” என அவர் நினைவுகூர்ந்தார்.
கிட்டத்தட்ட $1,800 மதிப்புள்ள அந்த மைசன் மார்ஜியெல்லா டாபி பூட்ஸ் (Maison Margiela Tabi Boots) பொழுதுபோக்கிற்காக அவர் செலுத்திய மிகப்பெரிய கட்டணங்களில் ஒன்றாகும்.
விருப்பமான வடிவமைப்பாளர்களும் பாணியும்
மைசன் மார்ஜியெல்லா அவரது விருப்பமான ஃபேஷன் நிறுவனமாக இருந்தாலும், இந்திய வடிவமைப்பாளர்களின் படைப்புகளையும் அவர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்.
“கௌரவ் குப்தா எனக்கு மிகவும் பிடித்த வடிவமைப்பாளர். அவர் வடிவமைக்கும் ஆடைகள் மிகவும் விலை உயர்ந்தவை என்றாலும், எனது திருமணத்திலாவது அவரது ஆடை ஒன்றை அணிய வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்றார் ஷீராம்.
கௌரவ் குப்தாவின் படைப்புகள் மெட் காலா (MET Gala) போன்ற உலகளாவிய மேடைகளிலும் ஈஷா அம்பானி, மிண்டி காலிங் போன்ற பிரபலங்களாலும் அணியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலிருந்தே ஃபேஷன் மீது ஆர்வம் கொண்ட ஷீராமை, 1800களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க-அமெரிக்க, லத்தீன் அமெரிக்க மாற்றுப் பாலினச் சமூகங்களிடையே தோன்றிய ‘பால்ரூம்’ கலாசாரம் ஈர்த்தது.
“அங்கு அனைவரும் தங்களை அழகாக அலங்கரித்துக் கொள்வார்கள். அது நமக்கான தனித்துவமான பாணியைக் கண்டறியவும் தன்னம்பிக்கையோடு ஆடை அணியவும் பெரிதும் உதவுகிறது,” என்றார் அவர்.
உள்ளூர் ஆடை வடிவமைப்புத் துறையில் இந்தியப் பிரதிநிதித்துவம்
ஆடை அணிகலன்களைச் சேகரிப்பதைத் தாண்டி, உள்ளூர் ஆடை வடிவமைப்புத் துறையில் இந்திய மாடல்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்தும் ஷீராம் தனது தளத்தின் மூலம் குரலெழுப்பி வருகிறார்.
உள்ளூர் நிறுவனங்கள் நல்ல பிரதிநிதித்துவத்தை வழங்க முயன்றாலும், இதற்கான முழுப் பொறுப்பு விளம்பர நிறுவனங்களிடமும் மாடல்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் தொடர்பு நிறுவனங்களிடமும்தான் அடங்கும் என அவர் கருதினார்.
“இதுவரை நான் எங்கும் நிராகரிக்கப்பட்டதில்லை, ஆனால் பல நிகழ்ச்சிகளில் நான் மட்டுமே கருமையான சருமம் கொண்ட நபராக இருந்துள்ளேன். படப்பிடிப்பின்போது, எனது சரும நிறத்திற்கு ஏற்ற ஒப்பனைப் பொருள்கள் அவர்களிடம் இல்லாதபோது அது தர்மசங்கடமாக இருக்கும்,” என்று ஷீராம் வேதனை தெரிவித்தார்.
லைஃப் மாடலிங்கும் குடும்பத்தின் ஆதரவும்
தனது ஃபேஷன் சேகரிப்புகளுக்கான பணத்தை அவர் தனது சேமிப்பிலிருந்தும், ஃப்ரீலான்ஸ் மாடலிங், ‘லைஃப் மாடலிங்’ போன்ற வேலைகள் மூலமாகவும் ஈட்டுகிறார்.
கலைப் பட்டறைகளில், கலைஞர்கள் மனித உடலின் அமைப்பை வரைந்து பழகுவதற்காக, பெரும்பாலும் ஆடையின்றி மாடலாக இருப்பது ‘லைஃப் மாடலிங்’ எனப்படும்.
இது கலையின் ஓர் அடிப்படை அங்கமாக இருந்தாலும், இது குறித்து அறியாதவர்கள் இதனைக் கொச்சையாக நினைக்கலாம் என்றார் அவர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 63 வயதான லைஃப் மாடல் லிம் கிம் ஹியான் பற்றிய செய்திகள் முக்கிய ஊடகங்களில் வெளியானது, சமூகத்தில் உள்ள இந்தத் தவறான கண்ணோட்டத்தை மாற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும் என ஷீராம் நம்புகிறார்.
“மக்களின் விமர்சனங்களைப் பற்றியோ கண்ணோட்டங்களைப் பற்றியோ நான் கவலைப்படுவதில்லை. நான் செய்வது என் குடும்பத்திற்குத் தெரியும். அவர்களின் மிகப்பெரிய ஆதரவு எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.
