புதுப்பிக்கப்பட்ட சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் தொடரும் நீடித்த நிலைத்தன்மை அம்சங்கள்

3 mins read
7ca071e8-071c-4c50-ae3a-6d90b28d5685
சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு முன் நிற்கும் செயல்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட எஸ்எம்ஆர்டி ரயில் பெட்டி மக்களைக் கவர்ந்துவருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் கட்டப்பட்ட முதல் கடைத்தொகுதியான ‘சிட்டி ஸ்குவேர் மால்’ அண்மையில் கிட்டத்தட்ட $50 மில்லியன் செலவில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கிச்சனர் சாலையில் அமைந்துள்ள இந்தக் கடைத்தொகுதி புதிய குத்தகைதாரர்களை ஈர்க்கும் நம்பிக்கையில் இந்த முயற்சியை மேற்கொண்டது.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நீடித்த நிலைத்தன்மையைப் போற்றும் அதன் முதன்மையான நோக்கத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்கும் வகையில் சில அம்சங்கள் இந்தக் கடைத்தொகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.

மின்தூக்கி நிற்கும் ஒவ்வொரு தளத்திலும் கூரைகள் மற்றும் சுவர்களில் குமிழி உறை (bubble wrap), பிளாஸ்டிக் குப்பிகள், மூங்கில் சாப்ஸ்டிக்ஸ் போன்ற மறுபயனீடு செய்யப்பட்ட பொருள்களால் நிரப்பப்பட்டிருப்பதை மக்கள் காணலாம்.

‘தகவமைப்பு மறுபயன்பாடு’ (adaptive reuse) என்று அழைக்கப்படும் இந்த முயற்சி இது போன்ற பொருள்களை வேறு நோக்கத்திற்காக மீண்டும் பயன்படுத்துவதை உள்ளடக்கியது.

அத்துடன், அமர்வதற்கான சில இருக்கைகள், புதுப்பித்தலுக்கு முன்பு கடைத்தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மரக் கம்பிகளால் ஆனவை.

இதுபோன்ற புதிய அம்சங்களின் வழி ‘சிட்டி ஸ்குவேர் மால்’ கடைத்தொகுதி அதன் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது என்று ‘சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்’ (சிடிஎல்) நிர்வாகம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் துடிப்பான பேட்டைகளில் ஒன்றான லிட்டில் இந்தியாவின் அருகில் அமைந்துள்ளதால் ‘சிட்டி ஸ்குவேர் மால்’ கடைத்தொகுதி சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

கூடுதலாக அரசாங்கம், ஃபேரர் பார்க் வட்டாரத்தில் சுமார் 10 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.

“குடியிருப்புப் பகுதி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் கூடுதலான குடியிருப்பாளர்கள் இந்தக் கடைத்தொகுதியை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று நிர்வாகம் தெரிவித்தது.

புதுப்பித்தலின் ஒரு பகுதியாக ‘ஏர்சோன்’ விளையாட்டு அம்சம் மாற்றம் செய்யப்பட்டது. இது பெற்றோர் மற்றும் சிறு பிள்ளைகள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு இடைநிறுத்தப்பட்ட வலை விளையாட்டுத் திடலாகும்.

‘லேசர் டேக்’ போன்ற செயல்பாடுகள் விளையாட்டுத் திடலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளும் அமலுக்கு வந்தன என்று தெரிவித்தார் ‘ஏர்சோன்’ செயல்பாட்டு நிர்வாகி சஸ்மிதா ஸ்ரீ சரவணன், 21.

“‘ஏர்சோன்’ விளையாட்டுத் திடலில் ஒவ்வொரு குழந்தைக்கும் அது விளையாடும் நேரம் முழுவதும் பெற்றோரில் ஒருவர் உடனிருக்க வேண்டும்,” என்றார் அவர். இது ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும் என்று அவர் கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட கடைத்தொகுதியின் மொத்தப் பரப்பளவு 730,000 சதுர அடி. இது கடைத்தொகுதியின் வெளிப்புறம் வரை நீண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கடைத்தொகுதியின் மொத்தப் பரப்பளவு 730,000 சதுர அடி.
புதுப்பிக்கப்பட்ட கடைத்தொகுதியின் மொத்தப் பரப்பளவு 730,000 சதுர அடி. - படம்: ரென்டி ஆர்யாண்டோ/ விவிஎஸ்.எஸ்ஜி

அங்கு ‘சிடிஎல் இகோ-ரயில்’ என்ற சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பழைய எஸ்எம்ஆர்டி ரயில் பெட்டி ஒன்று, குழந்தைகளுக்கான கல்வி மையமாகச் செயல்படுகிறது.

கடைத்தொகுதிக்குமுன் இருக்கும் பழைய எஸ்எம்ஆர்டி ரயில் பெட்டி குழந்தைகளுக்கான கல்வி மையமாகச் செயல்படுகிறது.
கடைத்தொகுதிக்குமுன் இருக்கும் பழைய எஸ்எம்ஆர்டி ரயில் பெட்டி குழந்தைகளுக்கான கல்வி மையமாகச் செயல்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த வளாகம் வாரந்தோறும் காலநிலை மற்றும் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கல்வி குறித்த பயிலரங்குகளை நடத்துகிறது.

ரயிலுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 2,800 சதுர அடி பரப்பளவில் ‘சிடிஎல் நுண்காடு’, கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள ‘சிட்டி கிரீன்’ நகர்ப்புறப் பூங்காவில் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் கண்டது.

நகர்ப்புற வெப்பநிலையைக் குறைக்கவும் பல்லுயிரியலை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் மீள்தன்மையை மேம்படுத்தவும் இயற்கை எவ்வாறு உதவும் என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த நுண்காடு அமைக்கப்பட்டது என்று சிடிஎல் நிர்வாகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்