கனவும் கடின உழைப்புமிருந்தால் சிங்கப்பூர்க் காற்பந்து அணியில் விளையாடும் வாய்ப்பு இந்திய வீரர்களுக்கும் உறுதியாகக் கிடைக்குமென முன்னாள் தேசிய காற்பந்து ஆட்டக்காரர் ச.சுப்பிரமணி கூறியுள்ளார்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) உலக கிண்ணக் காற்பந்துப் போட்டியையொட்டி சிங்கப்பூர் இந்தியக் காற்பந்து வீரர்களுக்கிடையே நடந்த உரையாடல் நிகழ்ச்சியின்போது அவர் அவ்வாறு கூறினார்.
“தற்போது தேசிய அணியிலும் தொழில்முறை அணிகளிலும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது,” என்றார் அவர்.
பல இளம் இந்திய ஆட்டக்காரர்களிடம் திறமை இருந்தாலும் அவர்கள் முழு நேரமாக காற்பந்து விளையாட முன்வராமல் இருப்பதே இந்நிலைக்கு முக்கிய காரணமெனத் திரு சுப்பிரமணி கருதுகிறார்.
“இங்கு நமக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றை எட்டிப்பறிப்பது நம் கைகளில்தான் உள்ளன,” என்றார் அவர்.
சிவிலியன் யுனைடெட் விளையாட்டு குழுவைத் தோற்றுவித்த திரு என்.நாராயணசாமி, முன்னாள் தேசிய அணி பயிற்றுவிப்பாளர் பி.என்.சிவாஜி, லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவின் இளம் ஆட்டக்காரர் மார்க்கஸ் மோசஸ், தேசியக் காற்பந்து வீராங்கனை ஆர்த்திரா அருள் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள் வெளிநாடுகளில் பயிற்சிபெறுவது, சிறுவர்கள் சிங்கப்பூரில் காற்பந்து விளையாட தேவையான இடவசதிகள், உள்ளூர்க் காற்பந்துத் தரத்தை உயர்த்தல், என பல்வேறு தலைப்புகளையொட்டி பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
“முன்பெல்லாம் சிறுவர்கள் அனைவரும் காற்பந்துமீது பைத்தியமாக இருந்தார்கள் என சொல்லலாம். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. பல வீடுகளில் கல்விக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதனால், அவர்களின் வேட்கையும் குறைந்துவிட்டது,” என்று திரு நாராயணசாமி கூறினார்.
விளையாட்டுவழி மக்களிடையே நிலவும் பிரிவினைகளைக் குறைக்க முடியுமென அவர் வலுவாக நம்புகிறார்.
மக்களை ஒன்றிணைக்க 60களிலும் 70களிலும் முக்கியக் கருவியாகத் திகழ்ந்த காற்பந்தை இளையர் பலர் விளையாட வேண்டுமென்பதே அவரது விருப்பம்.

