சென்ற ஆண்டு ஜூன் மாதம் வாணன் கோவிந்தசாமியும் அவருடைய மனைவி அனுராதா கணேசனும் சென்னையிலுள்ள ‘ஆல் த சில்ட்ரன்’ ஆதரவற்றோர் ஆசிரமத்தினுள் காலடி எடுத்துவைத்த தருணம் இன்றும் அவர்களின் மனதில் அப்படியே நிலைத்து நிற்கிறது.
“எங்கள் கண்களில் கண்ணீர் மல்கியது. மற்ற பிள்ளைகளுக்கு அப்பா, அம்மா இருக்கிறார்கள். ஏன் இவர்களுக்கு மட்டும் இந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை?
“அவர்களின் முகங்களில் பெற்றோரின் அன்புக்கான ஏக்கம் தெரிந்தது. நாங்கள் அவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து, ‘சரி நீங்க சாப்பிடுங்க, நாங்கள் சென்று வருகிறோம்’ எனக் கூறியபோது, அவர்கள் எங்கள் கைகளை அன்போடு பிடித்துக்கொண்டு விடவே இல்லை,” என்றார் சிங்கப்பூரில் ‘ஃபிட்மந்த்ராஸ்’ எனும் உடற்பயிற்சி நிறுவனத்தையும் ‘காப்பி வித் வேன்ஸ்’ வலையொலியையும் நடத்திவரும் வாணன், 47.
ஆசிரமத்துக்கு முதன்முறை சென்றபோது உணவு வழங்கினாலும், அது ஒரு வேளை பசியையே போக்கும் என்பதால், அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட சிறுவர்களின் வாழ்வை மேம்படுத்த வேறென்ன செய்யலாம் என சிந்திக்கத் தொடங்கினர் வாணனும் அனுராதாவும்.
“அப்போதுதான் நான் அவர்களுக்குத் தன்முனைப்புப் பேச்சுகளைக் கொடுக்கத் தொடங்கினேன்.
“அங்கு சிறுவர்கள் தூங்குவதற்குக்கூட மெத்தை இல்லை. படுக்கையின் மரப்பலகைகளில்தான் அவர்கள் தூங்கி வந்தனர். அதனால் டிசம்பரில் சென்றபோது சொந்த செலவில் அவர்களுக்கு 108 மெத்தைகளை வழங்கினோம்,” என்றார் வாணன்.
அடுத்தபடியாக, அவர் பிப்ரவரியில் மீண்டும் சென்னைக்குச் செல்வார்.
அப்போது, சிறுவர்கள் தம் பொருள்களை ஒழுங்காக வைக்க ஒரு புத்தகப் பை அடுக்கையும் அலமாரியையும் அமைக்கும் பணியில் ஈடுபடுவார் வாணன்.
தொடர்புடைய செய்திகள்
திருச்சியில் பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் சென்று உணவு வழங்கிய தம்பதியினர், இவ்வாண்டிலிருந்து அங்குள்ள மகளிருக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 200 விடாய்க்கால அணையாடைகள் (sanitary napkins) கொடுக்கவுள்ளனர்.
மேலும், அங்கு கூடுதல் பகுதிநேர ஆசிரியர்களைப் பணியமர்த்தி தையல், அவசர முதலுதவி போன்ற வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கவும் தன்முனைப்புப் பேச்சுகள் வழங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
“ஒரு நாள் சொந்தமாக ஒரு சிறுவர் இல்லத்தைத் தொடங்கவேண்டும் என்பது சிறுவயதிலிருந்து எனக்கு இருந்துள்ள எண்ணம். ஒரு நாள் அந்த எண்ணம் கைகூடும் என நம்புகிறேன்,” என்றார் வாணன்.
திருப்பதியில் தொடங்கிய சமூக சேவைப் பயணம்
2024 தொடக்கத்தில் திருப்பதிக்குச் சென்றபோது திரு வாணனின் மனைவி அனுராதா, “கோவிலில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டோம். இப்பொழுது ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களிடமும் ஆசீர்வாதம் பெறலாமே,” என ஆலோசித்தார்.
‘நேரடிச் சேவையையே விரும்புகிறேன்’
தமது சமூக சேவைக்கு நன்கொடை வழங்கி ஆதரிக்க விரும்புவோரிடமிருந்து வாணன் நிதியைப் பெற மறுக்கிறார்.
“நீங்களே முயற்சி செய்து அங்கு நேரில் வரவேண்டும். அப்போதுதான் உங்களுக்கே தெரியும் நீங்கள் செய்யும் சமூக சேவையின் பலன்.
“பலரும் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், இத்தகைய நேரடிச் சேவை பணத்தைவிட மேலானது. அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல இயலாது,” என்றார் வாணன்.
அவ்வாறு இரு தொண்டூழியர்கள் தம் பயணத்தில் இணைந்ததாகக் கூறினார் வாணன். தம் இரு மகள்களையும் ஒருமுறை தம் சமூக சேவை பயணங்களின்போது அவர் அழைத்து வந்தார்.
“நாங்கள் மூன்றாம் தலைமுறையாக சிங்கப்பூரில் இருப்பதால், இந்திய வேர்கள் விட்டுப் போகக்கூடும். நாங்கள் இந்தியாவிற்குச் சென்று சமூக சேவை செய்வதைக் கண்டிருந்தால் என் மூதாதையர் பெருமைப்பட்டிருப்பர்,” என்றார் வாணன்.

