தங்கள் சொந்த மகளுடனும் வளர்ப்புப் பிள்ளைகள் இருவருடனும் சிரிப்பும் குதூகலமும் ததும்ப இவ்வாண்டுக் கிறிஸ்துமஸ் பண்டிகை அர்த்தமுள்ளதாக அமையுமெனக் கருதுகின்றனர் ஏஞ்சலன் - டேவிட் இணையர்.
தூய அன்பும் அரவணைப்பும் குடும்பப் பிணைப்பும் தங்கள் இல்லத்திற்கு அழகூட்டுவதாகச் சொல்லும் ஏஞ்சலன், ஈராண்டுகளுக்குமுன் கைக்குழந்தையாகத் தனது வளர்ப்பு மகளை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் நேற்று நடந்ததுபோலத் துல்லியமாக நினைவில் இருப்பதாகச் சொன்னார்.
“ஒருமுறை என் கணவர் டேவிட் நோயல் ஆரோக்கியசாமி, அவரது உறவினர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அவர்கள் வீட்டில் பல குழந்தைகள் இருந்தன. இரு குழந்தைகள் மட்டுமே அவர்களின் சொந்தக் குழந்தைகள். ஆனால் அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக இருந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருந்தது,” என்றார் அவர்.
“அன்றைய நாளே நானும் இயன்ற அளவு பல குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்,” என்றார் தொழில்நுட்பத் துறை ஊழியரான ஏஞ்சலன் பால் ஆண்டனி, 42.
“2021ஆம் ஆண்டே விண்ணப்பித்துக் காத்திருந்த எங்களுக்கு 2022ஆம் ஆண்டு அழைப்பு வந்தது. குழந்தையைக் கூட்டி வர எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். வேண்டிய பொருள்களை வாங்கி வைத்து, நாள்களை எண்ணிக் கொண்டிருந்தோம்,” என்றார் அவர்.
கேகே மருத்துவமனைக்கு வரச் சொல்லி அழைப்பு வந்ததும் அலுவலகத்திலிருந்து தன் கணவர் விரைந்தோடி வந்தது மறக்க முடியாதது என்றும் அவர் சொன்னார்.
வளர்ப்புக் குழந்தைப் பராமரிப்பு குறித்த பயிற்சியை இருவரும் மேற்கொண்டதாகவும் அடுத்த 15 மாதங்களில் மற்றொரு குழந்தையையும் எடுத்து வளர்க்கும் வாய்ப்பு கிட்டியதாகவும் சொன்னார் டேவிட்.
சிறு குழந்தையை வைத்துக்கொண்டு, மற்றோர் ஒரு வயதுக் குழந்தையை வளர்க்க முடியுமா எனும் சிந்தனை எழாமலில்லை என்று சொன்ன ஏஞ்சலன், “என் கணவரும் மகளும் கொடுத்த ஆதரவு அடுத்த குழந்தையை எடுத்து வளர்க்க ஊக்கமளித்தது”, என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முதல் குழந்தை வந்த சில மாதங்களில் கொண்டாடிய கிறிஸ்துமஸ், மகிழ்ச்சி நிறைந்த மாறுபட்ட அனுபவமாக இருந்தது என்கின்றனர் இந்த இணையர். சில பரிசுப்பொருள்களுடன் அமைதியாகக் கொண்டாடிய தங்களுக்குப் பல்வேறு பரிசுகள், குழந்தைக்காக வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடியது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறினர்.
வாரநாள்களில் வரும் விடுமுறை நாள்கள்கூடப் பண்டிகைபோலத்தான் என்று சொன்னார் டேவிட். கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வருவதுகூடத் தற்போது மும்மடங்கு மகிழ்ச்சி அளிப்பதாகச் சிரிப்புடன் சொன்னார் டேவிட்.
எதிர்காலத்திலும் இன்னும் பல குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து, அன்பைப் பகிர்ந்து, மகிழ்வைப் பன்மடங்காக்குவதே இவர்களின் விருப்பம்.

