இல்லத்துக்கு அழகூட்டும் பூஜை மாடம்

இல்லத்துக்கு அழகூட்டும் பூஜை மாடம்

3 mins read
சிங்கப்பூரில் பூஜை மாடங்கள் அமைக்கும் கலைஞர்கள்
26adba80-0a5b-425e-9f72-2bd731e20ac7
‘செல்வா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ்’ கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வனும் அவரது மனைவியும். - படம்: அனுஷா செல்வமணி

சிங்கப்பூரின் அதிநவீன வானளாவிய கட்டடங்களுக்கும் பரபரப்பான வாழ்க்கை முறைக்கும் மத்தியில் காலத்தால் அழியாத பழமையான பாரம்பரியம் தழைத்திருக்கிறது.

பூஜை மாடங்களை உருவாக்கும் இந்தக் கலைஞர்கள் வழிபாட்டுக்கும் சமயத் தொடர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதுடன், மரச்சிற்பக் கலையைப் பேணி வளர்க்கவும் உதவுகின்றனர்.

வரைவதால் ஏற்பட்ட ஆர்வம்

தமிழகத்தை சேர்ந்த பெரியசாமி தமிழ்ச்செல்வன் 1996ல் சிங்கப்பூருக்கு வந்தார். வேறு துறைகளில் பணிபுரிந்த அவருக்கு வேலையில் மனநிறைவு கிட்டவில்லை.

மர வேலைப்பாடுகள், செட்டிநாடு வடிவமைப்புகள் மீது நாட்டம் கொண்டுள்ள அவர், அதுசார்ந்த பணி செய்ய வேண்டுமென்று விரும்பி, பூஜை மாடங்கள் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார்.

கடந்த 20 ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் ‘செல்வா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ்’ கடையை நடத்தி வரும் தமிழ்ச்செல்வன், 60, இத்தொழில் தமக்கு மிகுந்த மனநிறைவையும் உற்சாகத்தையும் தருவதாகக் கூறினார்.

தமிழ்ச்செல்வனின் கடையில் இருக்கும் சிலைகள். கெர்பாவ் சாலையில் இருக்கும் அக்கடையின் சுவர்களில் மாட்டப்பட்டுள்ள இந்து தெய்வங்களின் படங்களும் பூஜை மாடங்களும் வாடிக்கையாளர்களை வரவேற்கும்.
தமிழ்ச்செல்வனின் கடையில் இருக்கும் சிலைகள். கெர்பாவ் சாலையில் இருக்கும் அக்கடையின் சுவர்களில் மாட்டப்பட்டுள்ள இந்து தெய்வங்களின் படங்களும் பூஜை மாடங்களும் வாடிக்கையாளர்களை வரவேற்கும். - படம்: அனுஷா செல்வமணி

பொறியியலில் நிபுணத்துவம் பெற்றுள்ள அவர் வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவங்களைத் தாமே வரைந்து பரிந்துரைக்கிறார். வடிவம் இறுதியானதும், பூஜை மாடங்கள் இந்தியாவில் தயாராகின்றன.

இவரது பூஜை மாடங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுபவை.

தமிழ்ச்செல்வன் பூஜை மாடங்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கிறார்.
தமிழ்ச்செல்வன் பூஜை மாடங்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கிறார். - படம்: அனுஷா செல்வமணி

பூஜை மாடங்கள் திட மரம் அல்லது தேக்கு மரத்தால் செய்யப்படுவதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று பூஜை மாடம் அமைக்கும் இடம் சரியான திசையில் உள்ளதா என்பதைத் தாம் கணிப்பதாகச் சொன்னார்.

கலப்புத் திருமண தம்பதிகள் பலர் பூஜை மாடங்களில் ஆர்வம் காட்டி விதவிதமான வடிவங்களை நாடுவதாக கூறினார்.

“இந்து சமயத்தினருடன் மற்ற இனத்தவர்களும் பூஜை மாடங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக புது வீடு வாங்கும் இளம் தம்பதியினர் பூஜை மாடம் அமைப்பதில் விருப்பமாக உள்ளனர்,” என்றார் தமிழ்ச்செல்வன்.

தமது தொழிலுக்கு எப்போதும் தேவை இருக்கும் என்று நம்பும் அவர் இந்தக் கலை அடுத்த தலைமுறைகளுக்குத் தொடர, தம் இரு பிள்ளைகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறார்.

பொறியியலும் கலைத்திறனும்

அப்பர் பாய லேபார் சாலையில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை, உள்ளே செல்பவரை மரவாசனையிலும் கண்கவர் கைவண்ணத்தாலும் ஈர்க்கும்.

பொறியியல் பின்புலத்தைக் கொண்டுள்ள தமது கணவர் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பூஜை மாடங்களுக்கு அளவு எடுத்துத் தருவதில் தேர்ந்தவராக இருப்பதை அறிந்த ரோகிணி நாயுடு, 40, அவர் திறனை மூலதனமாகக் கொண்டு தொழில் தொடங்க முடிவெடுத்தார்.

கணவர் பூஜை மாடம் அமைக்கும் தொழிலில் இறங்க ஊக்கம் தந்தார் ரோகிணி.
கணவர் பூஜை மாடம் அமைக்கும் தொழிலில் இறங்க ஊக்கம் தந்தார் ரோகிணி. - படம்: அனுஷா செல்வமணி

கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘ஆல்டர் டிசைன்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் ரோகிணியும் அவரது கணவரும் பூஜை மாடங்கள் அமைத்துத் தரும் பணியை செய்து வருகின்றனர்.

அத்துடன், சிலை விற்பனை, சிலைகளுக்கு சாயம் பூசுவது, தங்க முலாம் பூசுதல் போன்ற சேவைகளையும் வழங்குகின்றனர்.

ஆல்டர் டிசைன்ஸ் வழங்கும் பூஜை மாடங்கள்.
ஆல்டர் டிசைன்ஸ் வழங்கும் பூஜை மாடங்கள். - படம்: அனுஷா செல்வமணி

ஒவ்வொரு குடும்பத்தின் இஷ்ட தெய்வம், வீட்டின் அளவு, ஆன்மீக நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் பூஜை மாடங்களைத் தயாரிக்கிறார்கள்.

ஒரு மாடத்தைத் தயாரிக்கும்போது, அது வீட்டின் எந்தப் பகுதியில் அமைகிறது, அதன் அளவு, வடிவம், பயன்படுத்தப்படும் பொருள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்கிறார்கள்.

பூஜை மாடங்கள் பெரும்பாலும் ஒட்டுப்பலகை, திட மரத்தால் செய்யப்படுகின்றன. ஒரு மாடத்தைச் செய்ய ஒன்றரை மாதங்கள்வரை ஆகும் என்றார் ரோகிணி.

மாடங்களை அவர்கள் இங்கும் செய்கிறார்கள். மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் தயார்செய்தும் கொண்டுவருகிறார்கள். ஏற்கெனவே செய்யப்பட்ட மாடங்களும் அங்கு விற்பனைக்கு உள்ளன.

இளைய தம்பதிகள் பெரும்பாலும் எளிமையான வேலைப்பாடுகளை விரும்புவதாகச் சொன்னார் ரோகிணி.

“வாடிக்கையாளர்களின் நம்பிக்கைதான் எங்களது தொழிலுக்கு அடித்தளம். பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலம் வரும் வாடிக்கையாளர்களுடன், சமூக ஊடகக் காணொளிகளைப் பார்த்து எங்களை நாடுவோரும் உண்டு,” என்றார் ரோகிணி.

குறிப்புச் சொற்கள்