அரும்பும் திறனாளர்க்கு இடமளிக்கும் பகிர்வுத்தளம்

அரும்பும் திறனாளர்க்கு இடமளிக்கும் பகிர்வுத்தளம்

2 mins read
edfff08d-1800-4b56-91fb-e62e98e36e9d
25 வயது முஹம்மது நௌஃபிலின் ‘எத்ராம்’ தளம், மின்னிலக்க வேலையிடம், தரவு ஆய்வு ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளது. மேலாண்மை, திறன்மேம்பாடு போன்றவற்றை அது அளவிடுகிறது. - படம்: சுந்தர நடராஜ்

தனிமனிதர்களுக்குச் செறிவூட்டும் சமூகங்கள் இட, கால வரையறைகள் கடந்தும் படர்வதற்குப் புதிய பட்டதாரி முஹம்மது நௌஃபில், 25, உருவாக்கியுள்ள ‘எத்ராம்.காம்’ போன்ற தளங்கள் வகைசெய்கின்றன.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறையில் மூன்றாமாண்டு படித்தபோது முஹம்மது நௌஃபில், இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளார். 

‘எத்ராம்’ என்பது பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள், தங்களுக்குப் பிடித்த திட்டங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு தளம்.

முஹம்மது நௌஃபிலின் ‘எத்ராம்’ தளம், தற்போது முற்றிலும் கட்டணமில்லாமலும் லாப நோக்கற்ற முறையிலும் செயல்படுகிறது. 
முஹம்மது நௌஃபிலின் ‘எத்ராம்’ தளம், தற்போது முற்றிலும் கட்டணமில்லாமலும் லாப நோக்கற்ற முறையிலும் செயல்படுகிறது.  - படம்: சுந்தர நடராஜ்

“பல நிறுவனங்கள் அனுபவத்தையும் தகுதிகளையும் மட்டுமே எதிர்பார்க்கின்றன. ஆனால், முறையான அனுபவம் இல்லாத இளையர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் ‘எத்ராம்’  சிறந்த பாலமாகத் திகழ்கிறது,” என்று அந்த இளையர் கூறினார். 

விண்வெளித் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம், இந்த முயற்சிக்கான விதை.

“ஆனால், அதற்கான வாய்ப்புகளும் வழிகாட்டுதல்களும் எளிதாகக் கிடைக்கவில்லை,” என்று அந்த இளையர் கூறினார்.

தற்போது இந்தத் தளம் முற்றிலும் கட்டணமில்லாமலும் லாப நோக்கற்ற முறையிலும் செயல்படுகிறது. 

மின்னிலக்க வேலையிடம், தரவு ஆய்வு ஆகிய கூறுகளைக் கொண்டுள்ள ‘எத்ராம்’ தளம், மேலாண்மை, திறன்மேம்பாடு போன்றவற்றை அளவிடுகிறது.

பயனர்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் அவர்களின் சுயவிவரப் பக்கத்தில் தானாகவே பதிவாகும். இது அவர்களின் உழைப்பிற்குச் சான்றாகவும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பயன்படும் ‘கிட்ஹப்’ தளமாகவும் செயல்படுகிறது.

பலரும் அவரிடம் வருவாய் குறித்து கேள்வி எழுப்பியபோதும் அவர் லாபத்தை விடச் சமூகப் பங்களிப்பிற்கே முன்னுரிமை அளித்தார். 

தற்போதைய நிலையில்,  நௌஃபில் உட்பட ஆறு பேர் குழுவாக இணைந்து இந்தத் தளத்தை வெற்றிகரமாக இயக்கி வருகின்றனர்.

‘எத்ராம்.காம்’ இணையத்தளம்
‘எத்ராம்.காம்’ இணையத்தளம் - படம்: இணையம்

தனிநபர்கள் தங்களின் இருப்பிட எல்லைகளைக் கடந்து, உலக அளவில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அத்தியாயத்தை ‘எத்ராம்’ தளம் உருவாக்குகிறது.

சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் இளையர்கள், தங்களின் தனித்துவமான திறமைகளை இணைத்து ஒரே திட்டத்தில் கூட்டு முயற்சியாகப் பணியாற்ற இந்தத் தளம் வகைசெய்கிறது என்றார் நௌஃபில்.

இதன் மூலம், தனிமனிதர் ஒருவர் ஆறு மாதங்களில் செய்யக்கூடிய ஒரு பணியைவிட, பல நாடுகளைச் சேர்ந்த திறமையாளர்கள் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் தரமான படைப்பை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

இதனைச் சமூகச் சேவைக்குப் பயன்படுத்த எண்ணிய நௌஃபில், அதன் தொடர்பில் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

“இந்தத் தளம்வழி எதிர்காலத்தில் அதேபோன்ற தேவையுடைய பிற சமூக அமைப்புகளும் அந்த மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்திப் பயனடைய முடியும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்