பாரம்பரியமும் விளையாட்டும் ஒன்றுகலக்கும் முயற்சியாக, கோவில் பணியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியை இந்து அறக்கட்டளை வாரியம் முதல்முறையாக புதன்கிழமை (மே 21) நடத்தியது.
வாரியத்தின் கீழ் செயல்படும் நான்கு கோவில்களின் அர்ச்சகர்கள், நிர்வாகிகள், மற்ற ஊழியர்கள் ஒன்றுகூடி குழுப்பணி, உடல்நலம், நட்புறவைக் கொண்டாடிய இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், ஸ்ரீ சிவன் கோவில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களும், இரு மாற்று வீரர்களுடன் தலா 13 வீரர்களைக் கொண்ட அணிகளைக் களமிறக்கின.
அவ்வணிகள் தங்கள் கோயில் தெய்வங்களின் வாகனங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டிருந்தன. மாரியம்மன் கோவிலின் அணி சிங்க வீரர்கள், பெருமாள் கோவிலின் அணி கருட வீரர்கள், சிவன் கோவிலின் அணி நந்தி வீரர்கள், காளியம்மன் கோவிலின் அணி புலி வீரர்கள் என அழைக்கப்பட்டனர்.
ஊழியர்களின் நலனை அர்த்தமுள்ள நடவடிக்கைகள்மூலம் ஊக்குவிப்பதற்கான வாரியத்தின் வருடாந்தர இலக்குகளை நிறைவேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இப்போட்டி நடத்தப்பட்டது.
“கோயில் வளாகத்திற்கு வெளியே ஊழியர்களுக்குப் புதிய உற்சாகமளிக்கும் அனுபவத்தை வழங்க விரும்பினோம்.
“கிரிக்கெட் நமது சமூகத்தினரிடையே பிரபலமான விளையாட்டு என்பதால் அனைவரும் அதனையே தேர்ந்தெடுத்தனர்,” என்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் மூத்த மேலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரங்களாக அன்றாடப் பணிகளுக்கு அப்பாற்பட்டு, ஊழியர்கள் தங்கள் குறுகிய இடைவேளை நேரங்களில் மும்முரமாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“கிரிக்கெட் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இளமையில் அடிக்கடி விளையாடுவேன். இப்போது மீண்டும் எனக்குப் பிடித்த விளையாட்டில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
“இதற்கு இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் நன்றிகூற வேண்டும்,” என்றார் 51 வயதான அலங்காரப் பூசாரியும், சிவன் கோவில் அணியின் தலைவருமான திரு ஸ்ரீநாராயணன்.
“எங்களில் பலரும் இந்தியாவில் குடும்பங்களை விட்டுவிட்டு சிங்கப்பூரில் பணியாற்ற வந்தவர்கள். ஆனாலும், இன்று களத்தில், நாங்கள் அனைவரும் ஒரே பெரிய குடும்பம்போல் உணர்ந்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடுமையான வெயிலில்கூட கோவிலின் கார் நிறுத்தும் இடத்தில் தமது அணி பயிற்சி மேற்கொண்டதாக பெருமாள் கோவிலின் துணை அர்ச்சகரும் அணித்தலைவருமான திரு வெங்கடேசன், 34, கூறினார்.
“இந்தப் போட்டிக்கான பயிற்சி எங்கள் இளமைக் காலத்தை மீண்டும் நினைவூட்டியது. மேலும், எங்கள் அனைவருக்கும் இடையே ஆழமான ஒரு பிணைப்பையும் உருவாக்கியுள்ளது.
“எங்கள் அன்றாடப் பணிச்சுமையால் ஒருவருடன் ஒருவர் பேச நேரம் கிடைப்பதில்லை. ஆனால், இந்தப் போட்டி எங்களை ஓர் அணியாக ஒன்றிணைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.
போட்டியில் பெருமாள் கோவில் அணி முதலிடத்தை வென்றது. இரண்டாம் இடத்தை வைராவிமட காளியம்மன் கோவில் அணியும் மூன்றாம் இடத்தை மாரியம்மன் கோவில் அணியும் நான்காம் இடத்தைச் சிவன் கோவில் அணியும் வென்றன.
போட்டியின் சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெருமாள் கோவிலின் திரு பாஸ்கர் வென்றார்.
இப்போட்டிகளை ஒரு வருடாந்தர நிகழ்வாக மாற்றவும் சிங்கப்பூரிலிருக்கும் மேலும் பல இந்துக் கோவில்களை இதில் இணைக்கவும் இந்து அறக்கட்டளை வாரியம் திட்டமிட்டுள்ளது.