இந்தியக் கலாசாரத்தின் அணிவகுப்பாக நடந்தேறியது ‘திரெட்ஸ் ஆஃப் இந்தியன் டிரெடிஷன்’ கலை நிகழ்ச்சி.
நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் மே 9ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அச்சமூக மன்றமும் அதன் இந்திய நடவடிக்கை செயற்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்தன.
சிறப்பு விருந்தினராக நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லீ ஹுய் யிங் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமான ‘ரங்கோலி ராயா’ கோல படைப்பு, சித்திரைப் புத்தாண்டையும் நோன்புப் பெருநாளையும் இணைந்து கொண்டாட உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியாக, 1,600 பணை இலைகளைக் கொண்டு மூன்று மீட்டர் நீளத்திலும் மூன்று மீட்டர் அகலத்திலும் மயில் வடிவ ரங்கோலி ஒன்று உருவாக்கப்பட்டது.
இதை வழிநடத்திய வள்ளியம்மை அடைக்கப்பன், 48, “இந்திய, மலாய் கலாசாரங்களைக் கொண்டாடும் வண்ணம் கோலம் அமைந்தது,” என்று கூறினார்.
சிறு வயதிலிருந்து கோலக் கலையில் ஈடுபட்டுவரும் அவருக்கு இந்த அனுபவம் சவாலானதாக அமைந்தபோதும் சுவாரசியமாக இருந்ததெனப் பகிர்ந்துகொண்டார்.
“14 மணி நேர உழைப்பிற்குப் பிறகு கோலம் தயாரானது. என்னுடன் ஏழு பேர் இந்த முயற்சிக்காக அயராது உழைத்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம், ஆகிய இந்திய மாநிலங்களின் பாரம்பரியக் கலை அங்கங்கள் படைக்கப்பட்டன.
“என் 10 வயது மகனுக்கு இந்தியக் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்த இந்நிகழ்ச்சிக்கு அவரை அழைத்து வந்தேன்,” எனக் கூறினார் திருவாட்டி ரேவதி, 40.
சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள்வழி நிகழ்ச்சி குறித்து தெரிந்துகொண்ட அவர், நிகழ்ச்சியின் கலைப் படைப்புகள் தன் கண்களைக் கவர்ந்ததாகக் கூறினார்.
மற்றொருவரான தெய்வானை, 75, “ஒடிசி, மேற்கு வங்க நடன அங்கங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டன,” என்று சொன்னார்.
“அதோடு, பாரம்பரியக் கலைகளை அறிமுகப்படுத்தும் கலாசார ஆடை, ஆபரணங்களை விற்கும் சிறு கூடங்கள் என முழுமையான பாரம்பரிய அனுபவமாக எனக்கு இந்நிகழ்ச்சி அமைந்தது,” என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பலதரப்பட்ட வயதினர் பாரம்பரிய இசையான பறை, உறுமி போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டியது நெகிழ்ச்சியளித்ததாகக் கூறினர் சிங்கை ஜெய் முழக்கம் அமைப்பின் பிரதிநிதிகள் அறின் ஜெய் கண்ணன், சாந்தினி பரமசிவன்.
“இத்தகைய சமூக நிகழ்ச்சிகள், எங்கள் மனத்துக்கு நெருக்கமான பாரம்பரியக் கலைகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்க உதவுகின்றன,” என்று கூறினார் அறின், 22.
“சிறு பிள்ளைகள் முதல் முதியோர் வரை இன்று எங்கள் வாத்தியங்களை வாசிக்க முயன்றதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி,” என்று பாலர் பள்ளி முதல்வர் சாந்தினி, 24, கூறினார்.
ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சித்திரா துரைசாமி, “இந்தியக் கைவினைத்திறன், பாரம்பரியம், கலைகள், இசை, ஆகியவற்றுடன் சமூகத்தைக் கொண்டாடும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட இந்திய, சீன, மலாய் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர். இது நமது பல்லினச் சமூகத்தை எடுத்துக்காட்டும் விதமாக திகழ்ந்தது,” என்று கூறினார்.
ஒன்பது கலை அமைப்புகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடை அங்கங்களைப் படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருக்குக் கண்களுக்கான விருந்து மட்டுமல்லாமல், நற்சுவை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் மாம்பழத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்ததை ஒட்டி, நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு இனிய மாம்பழங்கள் காத்திருந்தன.
அவற்றோடு, பராட்டா, பிரியாணி, பனிக்கூழ், வேர்க்கடலை ஆகியவற்றையும் 650க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

