ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான, இந்து ஆலயங்களில் இறை வழிபாட்டிற்காகவும் ஆடப்பட்ட பாரம்பரியமிக்க ஒரு நடனக்கலை பரதநாட்டியம்.
ஆனால், கலைக்கு எல்லை இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம், முஸ்லிம் இளையரான சஹானா ஷாஹுல் ஹமீது, 21, தமது பரதநாட்டிய அரங்கேற்றத்தை மேடையேற்றியுள்ளார்.
மறைந்த தம் தாய்க்கு நன்றிசெலுத்து வகையில், அவரது பிறந்தநாளான மே 29ஆம் தேதியன்று, ‘நன்றி தாயே - ஓர் அர்ப்பணம்’ என்ற தலைப்பில் சஹானா இந்த அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
மொழி, பண்பாட்டிற்கு முதலிடம்
சிவில் சர்வீஸ் கிளப் அரங்கத்தில் நடந்தேறிய அந்த அரங்கேற்றம் மற்ற அரங்கேற்றங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருந்தது.
“பொதுவாக அனைத்து அரங்கேற்றங்களிலும் நடராசர் சிலை இருப்பது வழக்கம். ஆனால், எனது அரங்கேற்றத்தில் அச்சிலை இல்லை,” என்றார் குமாரி சஹானா.
சமயம் சார்ந்த அரங்கேற்றமாக இல்லாமல், மொழியையும் பண்பாட்டையும் முதன்மையாகக் கொண்ட அரங்கேற்றமாக இருக்க வேண்டும் என்பதே அம்முடிவின் பின்னிருந்த காரணம் என இவர் குறிப்பிட்டார்.
“இறை வழிபாட்டிற்கான பாடல்கள் இல்லாமல், தாய்மை, இயற்கை, தமிழ் ஆகிய கருப்பொருள்களைக் கொண்ட பாடல்களுக்கு நடனமாட முடிவெடுத்தேன்,” என்று இவர் சொன்னார்.
‘பரதா கலைகள்’ குழுவைச் சேர்ந்த தம் குருக்களான ஜெயந்தி, சுகந்தி கேசவன் சகோதரிகள் அரங்கேற்றத்தை இப்படி வித்தியாசமாக வடிவமைக்க ஊக்குவித்ததாகக் குமாரி சஹானா கூறினார்.
தாயால் பிறந்த ஆர்வம்
தமது ஐந்தாம் வயதிலிருந்து பரதநாட்டியம் கற்று வரும் குமாரி சஹானாவிற்கு அக்கலையின்மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது அவரது தாயார் சசிகலா ஷாஹுல் ஹமீதுதான்.
கருப்பைப் புற்றுநோய் காரணமாக 2022ஆம் ஆண்டு மறைந்த திருவாட்டி சசிகலாவிற்குப் பரதநாட்டியம்மீது கொள்ளைப் பிரியம் என்று கூறினார் குமாரி சஹானாவின் தந்தையார் ஷாஹுல் ஹமீது, 52.
“என் மனைவிக்குப் பரதநாட்டியம்மீது ஆர்வம் இருந்தபோதும் அவரால் அதைக் கற்க முடியாமல் போனது. ஆகையால், எங்கள் மகளைப் பரதநாட்டியம் கற்க வைக்க வேண்டுமென்று அவர் மிகவும் உறுதியாக இருந்தார்,” என்றார் திரு ஷாஹுல்.
ஐந்து வயதிலிருந்து இன்றுவரை ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதுகளைப் பெரும்பாலும் பரதநாட்டியத்திற்காகவே செலவிடுகிறார் குமாரி சஹானா.
“தொடக்கத்தில் பலமுறை வகுப்புகளுக்குச் செல்ல சோர்வாகவும் சோம்பலாகவும் இருக்கும். அப்போதெல்லாம், என் தாயார்தான் என்னை பரதநாட்டிய வகுப்புகளுக்குச் செல்ல ஊக்குவிப்பார்.
“காலம் செல்ல செல்ல, பரதநாட்டியம்தான் எனக்கு அன்றாட வாழ்வின் சவால்களிலிருந்து ஒரு புகலிடமாக மாறியது.
“மனவுளைச்சலைக் குறைக்கவும் பல்வேறு விழுமியங்களைக் கற்கவும் அது எனக்கொரு முக்கியத் தளமாக அமைந்தது. என் தாயாரின் துணை இல்லையேல் அதை நான் உணராமலேயே இருந்திருப்பேன்,” என்று குமாரி சஹானா பகிர்ந்துகொண்டார்.
சிஎச்ஐஜே தொடக்கப்பள்ளியில் இந்திய நடன இணைப்பாட நடவடிக்கையில் ஈடுபட்ட இவர், தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் பாடகர் குழுவிலும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் காற்பந்திலும் ஈடுபட்டார்.
இணைப்பாட நடவடிக்கைகள் மாறினாலும் பரதநாட்டியம்மீதான ஆர்வமும் ஈடுபாடும் இவரிடம் துளியும் குறையவில்லை.
வலுவான குடும்ப ஆதரவு
தம் மகள் பரதநாட்டியத்தில் ஈடுபட நெருங்கிய குடும்பத்தினரின் வலுவான ஆதரவு இருந்தபோதும், பிற உற்றார் உறவினர் முகம் சுளித்ததாக திரு ஷாஹுல் கூறினார்.
“இன்றுவரை எங்கள் உறவினர் பலருக்கு பரதநாட்டியம் என்பது இந்து சமயத்தைச் சார்ந்ததே என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களால் எங்கள் மகள் பொட்டு வைத்து, பரதநாட்டிய ஆடை அணிந்து நடனமாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார் அவர்.
“ஆனால், என் மனைவியின் ஆசையை நிறைவுசெய்ய நாங்கள் குடும்பமாக முடிவெடுத்து சஹானாவிற்கு ஆதரவு கொடுத்தோம்,” என்று அவர் கூறினார்.
“என் தாயார் இஸ்லாமியச் சமயத்தை ஆழமாகப் பின்பற்றுபவர். அவருக்குத் தொடக்கத்தில் இந்த அரங்கேற்றத்தின்மீது முற்றிலும் உடன்பாடு இல்லை.
“ஆனால், சஹானாவை மேடையில் கண்டவுடன் அவரது மனம் கரைந்தது. அதுபோல, பலரின் மனங்கள் மாறியுள்ளன என நம்புகிறேன். அதையும் இந்த முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறோம்,” என்றார் திரு ஷாஹுல்.
குடும்ப ஆதரவுச் சவால்கள் ஒருபுறம் இருக்க, உடல்நலம் சார்ந்தும் அரங்கேற்றத்தைச் செய்து முடிப்பதில் குமாரி சஹானாவிற்குச் சில சவால்கள் இருந்தன.
“என் ‘ஏசிஎல்’ தசை 2023ஆம் ஆண்டு கிழிந்துவிட்டது. உடல்நிலை சீரான பின்னர், நான் ஆடிய முதல் நடனமே என் அரங்கேற்றமாக அமைந்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்று இவர் கூறினார்.
“நடனப்பயிற்சியின்போது பல வேளைகளில் முட்டி வலிக்கும். மனத்தளவில் நிறைய சந்தேகங்கள் எழும். அவற்றுக்கு மேலாக, அன்றாடப் பணிச்சுமைகளைச் சமாளிப்பதும் கடினமாக இருந்தது.
“ஆனால், என் அம்மாவுக்காக இந்த அரங்கேற்றத்தைச் செய்ய வேண்டுமென உறுதியாக முடிவெடுத்தேன்,” என்று குமாரி சஹானா கண்கலங்கியவாறு கூறினார்.
குமாரி சஹானாவின் அண்ணன் நிஹால் ஷாஹுல் ஹமீது, 25, அந்த அரங்கேற்றம் தமக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்று சொன்னார்.
“என் தங்கை நடனமாடுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், அவள் ஒற்றைக் கலைஞராக ஆடுவதை முதல்முறை அரங்கேற்றத்தின்போதுதான் பார்த்தேன்.
“அதைக் கண்டபோது நேரம் போனதே தெரியவில்லை. மனத்திற்கு நெகிழ்ச்சியளித்த அனுபவம் அது,” என்றார் அவர்.
பயணத்தைத் தொடர விருப்பம்
அரங்கேற்றம் முடிந்த நிலையில், தற்போது குமாரி சஹானாவைப் பரதநாட்டிய வகுப்புகள் நடத்த அவரது குருக்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
“நான் சிறுமியாக இருந்தபோது, என் அம்மா என்னைத் தொடர்ந்து பல அரங்கேற்றங்களுக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
“ஆனால், இப்போது என் அரங்கேற்றத்திற்குப் பின், சிறுமியர் பலர் என்னிடம் வந்து அவர்களுக்கும் அரங்கேற்றம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் வந்துள்ளது என்று கூறியது மனத்திற்கு நிறைவளித்தது,” என்றார் குமாரி சஹானா.
அத்தகைய சிறுமியர்க்குப் பாடங்கள் கற்பிக்க அவரும் ஆவலுடன் இருக்கிறார்.
பரதநாட்டியத்தோடு நின்றுவிடாது, எதிர்காலத்தில் உடற்கல்வி ஆசிரியராகும் பயணத்தையும் இவர் தொடங்கவுள்ளார்.
இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து தேசிய கல்விக் கழகத்தில் உடற்கல்வித் துறையில் இவர் பட்டயக்கல்வி பயிலவுள்ளார்.
ஆசிரியர்கள் நிறைந்த குடும்பத்திலிருந்து வருவதால், தாமும் அப்பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் குமாரி சஹானா குறிப்பிட்டார்.
தாயார் தமிழாசிரியர், தமையன் உடற்கல்வி ஆசிரியர், தந்தையார் முன்னாள் வரலாறு, புவியியல் பாட ஆசிரியர், இந்நாள் சொங்ஹுவா உயர்நிலைப் பள்ளி துணைத் தலைமையாசிரியர்.
“குடும்பத்தில் அனைவரும் ஆசிரியர்களாக இருப்பதால் எனக்கும் அத்துறையின்மீது நிறைய மரியாதையும் ஆர்வமும் ஏற்பட்டது.
“அதனால், பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தகத் துறையில் பட்டயம் பெற்றிருந்தாலும், கல்வித்துறையில் தடம்பதிக்க விரும்புகிறேன்,” என்றார் குமாரி சஹானா.
எதிர்காலத்தில் தொழில்முறை ஆசிரியராகவும் நடனத்துறையில் தமது பயணத்தைத் தொடர இவர் விரும்புகிறார்.

