மறதிநோய் உள்ள முதியோரையும் அவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிப்போரையும் பாசம், கோபம், பயம் போன்ற உணர்வுகள் பிணைக்கின்றன.
அபிநய, அங்க அசைவுகள்வழி அந்த உணர்வுகளுக்கு உருக்கொடுத்து, கண்டோரின் மனத்தை உருக்கியது ‘அன்செட்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி.
அந்நிகழ்ச்சி அக்டோபர் 3, 4ஆம் தேதிகளில் அகம் தியேட்டர் லேபில் அரங்கேற்றப்பட்டது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ ஆகிய அமைப்புகளின் பரதநாட்டியக் கலைஞர்களை இந்தப் படைப்பு ஒன்றிணைத்தது.
ஷாம்ஜித் கிரணின் நடன வடிவமைப்பு, சாரு ஹரிஹரனின் இசையமைப்பில் உருவான இப்படைப்பு, விரைவில் மூப்படையும் மக்கள்தொகையால் ஏற்படும் சவால்களை எடுத்துரைக்கும் வகையில் மறதிநோயால் ஏற்பட்டுள்ள அவதியைச் சித்திரித்தது.
பண்டைய நாட்டிய வடிவமான பரதநாட்டியத்தின்வழி தற்கால விவகாரங்களைப் பற்றிய கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் எழுச்சியில் இந்தப் படைப்பும் அங்கம் வகித்துள்ளது.
மறதிநோய் பற்றிய உரையாடல்கள் கடினம் என்றாலும் அவை தேவை என்றும் பிறர் மனம் நோகாத வகையில் அரவணைப்பு உணர்வோடு அது பற்றிப் பேசலாம் என்றும் இப்படைப்பு சுட்டியது.
பேச்சுப் பயிற்சி மருத்துவரும் பரதநாட்டிய நிபுணருமான அனுஜா வரபிரசாத்தின் உருவாக்கத்தில் இந்த 75 நிமிடப் படைப்பு உருவானது.
மறதிநோய்க்கு ஆளான மூதாட்டியும் அவரைக் கவனித்துக்கொள்ளும் இளைய பெண் பராமரிப்பாளரும் நாட்டிய நாடகத்தில் இடம்பெற்றுள்ள முதன்மையான இரண்டு கதாபாத்திரங்களாக உள்ளனர்.
பராமரிப்பாளராக அனுஜா வரபிரசாத்தும் மூதாட்டியாக லட்சுமி கிருஷ்ணனும் பங்கேற்றனர். முதுமை மறதிநோயால் பாதிக்கப்பட்டிருந்த காலஞ்சென்ற தமது பாட்டி, தம் பேச்சுப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் பணி ஆகியவை இந்தப் படைப்புக்குத் தூண்டுகோலாக இருப்பதாகத் திருவாட்டி அனுஜா கூறினார்.
“நான் வலுவாக, உணர்வுபூர்வமாகச் சொல்ல நினைத்த கதை இந்த நிகழ்ச்சியில் படைக்கப்படுகிறது. சொல்லப்படாத கதைகளைக் கலைவழி சொல்வதே எனது குறிக்கோள்,” என்று அவர் கூறினார்.
“பரதநாட்டியம் பாரம்பரியக் கலை என்றாலும் பலதரப்பட்ட கதைகளைச் சொல்லும் ஆற்றல் வாய்ந்தது. அத்தகைய பேராற்றல் கொண்டுள்ள பரதநாட்டியம், வார்த்தைகளால் கூற இயலாத உணர்வுகளை வெளிப்படுத்தவல்லது,” என்றும் திருவாட்டி அனுஜா குறிப்பிட்டார்.
இந்தியச் சமூகத்தினரிடையே இன்னும் பரவலாகப் பேசப்படாத பிரச்சினையாகத் திகழும் மறதிநோயைக் குடும்பங்கள் பல, தனிமையில் கையாளத் திணறுவதாக அவர் கூறினார்.
“இந்த நோயறிதலுடன் ஒருவித களங்கமோ அவமான உணர்வோ இணைந்திருக்கக்கூடும். அத்துடன், மறதிநோயால் பாதிக்கப்பட்ட அன்புக்குரிய ஒருவரைப் பார்த்துக்கொள்கையில் ஏற்படும் சிக்கலான உணர்வுகளை ஏற்றுக்கொள்வதிலும் சிரமம் நிலவலாம்,” என்று அவர் கூறினார்.
காலங்காலமாகப் புராணக் கதைகளை மையப்படுத்தும் பரதக்கலை, தனிப்பட்ட, சமூக விவகாரங்களை முன்னிறுத்தும் போக்கு இயல்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதாகத் தாங்கள் கருதுவதாகத் திருவாட்டி லட்சுமி தெரிவித்தார்.
“மூப்பு, மறதி, குடும்பம் போன்ற கருப்பொருள்களைப் பரதநாட்டியம்வழி கையாள்வதால் அந்தக் கலை வடிவம் வழக்கமான ரசிகர் வட்டத்துக்கு அப்பாலும் செல்லக்கூடும்,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ், அனுஜா வரபிரசாத்தின் அணுகுமுறையைப் பாராட்டினார்.
“மறதிநோயால் பாதிக்கப்பட்ட பாட்டியை நேசித்த ஒரு பேத்தியின் பாச நெஞ்சம் இதில் குடிகொண்டுள்ளது. மருத்துவ மொழியாலும் அதிகாரபூர்வ நோயறிதல்களாலும் ஒருபோதும் முழுமையாக விவரிக்க முடியாத உணர்வுகளை வெளிக்கொணர, நமது மிகப் பழைமையான கலை வடிவங்களில் ஒன்றை அவர் கையாண்டுள்ளார்,” என்று திரு சாய் யின்சாவ் கூறினார்.
பரதநாட்டியத்திற்கு உரித்தான அலங்காரமான ஆடை அணிகலன்கள், ஜதிகள் போன்றவை இல்லாவிட்டாலும் பாரம்பரியக் கூறுகள் சிலவற்றைக் கண்டு மகிழ்வதாக 74 வயது கமலா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
“முத்துசுவாமி தீட்சிதர் கேதார ராகத்தில் புனைந்த ‘ஆனந்த நடன பிரகாசம்’ கீர்த்தனை, ‘பெற்ற தாய்தனை மக மறந்தாலும்’ எனும் வள்ளலாரின் திருவருட்பாப் பாடல், வல்லபாச்சாரியாரின் ‘அதரம் மதுரம்’ போன்றவை மிகவும் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருந்தன,” என்று கூறிய திருவாட்டி கமலா, “வள்ளலாரின் அந்தப் பாடலை இதைவிடப் பொருத்தமாக யாராலும் எதற்குமே பயன்படுத்தி இருக்க முடியாது,” என்றார்.
