ஆசியக் கலாசாரங்கள், குறிப்பாக இந்தியக் கலாசாரத்தில் இறப்பு அதிகம் பேசப்படாத தலைப்பாகவே இருப்பதால் துக்க மனநிலைக்கும், அன்புக்குரியவர் இழப்பினால் ஏற்படும் ஆழ்ந்த மனவேதனைக்குமான வேறுபாடுகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கருதுகிறார் பால் விக்டர் பட்டிநாதன்.
மரணம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள மனநலன் துறை வல்லுநரான அவர், இந்த வேறுபாடுகள் குறித்து விவரித்தார்.
“யாராவது இறந்துவிட்டால் நாம் வருத்தப்படுகிறோம். அது ஒரு சாதாரண சோகம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், மனவேதனை என்பது மிகவும் சிக்கலானது. அன்புக்குரிய ஒருவரை இழந்த பிறகு ஏற்படும் இந்த உணர்வு, பல ஆண்டுகள் கடந்தும் ஒருவரைப் பாதிக்கலாம்,” என்று விளக்கினார்.
இது 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவரை மிகக் கடுமையாகத் தாக்கக்கூடும். இது ஒருவரது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்போது, அது ‘நீண்டகால மனவேதனைக் கோளாறு’ என்று அழைக்கப்படுகிறது.
இழப்பைக் கையாளும் நிலைகள்
ஓர் இழப்பைக் கையாள்வதில் பொதுவாக இரு நிலைகள் உள்ளதாக பால் விக்டர் சொன்னார்.
முதலாவதாக, இறந்தவரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்துக்கொண்டிருப்பது, அவர்களுக்காக வழிபாடுகள் மேற்கொள்வது ஆகியவற்றை மேற்கொள்ளும் இழப்பு சார்ந்த நிலை.
அடுத்தது, அன்புக்குரியவர் மரித்த நிலையில் குடும்ப நிதிநிலையைக் கையாளுதல், அவர்கள் விட்டுச் சென்ற பணிகள், வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வது, அவர்கள் இல்லாத நிலையில் புதிய மரபுகளை உருவாக்குவது என வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகரும் முயற்சியை உள்ளடக்கிய மீட்டெடுப்பு சார்ந்த நிலை.
மரணம், இழப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவது, ஒருவரது மனநலத்திற்கு நல்லது என்றும் அது அமைதியான முறையில் இழப்பை எதிர்கொள்ள உதவும் என்றும் பால் விக்டர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இறப்பு குறித்த இந்தியச் சமூகப் பார்வை
“அனைத்துச் சமூகங்களிலும் இறப்பு குறித்த ஆலோசனைகள் நடப்பதில்லை. இந்தியச் சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல,” என்றார் பால் விக்டர்.
“இந்தியச் சமூகத்தில் மரணம் குறித்துப் பேசுவது தடையாக, அபசகுனமாகக் கருதப்படுகிறது. மரணம் நிகழ்ந்த வீட்டினர் உடனடியாகச் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், உண்மையில் அந்த நேரத்தில்தான் அவர்களுக்குச் சமூக ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது,” என்றார் அவர்.
இப்போதும் இறந்தவர்களின் குடும்பத்தினரை உடனடியாக அடுத்தடுத்த நல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதில் தயக்கம் நிலவுவதைச் சுட்டிய அவர், அத்தகையவர்களுக்குக் கடினமான சூழலில் சமூக ஈடுபாடு அவசியம் என்றும் அதற்கு இவ்வகை நிகழ்ச்சிகள் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனைச் சமூகம் அறிந்து நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஆறுதல்கள்
பலருக்கும் இழப்பைச் சந்தித்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் முறைகள், சொற்கள் பற்றிய புரிதல் இல்லை என்பதையும் பால் விக்டர் கோடிட்டுக் காட்டினார்.
“துக்கத்தில் இருப்பவர்களிடம், ‘இறந்தவர்கள் இப்போது நல்ல, மேன்மையான இடத்தை அடைந்துள்ளனர்’ என்றோ, ‘காலம் காயங்களை ஆற்றும்’ என்றோ கூறுவது ஆறுதலாக இருக்காது,” என்றார் அவர்.
அவற்றைக் கேட்கும்போது அவர்கள் கோபமடையக்கூடும் எனறும் சொற்களைவிட, அவர்களுடன் துணைநிற்பதே சரியான வழி என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

