பெருங்கொடையாளர்கள் ஆண்களா பெண்களா: விடைகாண முற்பட்ட பட்டிமன்றம்

பெருங்கொடையாளர்கள் ஆண்களா பெண்களா: விடைகாண முற்பட்ட பட்டிமன்றம்

2 mins read
b08d357a-c20f-469f-ae04-d49bafc6e8f6
பட்டிமன்ற நடுவர் யூசுப் ராவுத்தர் ரஜித். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
multi-img1 of 2

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேகம் 2026ஐ முன்னிட்டு, ஜூலை 22 புதன்கிழமை இரவு 8 மணியளவில் ஒரு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

‘தர்மம் செய்வதில் தாராளமானவர்கள் ஆண்களா பெண்களா’ என்ற கேள்விக்கு விடைகாணும் வகையில் அந்தப் பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 130வது பட்டிமன்றமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆண்கள் சார்பில் திரு இராம்குமார் சந்தானம், திரு மா. அர்ச்சுனன், செல்வி மோகன் ஹரிவர்த்னி ஆகியோரும், பெண்கள் சார்பில் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன், திருமதி சுவர்ணலதா ஆவுடையப்பன், செல்வன் ரகுநந்தன் ஆகியோரும் வாதிட்டனர்.

திரு யூசுப் ராவுத்தர் ரஜித் நடுவராக இருந்து நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

ராணுவத்தில் ஆண்கள்தான் முதுகெலும்பாகச் செயல்பட்டு நாட்டைக் காக்கிறார்கள் என்றார் செல்வி மோகன் ஹரிவர்த்னி. புராணங்களிலும் இதிகாசங்களிலும் தர்மங்கள் பெரும்பாலும் ஆண்களாலேயே நிலைநிறுத்தப்படுகின்றன என்றார் தமிழாசிரியர் மா. அர்ச்சுனன்.

வள்ளலாரின் தாராள மனத்தால் திறக்கப்பட்ட அன்னசத்திரங்களைப் பற்றி எடுத்துரைத்தார் அணித்தலைவர் திரு இராம்குமார் சந்தானம்.

பெண்களின் தாராள சிந்தனையில்தான் உலகமே உயர்கிறது என்றார் செல்வன் ரகுநந்தன். தாய்ப்பால் மிக அதிக அளவில் தானமாகப் பெறப்பட்டு, தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டப்படுகிறது என்றார் திருவாட்டி சுவர்ணலதா.

இல்லறம் நல்லறமாக இருப்பதற்குப் பெண்களே காரணம் என்றும் பணிப்பெண்கள் தங்களின் குடும்பங்களை உயர்த்த ஊர் பேர் தெரியாதவர்கள் பெற்ற குழந்தைகளைத் தம் குழந்தைகளைப் போல் வளர்க்கிறார்கள் என்றும் அணித்தலைவர் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் வாதிட்டார்.

முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன்.
முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், “கழுத்துக்கூட நிற்காத ஒரு குழந்தையை நாற்பது நாள்கள் மிகக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும். அந்த மாபெரும் தியாகத்தைச் செய்பவர்கள் பெண்கள்தான். என் அனுபவத்தில், இரவில் குழந்தை அழுதால் அம்மாவைத் தவிர வேறு யாரும் எழுந்து தொட்டிலை ஆட்டியதில்லை. தாய்மார்கள் இல்லையென்றால் மனிதகுலமே இல்லை. அது யாராலும் செய்ய முடியாத தர்மம். ஆகவே, தர்மம் செய்வதில் தாராளமானவர்கள் பெண்களே,” என்று நடுவர் யூசுப் ராவுத்தர் ரஜித் தீர்ப்பு வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்