நடன அரங்கேற்றத்தின் அடிநாதமாய்த் தமிழ் இலக்கியம்

நடன அரங்கேற்றத்தின் அடிநாதமாய்த் தமிழ் இலக்கியம்

3 mins read
24c3ef98-9cd1-4321-bdfb-8514d281e2ab
தாம் கைப்பட எழுதிய கவிதைத் தாளைக் கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாசுக்கு அன்பளிப்பாக வழங்கினார் நடனமணி ஸ்ருதிகா. - படம்: ஸ்ருதிகா குமார்

ஒவ்வொரு நடனமணிக்கும் அவரது அரங்கேற்றத்தைப் பற்றிய கனவு ஒன்று இருக்கும். அவ்வகையில், 22 வயது ஸ்ருதிகா குமாருக்குத் தனித்துவமிக்க ஒரு நிகழ்ச்சியைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.

சிறு வயதிலிருந்தே பரதநாட்டியத்தை அவர் முறையாகப் பயின்றுவருகிறார். கலைமீது உள்ள அதேயளவு நாட்டம் தமிழ் மொழி மீதும் அவருக்கு உண்டு எனில் அது மிகையாகாது. 

ஆகவே, அரங்கேற்றத்தைப் பற்றி தம் நடன ஆசிரியர் அபிராமி கலைச்செல்வனிடம் கலந்துரையாடியபோது, தமிழின் அழகை நடனம் மூலம் வெளிப்படுத்தலாமே என்று ஆசிரியர் முன்வைத்த யோசனை ஸ்ருதிகாவிற்கு மகிழ்ச்சி அளித்தது.

“பரதநாட்டியம் என்பது நடனக்கலை மட்டுமன்று; மொழி, இலக்கியம், அர்ப்பணிப்பு ஆகிய மூன்றையும் இணைத்து அவற்றிற்கு உயிர் கொடுக்கும் கலையாகும்,” எனக் குறிப்பிட்டார் திருவாட்டி அபிராமி. 

அவையினர் முன்னிலையில் நடனமிடும் ஸ்ருதிகா குமார்.
அவையினர் முன்னிலையில் நடனமிடும் ஸ்ருதிகா குமார். - படம்: ஸ்ருதிகா குமார்

கலை மற்றும் கலைஞர்களுக்கான நுண்கலைப் பள்ளியின்  (அனாஸ்ஃபா) கலை இயக்குநராகவும் கலைப்பிரிவுகளின் தலைவராகவும் பணியாற்றும் அவர், ஸ்ருதிகா தமிழின்மீது கொண்டுள்ள தீவிரப் பற்று, அரங்கேற்றத்தில் வெளிப்பட வேண்டுமென்ற நோக்கில், தமிழை அரங்கேற்றத்தில் சேர்த்ததாகக் குறிப்பிட்டார்.

‘பரதம் ஒரு யாகம்’ என்ற கருப்பொருளுடன் மே 24ஆம் தேதி, ஸ்ரீ ஸ்ரீநினிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் ஸ்ருதிகாவின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கலாஷேத்ரா பாணியில் ஸ்ருதிகாவின் அரங்கேற்றம் அமைந்ததால், மொத்தம் 10 அங்கங்கள் இருந்தன.

வழக்கமான அரங்கேற்றங்களைக் காட்டிலும், இதில் கூடுதலாக மூன்று அங்கங்கள் இருந்தன.

தொடர்புடைய செய்திகள்

தமது படைப்புகளின் மூலம், தமிழ்ப் பற்றைப் பார்வையாளர்களிடையே விதைக்க முனைந்தார் ஸ்ருதிகா.

‘செந்தமிழில் கவிபாடி உளமாற வரவேற்போம்’ என்ற வரிகளுடன் தொடங்கும் பாடலிற்கு ஜனவரவேற்பு அங்கத்தில் ஸ்ருதிகா நடனமாடினார்.

‘ஈரடிக் குறள் எடுத்து, நாலடியில் நடம் பயின்று, வாழ்த்துகின்றோம் வருகவே’, ‘எட்டுத்தொகை தேர்ந்தெடுத்து, செந்தமிழில் சொல் எடுத்து, பத்துப்பாட்டு பாடி இங்கு வாழ்த்துவோம்’ எனும் வரிகள் மூலம் தமிழர் கலாசாரத்தின் ஓர் உன்னதப் பண்பான விருந்தோம்பலை எடுத்தியம்பியதோடு தமிழ் இலக்கியப் படைப்புகளும் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டன.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பல்வேறு அபிநயங்களின் மூலம் மக்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துக்கூறுவது எளிதன்று.

எட்டுத்தொகை என்றால் எட்டு விரல்களைக் காட்டுவது, தொல்காப்பியத்தைக் குறிக்க புத்தகத்தைப் புரட்டுவது என, இலக்கியப் படைப்புகளை நளினத்தோடு ஆடி, மக்கள் மனங்களைக் கவர்ந்தார் ஸ்ருதிகா.

ஓர் அரங்கேற்றத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படும் வர்ணம், பதம், கீர்த்தனம் உள்ளிட்ட அங்கங்களில் தமிழ்ப் பாடல்களுக்கே அவர் நடனம் ஆடினார்.

அவரது அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாசுக்கு தம் கைவண்ணத்தில் ஓர் அன்பளிப்பை வழங்கவேண்டுமென்று தாமே எழுதிய தமிழ்க் கவிதையை அவர் வழங்கினார்.

தம் அரங்கேற்றத்திற்குப் பக்கபலமாகத் திகழ்ந்த தம் பெற்றோருக்கும் நடன ஆசிரியருக்கும் ஸ்ருதிகா நன்றியைத் தெரிவித்தார்.

“நான் தமிழ்மீது கொண்டிருந்த காதலை உணர்ந்து, அவர்தான் அரங்கேற்றத்தை இவ்வாறு செய்யலாம் என்று யோசனை கொடுத்தார். நான் துவண்டுபோகும் நேரங்களில், ஊக்கமூட்டினார்,” என்று ஆசிரியர் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஸ்ருதிகா.

அரங்கேற்றத்திற்கான தயாரிப்புப் பணிகள் ஒருபுறம் நடக்கையில், தமது இளநிலைப் பட்டக்கல்வியிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தேசியக் கல்விக் கழகத்தில் (என்டியு-என்ஐஇ) தமிழ் ஆசிரியராக அவர் படிப்பை மேற்கொண்டார்.

மலைபோல் குவிந்திருக்கும் வேலைகளை முடிக்கும்போது, அவருக்குப் பக்கபலமாக, மனத்திற்கு வலிமை சேர்த்தது தமிழே.

ஓராண்டுகாலமாக, தமிழ்க் கவிதைகளைப் படித்தும் எழுதியும் வருகிறார் ஸ்ருதிகா.

“நடன அரங்கேற்றத்திற்கான நாள் நெருங்கி வர, என்னுடைய உணர்வுகள் அனைத்தையும் கவிதைகள் மூலம் கொட்டித் தீர்த்தேன்,” என்றார் அவர்.

அரங்கேற்றத்தோடு சிலரது கலைப்பயணம் மெல்ல மெல்ல ஒரு முடிவைப் பெற்றுவிடும்.

ஆனால், “இது முடிவன்று, இதுதான் ஆரம்பம்,” என்று ஆணித்தரமாகக் கூறினார் ஸ்ருதிகா.

“இந்த அரங்கேற்றத்தின் மூலம் ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளேன். இதற்கு முன்னதாக, தமிழை நடனத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று சிறிதும் நினைத்ததில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலை மாதத்திலிருந்து, உயர்நிலைப் பள்ளியில் அவர் தமிழ் ஆசிரியராக பணிபுரியவுள்ளார்.

கலைகள்வழி, தமிழ் மொழியில் பொதிந்துள்ள அழகை மாணவர்களுக்கு எடுத்துக்கூற ஸ்ருதிகா திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, வேலைப் பயிற்சி மேற்கொண்டபோது, கரகாட்டம், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடன வகைகளின் மூலம் தமிழர் கலாசாரத்தைக் கற்றுகொடுத்த அனுபவம் இவருக்குண்டு.

அதை, தொடர்ந்து செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்