சிறப்புத் தேவையுடைய சிறுவர்களுக்கு அர்ப்பணிப்பு

2 mins read
இவ்வாண்டு தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் ‘40 வயதுக்குட்பட்ட 40 தலைவர்கள்’ திட்டத்தில் இடம்பெற்றுள்ளார், மூத்த தொழிற்சிகிச்சையாளர் திவ்யா பாலகிரு‌‌ஷ்ணன்.
fb8d8a28-e9dc-4157-bb05-553a1b52a885
இவ்வாண்டு தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் ‘40 வயதுக்குட்பட்ட 40 தலைவர்கள்’ திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மூத்த தொழிற்சிகிச்சையாளர் திவ்யா பாலகிரு‌‌ஷ்ணன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: தேசியச் சமூகச் சேவை மன்றம்

கடந்த எட்டு ஆண்டுகளாக ரெயின்போ நிலையத்தில் உடற்குறையுள்ள அல்லது சிறப்புத் தேவைகளைக் கொண்ட சிறுவர்களுடன் பணியாற்றி வருகிறார் மூத்த தொழிற்சிகிச்சையாளர் திவ்யா பாலகிரு‌‌ஷ்ணன், 32.

பள்ளிப் பருவத்தில் கற்றல் சிரமங்களை எதிர்கொண்ட சக மாணவருக்கு நண்பராக இருந்த அனுபவம், சிறப்புக் கல்வி ஆசிரியராக வேண்டும் என்ற இலட்சியத்தை திவ்யாவின் மனத்தில் விதைத்தது.

சிங்கப்பூர் பெருமூளைவாதக் கூட்டமைப்புப் பள்ளியில் சேவையாற்றிய அனுபவம் அதை இன்னும் வலுப்படுத்தியது.

ஒரு குழந்தைக்குச் சிகிச்சையளிக்கும் திவ்யா.
ஒரு குழந்தைக்குச் சிகிச்சையளிக்கும் திவ்யா. - படம்: ரெய்ன்போ நிலையம்

பின்னர் நண்பர் ஒருவர் மூலம் தொழிற்சிகிச்சை பற்றி அறிந்துகொண்டார் திவ்யா. தொழிற்சிகிச்சையாளரால் முழுமையான வகையில் பிறருக்கு உதவமுடியும் எனத் தெரிந்துகொண்டார்.

இதனால், இவரும் தம் நண்பரும் இணைந்து தொழிற்சிகிச்சைப் படிப்பை மேற்கொண்டனர். நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் பின்பு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்திலும் (எஸ்ஐடி) படித்த திவ்யா, எஸ்ஐடியில் அத்துறையில் தலைசிறந்த மாணவராகவும் தங்க விருது பெற்றவராகவும் தேர்ச்சிபெற்றார்.

பட்டப்படிப்புக்குப் பிறகு, முதலில் சிறப்புத் தேவையுடைய பெரியவர்களுடன் பணியாற்றினார். நாளடைவில், சிறப்புத் தேவைகள் கொண்ட சிறுவர்களுக்கு உதவ விரும்பி ரெய்ன்போ நிலையத்தில் இவர் சேர்ந்தார்.

“பெரியவர்களுடன் பணியாற்றியபோது நம்பகத்தன்மை, சுதந்திரம் போன்றவற்றைப் பற்றிக் கற்றேன். அவர்களுக்கு அர்த்தமுள்ள தொழில் என்பது சமையல், மற்ற வேலைவாய்ப்புகளை நல்கும் தொழில்.

“சிறுவர்களின் வேலையோ விளையாடுவது. விளையாட்டு மூலம் அவர்கள் கற்கின்றனர். எண், எழுத்து மட்டுமன்றி எவ்வாறு உடைகள் அணிவது, பல் துலக்குவது போன்ற அடிப்படைத் திறன்களையும் அவர்கள் கற்கவேண்டும்,” என்றார் திவ்யா.

அவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய ஆதரிப்பதே தொழிற்சிகிச்சையாளரின் பணி.

திவ்யா தன் பணியில் சிறுவர்களுடன் நேரடி சிகிச்சை சந்திப்புகளை நடத்துவார். அவர்களுடன் உடற்பயிற்சிக் கூடத்தில் விளையாடி அவர்களின் தசை வலிமையையும் பரந்த, நுண் அசைவுத் திறன்களையும் (gross, fine motor skills) வளர்க்கிறார். சில சிறுவர்களின் புலன்சார்ந்த தேவைகளுக்கேற்ப வகுப்பறைச் சூழலை மாற்ற திவ்யா பரிந்துரைப்பார்.

சக ஆசிரியர்களுடனும் துணைச் சுகாதாரத் துறையினருடனும் ஆலோசனைகளும் மேற்கொள்வார்.

“நேரம் என்பது எப்போதும் ஒரு சவால். சுய பராமரிப்பு, உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல், வகுப்பறைப் பங்கேற்பு எனச் சிறுவர்களைப் பலவற்றிலும் ஆதரிக்க வேண்டும். இதனால், நான் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பது அவசியம்,” என்றார் திவ்யா.

ரெய்ன்போ நிலைய உடற்பயிற்சிக்கூடத்தில் சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் திவ்யா பாலகிரு‌ஷ்ணன்.
ரெய்ன்போ நிலைய உடற்பயிற்சிக்கூடத்தில் சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் திவ்யா பாலகிரு‌ஷ்ணன். - படம்: ரெய்ன்போ நிலையம்
சிறுவருக்கு சிகிச்சையளிக்கும் திவ்யா (வலம்).
சிறுவருக்கு சிகிச்சையளிக்கும் திவ்யா (வலம்). - படம்: ரெய்ன்போ நிலையம்

இவரது பணியில் ஒரு முக்கிய அம்சம் உதவித் தொழில்நுட்பம். உடற்குறையுள்ள சிறுவர்களுக்குக் கண்கள்மூலம் சாதனங்களை இயக்கும் தொழில்நுட்பம், உண்ணும்போது கை நடுக்கத்தைக் குறைக்கும் சிறப்புக் கரண்டி போன்றவற்றை ரெய்ன்போ நிலையத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

“சிறப்புத் தேவைகளைக் கொண்ட சிறுவர்களைப் பொது இடங்களில் காண்பது வழக்கத்தைவிடக் குறைவு. ஏனெனில், அவர்களை வெளியே அழைத்துச் செல்வது பெற்றோருக்குச் சவாலாக இருக்கும். அவர்களின் பணியை எளிதாக்க சமூக ஆதரவு முக்கியம். இத்தகைய சிறுவர்களை உள்ளடக்கும் வகையில் நீச்சல், சுவர் ஏறுதல் போன்ற சமூகத்தில் உள்ள பல நடவடிக்கைகளை மாற்ற வேண்டும்,” என்றார் திவ்யா.

குறிப்புச் சொற்கள்