தீபாவளியின்போது அளவுடன் செலவிடுதல், உணவையும் மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்தல், உற்றார் உறவினருடன் இணைந்து விழாவைக் கொண்டாடுதல் ஆகிய நன்னெறிகளைக் குடும்பங்களுக்குப் புகட்டும் வண்ணம் ஆனந்த கண்ணன் நாடகக் குழுவின் ‘விலங்குகள் உலகில் தீபாவளி’ (Deepavali in Animal Land) புனைவு நாடகம் அமைந்தது.
நவம்பர் 14ஆம் தேதி 'அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாக அரங்கில் (Festive Arts Theatre) பிற்பகல் மூன்று மணிக்கும் மாலை ஐந்து மணிக்கும் நாடகம் இருமுறை அரங்கேறியது.
அனைவரும் கண்டு களிக்கும் வகையில் இந்த நாடகம் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டது.
அண்டைவீட்டாரைவிட வெகுசிறப்பாகத் தீபாவளி கொண்டாட வேண்டுமென விரும்பும் தாயார், சிறப்பு அலங்காரங்களுடன் வீட்டை மிளிர வைக்க விரும்பும் தந்தை, கைப்பேசியிலேயே மூழ்கிக்கிடக்கும் தம்பி; இந்தக் குடும்பத்தினரிடையே தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முயல்கிறார் மாயா.
குடும்பத்தினர் அனைவரும் தீபாவளியின் உண்மையான கொண்டாட்ட உணர்வைப் புரிந்துகொள்ளாமல் வாக்குவாதங்களில் ஈடுபடுவது மாயாவிற்கு வருத்தமளிக்கிறது.
அவருக்கு உற்சாகமளிக்க விலங்குகள் உலகிலிருந்து ‘அழகி’ என்ற மயில் வருகையளிக்கிறது. மாயாவின் குடும்பத்திற்கு மெய்யான தீபாவளி உணர்வைப் புரியவைக்க அழகி அவர்களை அதன் நிலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
அங்கு, குறும்பா, குறும்பி என்ற எறும்புகள், காலா என்ற காகம், சாம்பா என்ற சிங்கம் ஆகிய விலங்குகளிடமிருந்து குடும்பத்தினர் வெவ்வேறு நன்னெறிகளைக் கற்கின்றனர்.
சேமித்தல், இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல், அனைவருடனும் இணைந்து விழாக்களைக் கொண்டாடுதல் ஆகிய விழுமியங்களை நாடகம் எடுத்துரைத்தது.
முக்கிய நெறிகளை வேடிக்கையான முறையில் படைத்ததால் அரங்கில் கூடியிருந்த சிறு குழந்தைகள் முதல் மூத்தோர் வரை அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.
நாடகத்தில் ‘குறும்பா’ கதாபாத்திரத்தில் நடித்த அவா கண்ணன், 24, தீபாவளியின் சாராம்சத்தை உணர்த்தும் வகையிலான நாடகத்தில் நடித்தது நெகிழ்ச்சியளித்ததாகக் கூறினார்.
“நாடகத்தின்போது பிள்ளைகள் பலர் துடிப்புடன் மேடைக்கு வந்து நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் பங்கேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது,” என்றார் அவர்.
‘சாம்பா’ கதாபாத்திரத்தில் நடித்த 24 வயது சாந்தினி பரமசிவன் தமக்கு சிங்கத்தைப்போல நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது சுவாரசியமான அனுபவமாக அமைந்தது எனக் கூறினார்.
“பொதுவாக விலங்குகளைப்போல நடிக்க வாய்ப்பு அமையாது. இந்த நாடகம்வழி அதற்கான ஒப்பனையையும் ஆடைகளையும் அணிந்துகொண்டு நடிக்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
நாடகம்வழி சிறு பிள்ளைகளிடையே பாரம்பரியக் கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம், பறை இசைத்தல் போன்றவற்றையும் கொண்டுசேர்க்க முடிந்தது சிறப்பாகத் தோன்றியதென ‘காலா’ கதாபாத்திரத்தில் நடித்த சிவசங்கரி கூறினார்.
“இத்தகைய பாரம்பரியக் கலை வடிவங்களைச் சிறுவர்கள் பலர் இதற்குமுன் பார்த்திருக்க வாய்ப்பு அரிது. இந்நாடகம்வழி அவர்களுக்கு அவ்வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்கிறேன்,” என்றார் அவர்.
அர்ஜுன் கதாபாத்திரத்திலும் மாயா கதாபாத்திரத்திலும் நடித்த சஷ்வின் பிரசாத், மித்ரா அஜய் இருவருக்கும் பள்ளிப் பாடங்களுக்கு நடுவே நாடக ஒத்திகைகளைச் சமாளிப்பது கடினமாக இருந்தாலும் இந்த அனுபவம் மனநிறைவு அளித்ததாகக் கூறினர்.
“நாடகத்தில் உணர்த்தப்பட்ட முக்கிய விழுமியங்களை நடிக்கும் வேளையில் நானும் கற்றுக்கொண்டேன்,” என்று சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளி மாணவியான 15 வயது மித்ரா கூறினார்.
“மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் பயிற்சி செய்து, அனைத்தும் கைகூடி நாடகம் சிறப்பாக நிறைவடைந்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி (உயர்நிலை) மாணவர் சஷ்வின், 15.
