குடியிருப்புப் பேட்டைகளில் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வு மக்களை மகிழ்வித்த வண்ணம் இருக்க, நவம்பர் 1ஆம் தேதி 200க்கு மேற்பட்ட வட்டாரவாசிகள் குவீன்ஸ்டவுன் தீபாவளி ‘கார்னிவல்’ கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
லெங் கீ சமூக மன்றத்தின் கூடைப்பந்துத் திடலில் மாயஜாலம், பலூன் கோட்டை, சிற்றுண்டி உணவு, புகைப்படக் கூடம், ஆடல் பாடல் போன்ற அங்கங்களில் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், பிரபல சமையல் வல்லுநர் பாலா, சுவையான கோழி பிரியாணியைச் சமைத்துப் பரிமாறினார்.
லெங் கீ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த தீபாவளிக் கொண்டாட்டங்களில் குவீன்ஸ்டவுன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பொதுவாக தீபாவளிக்கு ஆடல், பாடல் அங்கங்களுக்கு ஏற்பாடு செய்துவரும் லெங் கீ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, இவ்வாண்டு புதுமையான ஒரு ‘கார்னிவல்’ பாணியில் தீபாவளியை குவீன்ஸ்டவுனில் வரவேற்றதாக செயற்குழுத் தலைவர் ஜலாலுதீன் பீர் முகம்மது கூறினார்.
“இதனால் இந்தியர்கள் மட்டுமின்றி மற்ற இனங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் வந்திருந்தார்கள்,” என்றார் அவர்.
கலை, விளையாட்டுக்கான ஐந்து கூடங்களுடன், ‘ஹெல்தி 365’ செயலியை அறிமுகப்படுத்திய சுகாதார அமைச்சின் கூடம், மோசடி தொடர்பான விழிப்புணர்வுக்கு சிங்கப்பூர் காவல்துறை கூடம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) கூடங்கள் ஆகியவை இடம்பெற்றன.
மாயஜால நிகழ்ச்சி, பலூன் கோட்டையை அதிக பிள்ளைகள் ரசித்தனர் என்று செயற்குழு உறுப்பினர் கவிதா பழனியப்பன் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“கொண்டாட்ட உணர்வில் குடியிருப்பாளர்கள் இணைந்ததைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளித்தது,” என்றார் அவர்.

