90 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள்

2 mins read
f033b53b-1a6d-4f38-ae23-2db533c842c7
வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாம். - படம்: ‘செஞ்சூரியன்’ நிறுவனம்

வெஸ்ட்லைட் நிறுவனத்தின்கீழ் இயங்கும் வெவ்வேறு தங்குவிடுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 90 வெளிநாட்டு ஊழியர்கள் மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு முகாம்களில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

12 வாரங்கள் வாராந்திர வகுப்புகளுக்குச் சென்று, தேர்வெழுதி இந்த இலவசப் பயிற்சி திட்டத்தை முடிப்பவர்களுக்கு பயிற்சி மேற்கொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ், வெஸ்ட்லைட் மண்டாய் உள்ளிட்ட தங்குவிடுதிகளில் நவம்பர் முதல் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டின் அனைத்துலகக் குடியேறிகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சின் ஆதரவில் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கும் ‘செஞ்சூரியன்’ நிறுவனம் இப்பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் மூலம் ஐஐடி முன்னாள் மாணவர் குழுவோடு இணைந்து செயற்கை நுண்ணறிவு குறித்த முகாம்களும் ‘எஸ்ஜி ஸ்கில்ஸ் ட்ரெய்னிங்க்‘ (எஸ்எஸ்டி) எனும் அமைப்போடு இணைந்து மின்னிலக்கத் திறன் மேம்பாட்டு முகாம்களும் நடத்தப்படுகின்றன.

பங்கேற்பாளர்கள் பணியிடங்களில் மின்னிலக்க வரைபடங்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றில் எளிய திருத்தங்களைச் செய்யவும் அடிப்படை கணினி பயிற்சிகள் உதவுகின்றன.

இது வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் திறனாக மட்டுமின்றி தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கும் ஆதரவாகவும் அமைகிறது.

மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு முகாம்களில் பங்கெடுக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு முகாம்களில் பங்கெடுக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ‘செஞ்சூரியன்’ நிறுவனம்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் தினசரி வாழ்வில் தொழில்நுட்பத்தைத் தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணிகளை விரைவுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதோடு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான மோசடிகளையும் போலிச் செய்திகளையும் அடையாளம் காண உதவும் அடிப்படை மின்னிலக்கப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

“நேரம், பணம், நிறுவன அனுமதி போன்ற காரணிகள் பல வெளிநாட்டு ஊழியர்களின் கற்றலுக்கு முட்டுக்கட்டையாக விளங்குகின்றன. அவற்றை முறியடித்து, கற்றலை எளிதானதாக மாற்றி, தங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அனைவருக்கும் வழங்குவதே இப்பயிற்சி திட்டத்தின் முதன்மை நோக்கம்” என்றார் எஸ்எஸ்டி அமைப்பின் நிறுவனர் அரவிந்த் டேனியல்.

2026 ஆம் ஆண்டு இத்திட்டத்தை விரிவுபடுத்தி, மேலும் பல தங்குவிடுதிகளிலிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இப்பயிற்சி திட்டத்தை வழங்க வெஸ்ட்லைட் நிறுவனம் முனைகிறது.

குறிப்புச் சொற்கள்