தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாயில்லா உயிர்களுக்கு கண்ணியமான இறுதிப் பயணம்

2 mins read
bdef5ea9-1c37-45dc-b996-abef71c18524
செல்லப் பிராணிகளின் இறுதிப் பயணத்திற்கு துணை புரியும் குணா. - படம்: சுந்தர நடராஜ்

உயிர் நீத்த செல்லப்பிராணிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கும் ஆதரவு வழங்கி, அந்த விலங்குகளின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி வருகிறார் திரு மணிமாறன் குணா, 32.

செல்லப் பிராணிகளுக்கு முறையான ஈமச்சடங்கைச் செய்யும் திரு மணிமாறன் குணா, 32.
செல்லப் பிராணிகளுக்கு முறையான ஈமச்சடங்கைச் செய்யும் திரு மணிமாறன் குணா, 32. - படம்: சுந்தர நடராஜ்

பெரும்பாலான நேரங்களில் பிராணியைத் தகனம் செய்த பிறகு அந்த அஸ்தியை கலசத்தில் வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

சிலர் தாங்கள் வளர்த்த பிராணிகளுடன் உணர்வுபூர்வமான நெருக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அதன் நினைவுகள் என்றும் மனத்தில் நிறைந்திருக்க அஸ்தியை பதக்கத்தில் அடைத்து, அதைக் கழுத்தில் மாட்டிக்கொள்ள விரும்புவார்கள்.

வேறு சிலருக்கு பிராணியின் பாத அச்சுகளையும் செய்து தரும் திரு குணா தனது பணியை ஒரு சேவையாகக் கருதுகிறார்.

இந்தியாவில் பொறியியல் கல்வி பயின்ற திரு குணா, சிறிது காலம் அத்துறையில் வேலை செய்துவிட்டு குடும்பச் சூழல் காரணமாக வெளிநாட்டில், படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடினார்.

வேலை தேடித் தருவதாகக் கூறி முகவர் ஒருவர் ஏமாற்றியதில் அவரது கனவுகள் நொறுங்கின.

வெளிநாட்டில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த குணாவுக்கு, சிங்கப்பூரில் சாலையோரம் மாண்டு கிடக்கும் விலங்குகளின் சடலங்களைப் பொறுக்கும் வேலை வாய்ப்பு இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

“முதலில் தயக்கமாக இருந்தது. என் அம்மாவுக்கு நான் வெளிநாட்டில் இப்படியொரு வேலை செய்ய வேண்டுமா என்றெல்லாம் கவலை இருந்தது,” என்றார் குணா.

எந்தப் பணியும் நல்ல பணிதான் என்ற நேர்மறையான எண்ணத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தார் குணா.

அது விலங்குகளைத் தகனம் செய்யும் பணி என்று அறிந்தவுடன் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டார் குணா. இருந்தாலும், அவருக்கு மற்றொரு சவால் காத்திருந்தது.

வேலை இடத்தில் அவர் மட்டுமே தமிழ் பேசுபவர் என்று அறிந்தவுடன் அவருக்கு வருத்தமாக இருந்தது. சரளமாக ஆங்கிலம் பேசத் தடுமாறும் குணாவுக்கு அது முதலில் ஒரு தடைக்கல்லாக இருந்தது.

வேலையின் நுணுக்கங்களுடன் ஆங்கில மொழியையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

“சேவை நாடி வருபவர்கள், உடன் வேலை செய்பவர்கள் ஆகியோருடன் ஆங்கிலத்தில் பேசி அத்திறனை வளர்த்துக்கொண்டேன். சில நேரங்களில் செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் எனக்கு ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்பும்போது அந்த வார்த்தைக்கு அதுதான் அர்த்தமென்று புரிந்துகொள்வேன்,” என்றார் குணா.

தனது பணி உணர்ச்சி நிறைந்த ஒன்று என்ற குணா வயதானவர்கள், பிள்ளைகள், தாங்கள் வளர்த்த பிராணி மாண்டவுடன் கண்ணீர் வடிக்கும் தருணங்களைப் பார்க்கும்போது தன் மனம் உருகும் என்றார்.

“மணமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தம்பதி, தங்கள் பிராணியைப் பறிகொடுத்த துயரம் தாளாது என்னிடம் அழுதனர். அவர்களுக்குக் குழந்தை இல்லை என்றும் அவர்களின் செல்லப்பிராணியை குழந்தையாக வளர்த்து வந்தார்கள் என்றும் அறிந்தபோது என் மனம் கலங்கியது,” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் குணா.

குறிப்புச் சொற்கள்