பொத்தோங் பாசிரில் உள்ள ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயம், ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலன்று லிட்டில் இந்தியாவில் பொதுமக்களுக்கு இலவசப் பிரசாதம் வழங்கும் நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.
புதன்கிழமை (ஜனவரி 15) பிற்பகல் கேம்பல் லேனில் ஒரு பெரிய கூடாரத்தை அமைத்து, ஆலய ஊழியர்களும் தொண்டூழியர்களும் இணைந்து கிட்டத்தட்ட 2,000 பேருக்கு புளிச்சாதம், கொண்டைக்கடலை வழங்கினர்.
மாலை 5.45 மணியளவில் தொடங்கிய பிரசாத விநியோகம், இரவு 8 மணியளவில் நிறைவுபெற்றது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தோடு (லிஷா) கைகோத்து ஆலயம் இத்தகைய முயற்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக ஆலயத் தலைவர் கே.ராமச்சந்திரா, 76, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது ஈராண்டுகள் இந்த வழக்கத்தை கடைப்பிடிக்க முடியாமல் போனதாகச் சொன்ன அவர், ஆலயத்தில் பிரசாதம் தயார் செய்யப்பட்ட பின்னர் லிட்டில் இந்தியாவுக்கு அது கொண்டு வரப்பட்டதாகக் கூறினார்.
“லிஷாவுடன் இணைந்து இதில் ஈடுபட்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பொதுமக்கள், குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்கள் ஆனந்தமாக வந்து பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர். அதைப் பார்த்தபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது,” என்று திரு ராமச்சந்திரா கூறினார்.

