பாட்டியின் தொலைந்துபோன சுருக்குப்பையால் ஏற்படும் குழப்பம், அதன்பின் மறைந்திருக்கும் கதையை மையமாகக்கொண்டு ஒரு நாடகம்.
கொடைக்கானலில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெறும் திகில் சம்பவங்கள், அவற்றின் பின்னணியில் மற்றொரு நாடகம்.
இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட இரண்டு மேடை நாடகங்கள், சிங்கப்பூர் ரசிகர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை (மே 17) படைக்கப்பட்டன.
‘கூத்தபிரான் நவபாரத் நாடகக் குழு’, தமிழ்நாட்டில் மேடையேற்றிய அந்த இரண்டு நாடகங்களை நீலமணி அறக்கட்டளையும் மாஸ்க் ஸ்டுடியோசும் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தன.
“தமிழகத்தில் படைக்கப்பட்ட தரமான மேடை நாடகங்களைச் சிங்கப்பூர் ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டுவருவதே எங்கள் நோக்கமாக இருந்தது,” என்றார் அறக்கட்டளையின் தலைவர் நீலமணி முத்துக்குமார்.
கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது இளையர்களின் வளர்ச்சிக்கான முதலீடு என்று நம்புகிறது நீலமணி அறக்கட்டளை.
ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்குத் தொடங்கியது ‘சுருக்குப்பை’ என்ற நாடகம்.
பாட்டியின் சுருக்குப்பையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தைத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் பேரன் அதைத் திருடிவிடுவதால் ஏற்படும் குழப்பம், அதனால் கோபம்கொள்ளும் பாட்டி, அதன் பின்னுள்ள தாத்தாவின் நினைவுகள் என நாடகம் பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நாடகத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தது. பின்பு கதையில் ஏற்பட்ட திருப்புமுனையால் நாடகம் சூடுபிடித்து இறுதிவரை கவனத்தை ஈர்த்தது.
அரங்கத்தில் சிரிப்பொலி, கைதட்டல், அழுகை என ரசிகர்கள் காட்சிக்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
சிறு இடைவேளைக்குப் பிறகு, இரவு ஏழு மணிக்கு இரண்டாவதாக சென்னையில் 2025ன் சிறந்த நாடகத்திற்கான விருது வென்ற ‘லீலா வினோதம்’ மேடையேறியது. அது மர்ம நாடகம்.
கொடைக்கானல் தேயிலைத் தோட்ட வீடொன்றில் வசிக்கும் அழகிய குடும்பம், அது எதிர்கொண்ட திகைக்கவைக்கும் சம்பவங்கள், அவற்றில் ஒன்றில் இறக்கும் தாய், அதனால் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றி அவதியுறும் தந்தை, அவருக்கு உதவ முயலும் மகள், திகில் சம்பவங்களுக்குப் பின்னுள்ள ரகசியம் என்று விறுவிறுப்பாக நகர்ந்தது நாடகம்.
தொடக்கம் முதல் இறுதிவரை சுவாரசியமாக இருந்தது ‘லீலா வினோதம்’ நாடகம். ரசிகர்கள் இருக்கையின் நுனியில் அமர்ந்து கதாபாத்திரங்களுடன் ஒன்றிக் கூர்ந்து பார்த்தது அதற்குச் சான்று.
இரண்டு நாடகங்களிலும் ஒளி, ஒலி அமைப்பு சிறப்பாக இருந்தது.
“இரண்டு நாடகங்களிலும் பல உணர்வுகள் கலந்திருந்ததால் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றைப் பார்த்தபோதும் சலிப்புத் தட்டவில்லை,” என்றார் 22 வயது அனகாபுத்தூர் கண்ணன் வைஷ்ணவி லட்சுமி. நாடகங்களைக் கண்டுகளித்த ரசிகர்களில் அவரும் ஒருவர்
“இது போன்ற புகழ்பெற்ற, விருது பெற்ற நாடகங்கள் சிங்கப்பூரில் மேடையேறும்போது மக்கள் அவற்றைப் பார்க்க வருவதால் அவர்களுக்கு மேடை நாடகங்கள்மீது ஆர்வம் ஏற்பட வாய்ப்புண்டு,” என்றார் குமாரி வைஷ்ணவி.
“அதைத் தொடர்ந்து, அவர்கள் சிங்கப்பூர் நாடகங்களைப் பார்க்க முன்வரவும் வாய்ப்புண்டு. ஆகையால் இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டுமென விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
கூத்தபிரான் நவபாரத் நாடகக் குழுவின் தலைவர், ரத்தினம் கூத்தபிரான், “சிங்கப்பூரில் எங்கள் நாடகங்களை மேடையேற்ற வாய்ப்புக் கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கூறினார்.
சிங்கப்பூரில், தமது குழுவின் 41ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியக் கலைப் படைப்புகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவரும் முயற்சி தொடரும் என்று நீலமணி அறக்கட்டளை தெரிவித்தது.

