சமூக ஒருங்கிணைப்பை வெளிப்படுத்திய காற்பந்துப் போட்டிகள்

2 mins read
ae72b25d-1879-4e38-b1fa-792c06758064
‘டாக்டர் பாலாஜி சதாசிவன் ஃபுட்பால் ஃபைவ்ஸ்’ வருடாந்தரக் காற்பந்துப் போட்டி, டிசம்பர் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவன் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.  - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 3

இளையர் மற்றும் சமூக ஈடுபாட்டைப் பெரிதும் ஆதரித்த காலஞ்சென்ற அமைச்சர் டாக்டர் பாலாஜி சதாசிவனின் நினைவில் ‘டாக்டர் பாலாஜி சதாசிவன் ஃபுட்பால் ஃபைவ்ஸ்’ வருடாந்தரக் காற்பந்துப் போட்டி நடைபெற்றது.

இவ்வாண்டிற்கான போட்டி, டிசம்பர் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ‘கிக் ஆஃப் (Kick-Off!) @ கோவன்’ விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. 

மக்கள் கழக இந்தியர் நற்பணிப் பேரவையுடன் இரண்டாவது முறையாக இணைந்து சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ஏற்பாடு செய்த இந்தக் காற்பந்து விளையாட்டுப் போட்டியில் 270 க்கு மேற்பட்ட இளையர்கள் களமிறங்கினர். 

இவ்வாண்டு 35 வயதுக்கு மேல் மற்றும் கீழ் உள்ள ஆண்களை உள்ளடக்கிய புதிய பிரிவு அறிமுகம் கண்டது. மேலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 21 வயதுக்குக் குறைவான ஆண்கள் பிரிவு, 35 வயதுக்குக் குறைவான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் என மொத்தம் ஐந்து பிரிவுகளில் இம்முறை 38 குழுக்கள் போட்டியிட்டன.

இளையர்களையும் சமூகத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனும் அமரர் டாக்டர் பாலாஜி சதாசிவனின் நோக்கத்துக்கு ஏற்ப, இந்தக் காற்பந்துப் போட்டிகள் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன என்றார் இந்தியர் நற்பணிப் பேரவை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சிவசங்கர் சுப்ரமணியம். 

“பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இவ்வாண்டு புதிதாக ஆண்களுக்கான ஒரு பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றார் சிவசங்கர். 

இளையர்களின் ஒற்றுமை, நல்ல பழக்க வழக்கங்களை பறைசாற்றும் டாக்டர் பாலாஜி சதாசிவனின் நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் அவருடைய மனைவி டாக்டர் மா ஸ்வான் ஹூ, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.   

அரசாங்க வேலையிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்ற செல்வதுரை கிருஷ்ணன், 74, புதிதாக அறிமுகம் கண்ட 35 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவில் விளையாடினார். 

“இளையர்கள் பலருடன் இணைந்து இந்தப் போட்டியில் பங்கேற்றது மிக உற்சாகமான ஓர் அனுபவம். அவர்களுடைய ஆர்வம் எனக்குப் பெரிய உந்துதலாக அமைந்தது,” என்றார் செல்வதுரை. 

பெண்கள் பிரிவில் பங்கெடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்த ‘ஜிலேபி கேர்ள்ஸ்’ குழுவின் விளையாட்டாளர் கேய்ட்லின் ஆறுமுகம், 23, “காற்பந்து போன்ற விளையாட்டுகளில் பெண்களுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை இதுபோன்ற போட்டிகள் எடுத்துக்காட்டுகின்றன,” என்றார். 

குறிப்புச் சொற்கள்