மருத்துவமனையில் என்றுமே தான் கனிவாகச் செயல்பட வேண்டும் என்ற மனவுறுதியுடன் 28 வயது ஹாஜா ஷரிஃப் மஹினா ஹசீன் உள்ளார்.
இவருக்கு டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் முதுகலைப் பட்டம் அண்மையில் வழங்கப்பட்டது.
இவ்வாண்டின் டியூக்-என்யுஎஸ் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்து விருது பெற்ற 90 பட்டதாரிகளில் மஹினாவும் ஒருவர்.
ஜூன் 1 ஆம் தேதி நீ ஆன் கொங்சி உள்ளரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு நிகழ்ச்சி, டியூக்-என்யுஎசின் வரலாற்றில் முதன்முறையாக ஆக அதிகமான பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கியது.
பட்டம் பெற்றவர்களில் 62 முதுகலைப் பட்டதாரிகள், 15 முனைவர் பட்டதாரிகள், 5 முதுகலை-முனைவர் பட்டதாரிகள், புதிதாகத் தொடக்கப்பட்ட ‘அனைத்துலக மருத்துவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அறிவியல்’ துறையில் முதுகலை (Master’s of International Translational Medicine Programme) பட்டத்தைப் பெற்ற 8 பட்டதாரிகள் ஆகியோர் அடங்குவர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதர் திரு ஜானத்தன் கேப்லன் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பயின்று இளநிலைப் பட்டம் பெற்ற மஹினா, அதற்குப் பிறகு மேலும் படித்து தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டதாக சொன்னார்.
மருத்துவப் படிப்பின் மூன்றாம் ஆண்டில் பக்கவாதத்தைப் பற்றித் தன் ஆராய்ச்சி செயல்திட்டத்தை மஹினா மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இளம் வயதிலேயே பக்கவாத நோயாளியான அவரின் பாட்டி அவதிப்பட்டதை மஹினா சிறுவயதில் கண்டதால், பக்கவாத சிகிச்சைக்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உறுதி கொண்டுள்ளார்.
“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிலர் குணமடைந்து மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள், வாகனம் ஓட்டுகிறார்கள். ஆனால் சிலரோ, என் பாட்டியைப் போல் படுத்த படுக்கையாகவே இருக்கிறார்கள்.
“இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இதுபோன்ற கேள்விகளுக்கு என் மருத்துவப் படிப்பின் மூலம் நான் பதிலைக் கண்டறிந்தேன்,” என்றார் மஹினா.
தன் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட அதே நேரத்தில், மஹினா ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கதைகளையும், கவிதைகளையும் இணையத்தில் வெளியிட்டார்.
மேலும், முஸ்லிம் பெண்களை மையமாகக் கொண்ட ‘பியோண்ட் த ஹிஜாப் எஸ்ஜி’ வெளியீட்டுத் தளத்திற்குத் தன் இந்திய முஸ்லிம் அடையாளத்தைப் பற்றியும் நிறைய எழுதியுள்ளார்.
“ஆங்கிலத்தில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு பொருள்தான் இருக்கும். ஆனால், தமிழில் ஒரு வரியை எழுதினால் அதற்குப் பல அர்த்தங்கள் இருக்கும். அதுவே தமிழ் மொழியின் அழகு,” என்றார் மஹினா.
சிங்கப்பூரில் அதிகபட்சம் மக்கள் ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் முதலாளிகள் இல்லாமல் மருத்துவமனைக்குத் தனியாக வந்திருக்கும் இந்தியப் பணியாளர்களுடன் பேசுவதற்குத் தமிழ் மொழி தனக்கு உதவியாக இருக்கும் என்றார் மஹினா.
“எதிர்காலத்தில் மருத்துவராக விரும்பும் மாணவர்கள் எதற்காக இந்தத் தொழிலில் பணிபுரிகிறோம் என்பதை நன்கு தெரிந்திருப்பது முக்கியம்.
“நம் அறிவை மற்றவர்களின் நலனுக்காக பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து அவர்கள் பாடுபட வேண்டும்,” என்று வலியுறுத்தினார் அவர்.
படிப்பை முடித்துவிட்டு மருத்துவ உலகிற்குள் முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் மஹினா, தான் மருத்துவமனையில் பெறும் அனுபவங்களைக் கொண்டு தொடர்ந்து வாழ்நாள் கற்றலை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

