சிங்கப்பூர் தேசிய டிராகன் படகுக் குழுவைத் தவிர்த்து சிங்கப்பூரில் பொது மக்களுக்கு மாலை 6 மணிக்குப் பிறகு படகோட்ட அனுமதி இல்லாத நிலையில், இவ்வாய்ப்பை வழங்கியது ‘பேஷன் வெவ்’ அமைப்பு ஏற்பாடு செய்த ‘குளோ பாடேல்’ நிகழ்ச்சி.
2023ல் தனது 50ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ‘பேஷன் வெவ்’ அமைப்பு, இவ்வாண்டும் சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சியின்வழி பங்கேற்பாளர்களால் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட டிராகன் படகுகளில் நட்சத்திரங்களின்கீழ் தங்களது நெருங்கியவர்களுடன் படகோட்ட முடிந்தது.
ஜூன் 8, 15ஆம் தேதிகளில் 350 பங்கேற்பாளர்களுடன் இந்த படகோட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் மரினா பே சுற்று வட்டாரத்தைப் படகுகளில் இருந்தபடி வலம் வந்தனர்.
இவ்வாண்டின் நிகழ்ச்சி ‘ஐலைட்’ கண்காட்சியுடன் சிறப்பாக ஒன்றிவிட்டதாக உணர்ந்தார் நிகழ்ச்சியின் தொண்டூழியர்களில் ஒருவரான 29 வயது மரிசா லாவண்யா.
“பொதுவாக ஐலைட் கண்காட்சிகளைத் தரையிலிருந்து பார்த்திருப்போம். ஆனால், அவற்றை நீரிலிருந்து பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட ஓர் அனுபவம். டிராகன் படகோட்டம் ஒரு குழு நடவடிக்கை. அதில் தனியாகவோ சிறு குழுவாகவோ ஈடுபட இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.
பங்கேற்பாளர்களுள் மற்றொருவரான 73 வயது முன்னாள் ஒளிபரப்புப் பொறியாளர் ரஷீத் இப்ராஹிம், இந்நிகழ்ச்சி இனிவரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடக்க வேண்டுமென விரும்புகிறார்.
“எனது தேசிய சேவை நாட்களிலிருந்து நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், இதுவரை இரவில் படகோட்டும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இந்நிகழ்ச்சி வழி அதை செய்வது நெகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு உறுப்பினர்களுள் ஒருவரான 52 வயது தர்மலிங்கம் சொக்கலிங்கம், இந்நிகழ்ச்சியைப் பாதுகாப்பாக நிகழ்த்துவதில் பல சவால்கள் இருந்தாலும், அது பெறும் வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்.
“இந்த படகுகளில் பொருத்தப்படும் விளக்குகள் பாதுகாப்பு, அழகு என இரு அம்சங்களையும் மனதில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன.”
“இவ்விளக்குகள் பற்பல வண்ணங்களில், குறைந்தது 50 மீட்டர் தொலைவிலிருந்து படகுகள் தென்படும் வகையில் பொருத்தப்படுகின்றன. அவற்றை எங்கள் இளைய மாணவ தொண்டூழியர்களே வடிவமைக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இந்நிகழ்ச்சியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்று பேஷன் வெவ் கூறியது.

