பாடல் கலைஞரான தம்மை மேடையில் காண்போர் தமது குரலை கேட்பது மட்டுமன்றி, தமது தோற்றத்தையும் கண்டுமகிழ வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் அனுபவமிக்க பாடகரான கிருஷ்ணசாமி மருதையா, 72.
சிங்கப்பூர்க் கடற்படையில் 24 ஆண்டுகள் சேவையாற்றிய இவர், 1982ல் தமது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
தொலைக்காட்சியில் கலைத்திறன் பாடல் போட்டியில் பங்குபெற்ற இவர், அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பாடுவதற்குப் பல வாய்ப்புகளைப் பெற்றார்.
“நான் பாடிய பாடல்களில் எனக்கு ‘தோட்டக்கார சின்ன மாமா’ என்ற பாடல் மிகவும் பிடிக்கும். அப்பாடலின் படப்பிடிப்பு வெளிப்புறத்தில் நடைபெற்றது,” என்றார் திரு கிருஷ்ணசாமி.
ஒவ்வொரு பாடல் நிகழ்ச்சியிலும் ஆடை அணிகலன்கள் மட்டுமல்லாது தலையில் அணியும் தொப்பியிலிருந்து காலில் அணியப்படும் காலணிகள்வரை அனைத்திலும் இவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
“மேடையில் நின்றுகொண்டு பாடலைப் பாடும்போது மக்கள் நம் குரலை மட்டும்தான் கேட்பார்கள். அது ஒரு கலைப்படைப்பாகாது. தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாடல்களைப் பாடும்போது அப்பாடல் காட்சிகளைப் பிரதிபலிக்க வேண்டியதும் நம் பொறுப்பு,” என்கிறார் இவர்.
ஆகவே, நடிகர்கள் போலவே பாடகர்களும் உடை அணிந்து, பாடலுக்கேற்ப அபிநயம் பிடித்தால் ரசிகர்களின் மனத்தைக் கவரலாம் என்று திரு கிருஷ்ணசாமி நம்புகிறார்.
மேலும், “பாடலுக்காக நான் என்னைத் தயார் செய்யும்போது, பாடகர்களின் குரலை உன்னிப்பாக கவனிப்பேன். அதன்மூலம், அவர்களின் குரல் எனக்குப் பழக்கமாகிறது,” என்றும் இவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
காலப்போக்கில் பாடல்கள் கேட்பதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. முன்பு நாம் ஒரு பாடலைப் பாட விரும்பினால் ஏதேனும் ஓர் இசைக்குழுவை நாடவேண்டியிருக்கும்.
ஆனால், இப்போது திரு கிருஷ்ணசாமி தம் நண்பர்களுடன் கரவோக்கே நிகழ்வுகளுக்குச் சென்று பாடி மகிழ முடிகிறது என்கிறார்.
“மேடையில் பாடும்போது எந்தத் தவறும் செய்யக்கூடாது என்பதற்காக பலமுறை பயிற்சி மேற்கொள்வேன்,” என்கிறார் திரு கிருஷ்ணசாமி.
மக்கள் தரும் ஆதரவு தம்மை இன்னும் பாடுவதற்கு ஊக்குவிப்பதாகக் கூறும் இந்த இசைக்கலைஞர், பாடுவதற்கு வயது வரம்பு கிடையாது என்றும் சொல்கிறார்.

