திட்டமிடாத பாதையில் வாழ்க்கை தம்மை அழைத்துச் சென்றபோதும் கட்டட வடிவமைப்பாளராக வேண்டும் என்ற தமது நீண்டநாள் கனவை நனவாக்க உறுதியாக உள்ளார் 28 வயது ராஜப்பன் கார்த்திகேயன் ப்ரீத்தி.
இந்தியாவில் 1996ஆம் ஆண்டு பிறந்த ப்ரீத்தி, நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது தம் பெற்றோருடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.
தொடக்கக் கல்லூரிவரை சிங்கப்பூரில் படித்தார். பின்னர், பெற்றோரின் எண்ணப்படி அவரும் அவரின் தங்கையும் இந்தியாவில் படிப்பைத் தொடர்ந்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயில விரும்பிய ப்ரீத்தியால் குடிசார் பொறியியல் துறையில்தான் சேர முடிந்தது. குடிசார் பொறியியலில் அதிக ஈடுபாடு இல்லையென்றாலும் தந்தையின் அறிவுறுத்தலாலும் இருதுறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளாலும் அந்தப் படிப்பை மேற்கொள்ள ப்ரீத்தி முடிவு செய்தார்.
பட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூர் திரும்பிய ப்ரீத்தியிடம் வேலையில் சேர வேண்டும், இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அவரின் பெற்றோர் விதித்தனர்.
பெற்றோரைச் சமாதானப்படுத்தி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியலில் முதுநிலைப் படிப்பை 2021ல் மேற்கொள்ள முடிவுசெய்தார்.
எனினும், கட்டடக்கலை மீதான ஆர்வம் தணியாததால், சிக்காகோவில் கட்டடக்கலை தொடர்பான ஓர் அறிமுகப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அந்த ஒருமாத காலத்தில் கட்டடக்கலைமீது அவருக்குள்ள ஈடுபாட்டை அவர் தெளிவாக உணர்ந்தார்.
அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு சிங்கப்பூர் சாம்சுங் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியத் தொடங்கியபோது அனைத்துலக கொரிய உபகாரச்சம்பளத் திட்டம் பற்றி ப்ரீத்திக்குத் தெரியவந்தது.
விண்ணப்பிக்க இரண்டு வாரங்களே இருந்த நிலையில் அவருக்குள் பல குழப்பங்கள்.
“குடும்பத்தில் மூத்த பெண். குடும்பத்தை விட்டுப் பல ஆண்டுகள் தொலைவில் இருக்க நேரிடும் என்பது போன்ற பல கேள்விகள், இருந்தாலும் என் கனவை நனவாக்க நான் முடிவு செய்தேன்,” என்றார் அவர்.
அந்தத் திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்குச் சிங்கப்பூரிலிருந்து தேர்வான எழுவரில் ஒரே இந்தியர் ப்ரீத்தி.
“என் பெற்றோருக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தபோதும் எனது உறுதியைக் கண்டு தங்களது முழு ஆதரவை அளித்தனர்,” என்று ப்ரீத்தி கூறினார்.
தென்கொரியாவிற்குச் சென்ற ப்ரீத்தி, கொரிய மொழிப் புலமைத் தேர்வில் மூன்றாவது முறை தேறினார். வரும் செப்டம்பர் மாதம் சொங்கியுங்குவான் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் முதுகலை படிப்பை ப்ரீத்தி தொடங்கவிருக்கிறார்.
வெளிநாட்டில் படிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், ஒரு புதிய கலாசாரத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள இத்திட்டம் கைகொடுக்கும் என்று சொன்னார்.
“இங்கு வந்த பிறகு கொரிய, தமிழ் கலாசாரங்களிடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக்கூட நான் கவனித்திருக்கிறேன். உதாரணத்திற்கு, தமிழர்களுக்கு ஊறுகாய் இருப்பது போல கொரிய மக்களுக்கு கிம்ச்சி,” என்று குறிப்பிட்டார் ப்ரீத்தி.
படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் திரும்பிக் கட்டடக்கலைத் துறையில் பணிபுரியத் திட்டமிட்டுள்ளார்.
“எல்லோரும் தங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைய ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை வகுத்துக்கொள்வர். நான் அதைச் செய்யவில்லையே என்று பலமுறை நினைத்து வருந்தியுள்ளேன். ஆனால், அனைவரின் பயணங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் நம்முடைய இலக்குகளைக் கண்டிப்பாக ஒருநாள் அடையலாம்,” என்றார் ப்ரீத்தி.
பெற்றோரின் ஆதரவும் தமக்கு வலுசேர்க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ப்ரீத்தி.

