சூடுபிடிக்கும் டுரியான் விற்பனை

சூடுபிடிக்கும் டுரியான் விற்பனை

2 mins read
‘டெக்கா’ போன்ற வகைகளை நாடும் பிரியர்கள்
bb1cb2a1-b486-4194-9940-e3a732395642
டுரியான் பழத்தைச் சுவைத்துப் பார்க்கும் வாடிக்கையாளர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டுரியான் பழங்களில் பல வகைகள் இருந்தாலும் ‘முசாங் கிங்’, ‘டெக்கா’ என்று அழைக்கப்படும் ‘முசாங் குவீன்’,’பிளாக் தார்ன்’,‘டி24 சுல்தான்’,‘ரெட் பிரான்’ போன்ற வகைகள் மக்கள் தேடி உண்ணும் வகைகள்.

இவற்றில் ‘முசாங் கிங்’ பழங்கள் சற்று கூடுதல் இனிப்பைக் கொண்டவை. அந்த வகைக்கு இணையாகக் கருதப்படும் ‘முசாங் குவீன்’ வகை, வெண்ணெய் போன்று இனிப்பும் கசப்பும் கலந்த தனித்துவமான சுவையில் இருக்கும். 

தற்போது சிங்கப்பூரில் டுரியான் விளைச்சல் உச்சமாக உள்ள பருவம். சுவையான பழங்கள் கிடைக்கும். டுரியான் விரும்பிகளுக்குச் சுவையான பழம் என்பதோடு, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றுகூடி மகிழும் ஓர் உள்ளூர்க் கலாசார உணவாகவும் பார்க்கப்படுகிறது.

டெக்கா என்று அழைக்கப்படும் ‘முசாங் குவீன்’ டுரியான்.
டெக்கா என்று அழைக்கப்படும் ‘முசாங் குவீன்’ டுரியான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

சில புகழ்பெற்ற வகைகள் கிலோ 30 வெள்ளிக்குமேல் விற்கப்பட்டாலும், அவற்றின் தனித்துவ சுவைக்காக மக்கள் அவற்றைத் தேடிச் சென்று வாங்குகின்றனர். தற்போது டுரியான் பல்வேறு புதுமையான சமையல் குறிப்புகளில் முக்கியச் சமையல் பொருளாகவும் சேர்க்கப்படுகிறது. 

டுரியான் பஃப், விதவிதமான கேக்குகள், பாரம்பரிய குல்ஃபி போன்றவை டுரியான் சுவையில் தயாரிக்கப்படுகின்றன. காரசாரமான டுரியான் மீன் குழம்பும் உணவுப் பிரியர்களை ஈர்த்து வருகிறது.

டுரியான் பஃப்.
டுரியான் பஃப். - படம் : Four Seasons Durians Pte Ltd.

மலேசியாவில் டுரியான் மீன் குழம்பு சாப்பிட்ட அனுபவத்தை ஆயிஷா பர்வீன், 36, பகிர்ந்துகொண்டார்.

“டுரியான் பழம் நன்கு மசிக்கப்பட்டு, அந்த விழுதில் சிறிது உப்பு சேர்க்கப்பட்டு, பயன்படுத்துவதற்கு முன்பு 1 வாரம் குளிர்பதனப் பெட்டியில் புளிக்கவைக்கப்படும்.

“டுரியான் மீன் குழம்பை வீட்டில் சமைத்தபோது, என் குடும்பத்தினர் அந்தக் குழம்பை விரும்பி உண்டனர். குழம்பு, தித்திப்பும் புளிப்பும் கலந்த தனித்துவமான சுவையைக் கொண்டிருந்தது,” என்று அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

டுரியானின் கடுமையான மணம் காரணமாகப் பொதுப் போக்குவரத்திலும் பிற பொது இடங்களிலும் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மக்களிடையே அதன் மீதான மோகம் குறையவில்லை. சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் டுரியான் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டி, அதனைச் சிங்கப்பூரின் ஓர் அடையாளமாக நிலைநிறுத்தியுள்ளன. 

குறிப்புச் சொற்கள்
உணவுடுரியான்சிங்கப்பூர்சமையல் கலை